9
பஸ்கா பண்டிகை
1 இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதத்தில், யெகோவா சீனாய் பாலைவனத்தில் மோசேயுடன் பேசினார். அவர் அவனிடம்,
2 “இஸ்ரயேலர் நியமிக்கப்பட்ட காலத்தில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடும்படி செய்யவேண்டும்.
3 நியமிக்கப்பட்ட காலமான இம்மாதம் பதினாலாம்தேதி பொழுதுபடும் நேரத்தில், அப்பண்டிகைக்குரிய எல்லா சட்டங்களின்படியும், ஒழுங்கு முறைப்படியும் அதைக் கொண்டாடுங்கள் என்று சொல்” என்றார்.
4 அப்படியே மோசே, பஸ்கா பண்டிகையைக் கொண்டாடும்படி இஸ்ரயேலரிடம் சொன்னான்.
5 அவ்வாறே அவர்கள், முதலாம் மாதம் பதினாலாம்தேதி பொழுதுபடும் நேரத்தில், சீனாய் பாலைவனத்தில் பஸ்காவைக் கொண்டாடினார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் இஸ்ரயேலர் செய்தார்கள்.
6 ஆனால் அந்த நாளில் சிலர் பிரேதத்தைத் தொட்டதினால், சம்பிரதாய முறைப்படி அசுத்தமாக இருந்தார்கள். எனவே அவர்களால் அந்த நாளில் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. அவர்கள் அன்றைய தினமே மோசேயிடமும், ஆரோனிடமும் வந்தார்கள்.
7 அவர்கள் மோசேயிடம், “ஒரு பிரேதத்தைத் தொட்டதினால் நாங்கள் அசுத்தமாகிவிட்டோம். மற்ற இஸ்ரயேலரோடு குறிப்பிட்ட காலத்தில் யெகோவாவுக்குக் காணிக்கையைக் கொடுப்பதிலிருந்து நாங்கள் விலக்கி வைக்கப்பட்டிருப்பதால் என்ன செய்யவேண்டும்?” எனக் கேட்டார்கள்.
8 அதற்கு மோசே, “உங்களைப்பற்றி யெகோவா என்ன கட்டளை கொடுக்கிறார் என நான் அவரிடமிருந்து அறிந்து வரும்வரை பொறுத்திருங்கள்” என்றான்.
9 அப்பொழுது யெகோவா மோசேயிடம்,
10 “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘உங்களிலோ அல்லது உங்கள் சந்ததியிலோ, யாராவது பிரேதத்தைத் தொட்டு அசுத்தமாயிருந்தாலும் அல்லது பயணம் போயிருந்தாலும், அவர்கள் யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாடலாம்.
11 அவர்கள் இரண்டாம் மாதம் பதினாலாம்தேதி பொழுதுபடும் வேளையிலேயே, பஸ்காவைக் கொண்டாடவேண்டும். அவர்கள் புளிப்பில்லாத அப்பத்துடனும், கசப்புள்ள கீரையுடனும் பஸ்கா செம்மறியாட்டுக் குட்டியைச் சாப்பிடவேண்டும்.
12 காலைவரை அதில் எதையும் மீதியாக வைக்கக்கூடாது; அதன் எலும்புகளை முறிக்கவும் கூடாது. அவர்களும் பஸ்காவைக் கொண்டாடும்போது, இந்த எல்லா விதிமுறைகளையும் கைக்கொள்ளவேண்டும்.
13 ஆனால் ஒரு மனிதன் சம்பிரதாய முறைப்படி சுத்தமாகவும், பயணம் போகாமலும் இருந்து, பஸ்காவைக் கொண்டாடத் தவறினால், அம்மனிதன் தன் மக்கள் மத்தியில் இருந்து அகற்றப்படவேண்டும். ஏனெனில், அவன் நியமிக்கப்பட்ட காலத்தில் யெகோவாவுக்குக் காணிக்கையைக் கொண்டுவரவில்லை. எனவே அவன் தன் பாவத்தினால் வந்த விளைவைத் தானே சுமக்கவேண்டும்.
14 “ ‘அத்துடன் உங்கள் மத்தியில் வாழும் அந்நியன் ஒருவன், யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாட விரும்பினால், அவன் சட்டங்களின்படியும், விதிமுறைகளின்படியும் அதைக் கொண்டாடவேண்டும். தன் நாட்டினனுக்கும், பிறநாட்டினனுக்கும் ஒரேவிதமான விதிமுறைகளையே நீங்கள் வைத்திருக்கவேண்டும்’ ” என்றார்.
இறைசமுகக் கூடாரத்தின் மேலாக மேகம்
15 சாட்சிபகரும் கூடாரமான இறைசமுகக் கூடாரம் அமைக்கப்பட்ட நாளிலே மேகம் அதை மூடியது. மாலையிலிருந்து காலைவரை இரவு முழுவதும் அம்மேகம் இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாக நெருப்பைப்போல் காணப்பட்டது.
16 அப்படியே அது தொடர்ந்து இருந்ததால் மேகத்தால் மூடப்பட்டு இரவில் நெருப்பைப்போல் காணப்பட்டது.
17 அந்த மேகம் கூடாரத்தின் மேலிருந்து எழும்பும் போதெல்லாம், இஸ்ரயேலர் புறப்பட்டார்கள். மேகம் எங்கெல்லாம் நின்றதோ, அங்கெல்லாம் இஸ்ரயேலர் முகாமிட்டார்கள்.
18 இவ்வாறு இஸ்ரயேலர் யெகோவாவின் கட்டளையின்படியே புறப்பட்டு, அவருடைய கட்டளையின்படியே முகாமை அமைத்தார்கள். மேகம் இறைசமுகக் கூடாரத்தின் மேலாக இருக்கும்வரை அவர்களும் முகாமில் தங்கியிருந்தார்கள்.
19 மேகம் இறைசமுகக் கூடாரத்தின்மேல் நீண்டகாலம் தங்கியிருந்தால், இஸ்ரயேலர் யெகோவாவினுடைய உத்தரவுக்காகக் கீழ்ப்படிந்து புறப்படாதிருந்தார்கள்.
20 ஆனால் சிலவேளைகளில் அந்த மேகம் இறைசமுகக் கூடாரத்தின் மேலாக ஒருசில நாட்கள் மட்டுமே இருந்தது. யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் முகாமிட்டு, பின்பு அவருடைய கட்டளைப்படியே புறப்படுவார்கள்.
21 சிலவேளைகளில் அந்த மேகம் மாலையிலிருந்து காலைவரை மட்டுமே தங்கியிருந்தது. அது காலையில் மேலே எழுந்தபோது, அவர்கள் புறப்பட்டார்கள். பகலானாலும், இரவானாலும் அந்த மேகம் மேலெழுந்தபோதெல்லாம் அவர்கள் புறப்பட்டார்கள்.
22 அந்த மேகம் இரண்டு நாட்களுக்கோ, ஒரு மாதத்திற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாகத் தங்கியிருந்தால், இஸ்ரயேலரும் முகாமில் தங்கியிருப்பார்கள்; புறப்படாதிருப்பார்கள். ஆனால் அது மேலே எழும்பும்போதோ அவர்கள் புறப்படுவார்கள்.
23 யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் முகாமிட்டார்கள், யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் புறப்பட்டார்கள். யெகோவா மோசேயின் வழியாகக் கொடுத்த கட்டளைப்படியே அவர்கள் அவருடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.