சங்கீதம் 82
ஆசாபின் சங்கீதம்.
மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்;
“கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்:
 
“நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி,
கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?
பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்;
ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்;
அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள்.
 
“அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்;
அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்;
பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன.
 
“ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்;
நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன்.
ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்;
மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.”
 
இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்;
ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே.