பேதுரு எழுதின இரண்டாம் கடிதம்
1
இயேசுகிறிஸ்துவின் வேலைக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு,
 
நம்முடைய இறைவனும் இரட்சகருமான இயேசுகிறிஸ்து ஏற்படுத்திய நீதியின் மூலமாய், எங்களுடைய விசுவாசத்தைப் போன்ற உயர்மதிப்புடைய விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
 
இறைவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிவதன் மூலமாய் கிருபையும் சமாதானமும் நிறைவாய் உங்களுடன் இருப்பதாக.
 
இறைவனுடைய அழைப்பின் நிச்சயம்
நம்முடைய வாழ்க்கைக்கும் இறை பக்திக்கும் தேவையான எல்லாவற்றையும், அவருடைய இறைவல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. அவரைப்பற்றி எங்களுக்கு இருக்கும் அறிவின் மூலமாய் நமக்கு இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவரே தமது மகிமையினாலும் நன்மையினாலும் நம்மை அழைத்திருக்கிறார். இவற்றின் மூலமாகவே இறைவனுடைய பெரிதான, உயர்மதிப்புடைய வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குத்தத்தங்களின் மூலமாய், அந்த இறை இயல்பில் நீங்களும் பங்குகொள்ளலாம், தீய ஆசைகளினால் உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டிலிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.
இந்த காரணத்தினால் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பை வளர்த்துக்கொள்ள எல்லா முயற்சியையும் செய்யுங்கள்; நற்பண்புடன் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்; அறிவுடன் சுயக்கட்டுப்பாட்டையும்; சுயக்கட்டுப்பாடுடன் விடாமுயற்சியையும்; விடாமுயற்சியுடன் இறை பக்தியையும்; இறை பக்தியுடன் சகோதர பாசத்தையும்; சகோதர பாசத்துடன் அன்பையும் கூட்டிச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இப்பண்புகள் உங்களில் வளர்ந்து பெருகும்போது, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி உங்களிடமிருக்கும் அறிவில் நீங்கள் பயனற்றவர்களாகவோ, பலன் கொடுக்காதவர்களாகவோ இருக்காதபடி, இவை உங்களைத் தடுத்துக்கொள்ளும். ஆனால் யாராவது இந்தப் பண்புகள் அற்றவனாயிருந்தால், அவன் தூரப்பார்வையற்றவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்; தனது முந்திய பாவங்களிலிருந்து, தான் சுத்திகரிக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான்.
10 ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள அதிக ஆர்வம் உள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் இவற்றை செய்வீர்களானால், ஒருபோதும் விழுந்துபோகமாட்டீர்கள். 11 நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள்.
வேதவசனத்தின் இறைவாக்கு
12 நான் இவற்றை உங்களுக்கு எப்பொழுதும் நினைப்பூட்டிக்கொண்டே இருப்பேன்; நீங்கள் இவற்றை அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது சத்தியத்தில் உறுதிப்படுத்தப்பட்டும் இருக்கிறீர்கள். ஆனால் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். 13 இந்த உடலாகிய கூடாரத்தில் நான் வாழும் வரைக்கும், இவ்விதமாய் உங்கள் ஞாபகத்தைப் புதுப்பிப்பது சரியென்றே நான் எண்ணுகிறேன். 14 ஏனெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, சீக்கிரமாய் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் பிரிந்துவிடுவேன் என்று அறிந்திருக்கிறேன். 15 ஆகவே நான் இறந்துபோன பின்பும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கதாய், என்னால் இயன்ற எல்லாவற்றையும் இப்பொழுது நான் செய்வேன்.
16 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையையும் அவருடைய வருகையையும் நாங்கள் உங்களுக்குச் சொன்னபோது, தந்திரமான கட்டுக்கதைகளை நாங்கள் கைக்கொள்ளவில்லை. நாங்களோ அவருடைய மகத்துவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாயிருக்கிறோம். 17 “இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்”* என்று சொல்லுகிற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொண்டார். 18 அந்த புனிதமான மலையின்மேல் நாங்கள் அவருடன் இருந்தபோது, பரலோகத்திலிருந்து வந்த அந்தக் குரலை நாங்களும் கேட்டோம்.
19 இவற்றையும்விட வெகு நிச்சயமான இறைவாக்கினர்களின் வார்த்தைகளையும் நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். பொழுது புலர்ந்து, உங்கள் இருதயங்களில் கிறிஸ்து விடிவெள்ளிபோல் உதிக்குமளவும், இருளான இடத்தில் ஒளிவீசும் வெளிச்சம்போன்ற அந்த இறைவார்த்தைக்குக் கவனம் செலுத்தினால், நீங்கள் நலன்பெறுவீர்கள். 20 எல்லாவற்றிற்கும் மேலாக, வேதவசனத்திலுள்ள எந்த இறைவாக்கும் இறைவாக்கினனுடைய சொந்த விளக்கத்தினால் உண்டானது அல்ல, இதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். 21 ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதர்களின் சித்தப்படி உண்டானது அல்ல, இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரினால் ஏவப்பட்டு, இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டதையே மனிதர் பேசினார்கள்.
* 1:17 1:17 மத். 17:5; மாற். 9:7; லூக். 9:35