4
ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்
நமது முற்பிதா ஆபிரகாமைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இவ்விஷயத்தில் அவனுடைய அனுபவம் என்ன? உண்மையிலேயே ஆபிரகாம் தனது செயல்களின் பொருட்டு நீதிமான் ஆக்கப்பட்டிருந்தால், அவன் பெருமைபாராட்ட இடமுண்டு. ஆனால் இறைவனுக்கு முன்பாக அவன் பெருமைபாராட்ட இடமில்லை. வேதவசனம் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.”*
வேலை செய்கிறவனுக்குக் கொடுக்கப்படுகிற கூலி ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை; அது அவனுக்குக் கொடுக்கப்படவேண்டிய கூலி. ஆனால் ஒருவனுடைய செயல்கள் இல்லாமல், பாவிகளை நீதிமானாக்கும் இறைவனிடம் விசுவாசம் வைக்கிற மனிதனுக்கு, அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்படுகிறது. இதே விஷயத்தைத் தாவீதும் கூறுகின்றான். செயல்கள் ஏதும் செய்யாமலே இறைவனால் நீதிமான் எனக் கணக்கிடப்படும் மனிதனின் ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீது சொல்லும்போது,
“தங்கள் குற்றங்களுக்காக மன்னிப்புப் பெற்றவர்களாய்,
தங்கள் பாவங்கள் மூடப்பட்டவர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ஒருவனுடைய பாவத்தை ஒருபோதும் கர்த்தர் கணக்கில் வைத்திராவிட்டால்,
அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்”
என்கிறான்.
இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமா? இல்லையெனில் விருத்தசேதனம் பெறாதவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கிறோம். 10 அவன் எந்த சூழ்நிலையில் இருந்தபோது இது அவனுக்குக் கணக்கிடப்பட்டது? அவன் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு நடந்ததா? அல்லது பெற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்ததா? விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு அல்ல, அதற்குமுன்புதான் அது நடந்தது. 11 ஆபிரகாம் விருத்தசேதனம் பெறாமல் இருந்தபோதே, விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட நீதியின் சான்றாக, விருத்தசேதனத்தை ஒரு அடையாளமாகப் பின்பு பெற்றான். ஆகவே விருத்தசேதனம் பெறாதவர்களாயிருந்தும், விசுவாசிகளான எல்லோருக்கும் ஆபிரகாம் ஆவிக்குரிய தகப்பனாயிருக்கிறான். இதனால் அப்படியே அவர்களுடைய விசுவாசம் அவர்களுக்கும் நீதியாகக் கணக்கிடப்படுகிறது. 12 விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான். அவர்கள் விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொண்டபடியினால் அல்ல. ஆபிரகாம் தான் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளும் முன்னதாக அப்படியே விசுவாசத்தின் அடிச்சுவட்டிலே நடந்தான். நம்முடைய தந்தையாகிய ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசத்தினால் வரும் அடிச்சுவட்டில் நடக்கிறவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான்.
13 உலகத்தின் உரிமையாளனாயிருப்பான் என்ற வாக்குத்தத்தத்தை இறைவன் அவனுக்கும், அவன் சந்ததிகளுக்கும் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தம் மோசேயின் சட்டத்தினால் அல்ல, விசுவாசத்தினால் வரும் நீதியினால் கொடுக்கப்பட்டது. 14 ஏனெனில், மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் அதற்கு உரிமையாளர்களானால் விசுவாசம் உபயோகமற்றதாகிறது. வாக்குத்தத்தமும் அர்த்தமற்றதாகிறது. 15 ஆனால் மோசேயின் சட்டம் இறைவனின் கோபத்தையே கொண்டுவருகிறது. ஆனால் மோசேயின் சட்டம் இல்லாத இடத்தில், மீறுதலும் இல்லை.
16 ஆதலால் வாக்குத்தத்தம் விசுவாசத்தினால் வருகிறது. இதனால் இந்த வாக்குத்தத்தம் இலவசமான கிருபையினால், ஆபிரகாமின் சந்ததிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்ற உறுதியையும் காட்டுகிறது. மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல, ஆபிரகாமின் விசுவாசம் விசுவாசிக்கிறவர்களுக்கும் அது கொடுக்கப்படுகிறது. ஆபிரகாம் நம் எல்லோருக்கும் தந்தையாயிருக்கிறார். 17 “அநேக நாடுகளுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்” என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனத்தின்படியே ஆபிரகாம் தான் விசுவாசித்த இறைவனின் பார்வையில், நம்முடைய தந்தையாய் இருக்கிறான். இறைவனே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவர்; முன்பில்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிறார் என்று ஆபிரகாம் விசுவாசித்தான்.
18 “உனது சந்ததிகள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாயிருக்கும்” என்று இறைவன் ஆபிரகாமுக்குக் கூறியபோது யாரும் நம்புகிறதற்கு கூடாதிருந்தும் ஆபிரகாம் எதிர்பார்ப்புடன் விசுவாசித்தான். அதனால் ஆபிரகாம் அநேக நாடுகளுக்கு தந்தையானான்.§ 19 அவன் ஏறத்தாழ நூறு வயதுள்ளவனாயிருந்தான். இதனால் அவனுடைய உடல் சக்தியற்றுப் போயிருந்தது. சாராளுடைய கருப்பையும் கருத்தரிக்கும் சக்தியை இழந்திருந்தது. இதை அவன் நன்றாய் அறிந்திருந்தும், அவனுடைய விசுவாசம் தளரவில்லை. 20 இறைவனுடைய வாக்குறுதியைக்குறித்து அவிசுவாசத்தினால் அவன் தடுமாற்றம் அடையவில்லை. ஆனால் அவன் தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தினான். 21 தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனுக்கு வல்லமை உண்டு என்பதை அவன் முழு நிச்சயமாய் நம்பினான். 22 இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. 23 அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பது அவனுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன்மேல் விசுவாசம் வைக்கும் நமக்கும் நம்முடைய விசுவாசத்தை நீதியாகக் கணக்கிடுவார் என்றே அது எழுதப்பட்டுள்ளது. 25 இறைவன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, நம்மை நீதிமான்கள் ஆக்குவதற்காக உயிரோடு எழுப்பினார்.
* 4:3 4:3 ஆதி. 15:6; 22 4:8 4:8 சங். 32:1,2 4:17 4:17 ஆதி. 17:5 § 4:18 4:18 ஆதி. 15:5