5
அஸ்தோத்திலும் எக்ரோனிலும் பெட்டி
1 இறைவனின் பெட்டியைப் பெலிஸ்தியர் கைப்பற்றியபின் அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்துக்குக் கொண்டுபோனார்கள்.
2 அவர்கள் இறைவனின் பெட்டியை தாகோனின் கோவிலுக்கு எடுத்துச்சென்று தாகோனுக்கு அருகில் வைத்தார்கள்.
3 அஸ்தோத்திலுள்ள மக்கள் மறுநாள் அதிகாலை எழுந்தபோது, இதோ யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக தாகோன் முகங்குப்புற விழுந்துகிடக்கக் கண்டார்கள். எனவே அவர்கள் தாகோனை மறுபடியும் அதன் இடத்தில் தூக்கிவைத்தார்கள்.
4 மறுநாளும் அவர்கள் அதிகாலையில் எழுந்தபோது தாகோன் யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக முகங்குப்புற விழுந்துகிடக்கக் கண்டார்கள். அதன் தலையும், கைகளும் உடைந்து வாயிற்படியில் கிடந்தன. தாகோனின் உடல் மட்டும் மீதியாயிருந்தது.
5 அதனால்தான் இன்றுவரை தாகோனின் பூசாரிகளோ, அல்லது தாகோனின் கோவிலுக்கு வருபவர்களோ அஸ்தோத்திலிருக்கும் தாகோனின் வாசற்படியை மிதிப்பதில்லை.
6 அஸ்தோத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் இருந்த மக்களின்மேல் யெகோவாவின் கரம் மிகவும் பாரமாயிருந்தது. அவர் அவர்களைக் கட்டிகளினால் வாதித்தார்.
7 இவ்வாறு நடப்பதை அஸ்தோத்தின் மக்கள் கண்டபோது அவர்கள், “இஸ்ரயேலின் இறைவனின் பெட்டி எங்களுடன் இங்கே இருக்கக்கூடாது. ஏனெனில் அவருடைய கை நம்மேலும், நம்முடைய தெய்வமாகிய தாகோனின்மேலும் பாரமாய் இருக்கிறது” என்றார்கள்.
8 எனவே அவர்கள் பெலிஸ்தியரின் ஆளுநர்களை வரவழைத்து அவர்களிடம், “இஸ்ரயேலின் தெய்வத்தின் பெட்டியை என்ன செய்யலாம்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “இஸ்ரயேலின் தெய்வத்தின் பெட்டியை காத்துக்கு அனுப்பி வையுங்கள்” என்றார்கள். அப்படியே இஸ்ரயேலரின் இறைவனின் பெட்டி கொண்டுபோகப்பட்டது.
9 ஆனால் அவர்கள் பெட்டியைக் கொண்டுபோன பின்பு, யெகோவாவின் கரம் அப்பட்டணத்திலுள்ளவர்களுக்கு எதிராக வந்ததினால் அங்கு பெரும்பீதி உண்டானது. அவர் அப்பட்டணத்திலுள்ள இளவயதினர் முதல், முதியவர்கள்வரை கட்டியினால் வாதித்தார்.
10 இதனால் அவர்கள் இறைவனது பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்.
இறைவனது பெட்டி எக்ரோனுக்குள் போனபோது எக்ரோன் மக்கள் சத்தமிட்டு, “எங்களையும் எங்கள் மக்களையும் கொல்வதற்காகவே இஸ்ரயேலரின் தெய்வத்தின் பெட்டியை எங்களிடம் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்றார்கள்.
11 எனவே அவர்கள் பெலிஸ்தியரின் ஆளுநர்களை வரவழைத்து அவர்களிடம், “இஸ்ரயேல் தெய்வத்தின் பெட்டியை அனுப்பிவிடுங்கள். அது அதனுடைய இடத்திற்கே போகட்டும். இல்லையெனில் அது எங்களையும், எங்கள் மக்களையும் கொன்றுவிடும்” என்றார்கள். ஏனெனில் மரணம் அப்பட்டணத்தை பயத்தால் நிரப்பியிருந்தது. இறைவனின் தண்டனையின் கரம் அதன்மேல் பாரமாயிருந்தது.
12 பட்டணங்களில் சாகாமலிருந்தவர்கள் கட்டிகளினால் வாதிக்கப்பட்டார்கள். அவர்களின் கூக்குரல் வானம்வரை எட்டியது.