சங்கீதம் 94
அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனாகிய யெகோவாவே,
அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனே, பிரகாசியும்.
பூமியின் நீதிபதியே, எழுந்தருளும்;
பெருமை உள்ளவர்களுக்குத் தக்கபடி பதிலளியும்.
எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, கொடியவர்கள்,
எவ்வளவு காலத்திற்கு கொடியவர்கள் களிகூர்ந்திருப்பார்கள்?
 
அவர்கள் அகங்காரமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்;
தீமை செய்வோர் யாவரும் பெருமை நிறைந்து பேசுகிறார்கள்.
யெகோவாவே, அவர்கள் உமது மக்களை தாக்குகிறார்கள்;
உமது உரிமைச்சொத்தை ஒடுக்குகிறார்கள்.
விதவைகளையும் வேறுநாட்டைச் சேர்ந்தவரையும் அவர்கள் அழிக்கிறார்கள்;
அவர்கள் தந்தையற்றவர்களைக் கொலைசெய்கிறார்கள்.
“யெகோவா இவற்றைக் காண்பதில்லை,
யாக்கோபின் இறைவன் இவற்றைக் கவனிப்பதில்லை” என்று சொல்கிறார்கள்.
 
மக்கள் மத்தியில் அறிவற்றவர்களாய் இருப்பவர்களே, கவனமாயிருங்கள்;
மூடரே, நீங்கள் எப்பொழுது அறிவு பெறுவீர்கள்?
காதைப் படைத்தவர் கேட்கமாட்டாரோ?
கண்ணை உருவாக்கியவர் பார்க்கமாட்டாரோ?
10 மக்களைத் தண்டிக்கிறவர் உங்களையும் தண்டிக்கமாட்டாரோ?
மனிதருக்குப் போதிக்கிறவர் அறிவில் குறைந்தவரோ?
11 மனிதரின் சிந்தனைகளை யெகோவா அறிந்திருக்கிறார்;
அவை பயனற்றவை என்பதையும் அவர் அறிவார்.
 
12 யெகோவாவே, நீர் தண்டித்து,
உமது சட்டத்திலிருந்து போதிக்கிற நபர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
13 கொடியவர்களுக்கோ குழிவெட்டப்படும் வரை
கஷ்ட நாட்களிலிருந்து அவர்களுக்கு நீர் விடுதலை வழங்குகிறீர்.
14 ஏனெனில் யெகோவா தமது மக்களைப் புறக்கணிக்கமாட்டார்;
தமது உரிமைச்சொத்தை ஒருபோதும் கைவிடமாட்டார்.
15 நீதியின்மேல் நியாயத்தீர்ப்பு திரும்பவும் கட்டப்படும்;
அதை இருதயத்தில் நேர்மையுள்ளோர் அனைவரும் பின்பற்றுவார்கள்.
 
16 எனக்காக கொடியவனுக்கு விரோதமாய் எழும்புகிறவன் யார்?
தீமை செய்வோருக்கு எதிராய் எனக்குத் துணைநிற்பவன் யார்?
17 யெகோவா எனக்கு உதவி செய்திருக்காவிட்டால்,
நான் சீக்கிரமாய் மரணத்தின் மவுனத்தில் குடிகொண்டிருந்திருப்பேன்.
18 “என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது,
யெகோவாவே உமது உடன்படிக்கையின் அன்பே என்னைத் தாங்கியது.
19 கவலை எனக்குள் பெரிதாய் இருக்கையில்,
உமது ஆறுதல் என் ஆத்துமாவுக்கு மகிழ்வைத் தந்தது.
 
20 தான் பிறப்பிக்கும் விதிமுறைகளினாலேயே துன்பத்தைக் கொண்டுவரும்,
ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள் உமக்கு கூட்டாளிகளாயிருக்க முடியுமோ?
21 அந்தக் கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி,
குற்றமற்றவர்களுக்கு மரணத்தீர்ப்பு அளிக்கிறார்கள்.
22 ஆனால் யெகோவாவோ என் கோட்டையும்,
நான் தஞ்சமடையும் கன்மலையான என் இறைவனுமானார்.
23 அவர் அவர்களுடைய பாவங்களுக்காகப் பதில்செய்து,
அவர்கள் கொடுமைகளினிமித்தம் அவர்களை தண்டிப்பார்;
எங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை தண்டிப்பார்.