21
ஆராத் அழிக்கப்படுதல்
தெற்கு பகுதியில் வாழ்ந்த கானானியனான ஆராத் பட்டணத்து அரசன், இஸ்ரயேலர் அத்தரீமுக்குப் போகிறவழியாய் வருகிறதைக் கேள்விப்பட்டான். உடனே அவன் இஸ்ரயேலரைத் தாக்கி சிலரைச் சிறைப்பிடித்தான். அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம்: “நீர் இந்த மக்களை விடுவித்து எங்கள் கையில் கொடுத்தால், நாங்கள் அவர்கள் பட்டணத்தை முழுவதும் அழித்துப்போடுவோம்” என்று நேர்த்திக்கடன் செய்தார்கள். யெகோவா இஸ்ரயேலரின் வேண்டுதலுக்குச் செவிகொடுத்து, கானானியரை அவர்களிடம் ஒப்படைத்தார். அப்பொழுது இஸ்ரயேலர் அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முழுவதும் அழித்தார்கள். அதனால் அவ்விடம், ஓர்மா* என்று அழைக்கப்பட்டது.
வெண்கலப் பாம்பு
அவர்கள் ஓர் என்னும் மலையிலிருந்து செங்கடலுக்குப் போகும் வழியாக ஏதோமைச் சுற்றிப்போகும்படி பயணம் செய்தார்கள். ஆனால் மக்களோ வழியில் பொறுமையை இழந்தார்கள். அவர்கள் இறைவனுக்கும், மோசேக்கும் விரோதமாகப் பேசி, “பாலைவனத்தில் செத்துப்போகும்படி எங்களை எகிப்திலிருந்து வெளியே ஏன் கொண்டுவந்தீர்கள்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை. இந்த கேவலமான உணவை நாங்கள் அருவருக்கிறோம்” என்றார்கள்.
அப்பொழுது யெகோவா அவர்களுக்குள்ளே விஷப்பாம்புகளை அனுப்பினார். அவை மக்களைக் கடித்ததினால் இஸ்ரயேலரில் பலர் இறந்தார்கள். எனவே மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் யெகோவாவுக்கும், உமக்கும் விரோதமாய்ப் பேசியதனால் பாவம்செய்தோம். இந்தப் பாம்புகளை எங்களைவிட்டு அகற்றும்படி யெகோவாவிடம் மன்றாடும்” என்றார்கள். அப்பொழுது மோசே மக்களுக்காக மன்றாடினான்.
யெகோவா மோசேயிடம், “நீ ஒரு பாம்பைச் செய்து, ஒரு கம்பத்தின்மேல் வைத்து உயர்த்திவை. கடிக்கப்பட்டவன் எவனும் அதைப்பார்த்தால் பிழைப்பான்” என்றார். அவ்வாறே மோசே வெண்கலத்தினால் ஒரு பாம்பைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் உயர்த்திவைத்தான். பாம்பினால் கடிக்கப்பட்ட எவனும் வெண்கலப்பாம்பை நோக்கிப் பார்த்தபோது பிழைத்தான்.
மோவாபிற்குச் செல்லுதல்
10 இஸ்ரயேலர் தொடர்ந்து பயணம்பண்ணி ஒபோத்தில் முகாமிட்டார்கள். 11 பின் ஒபோத்திலிருந்து புறப்பட்டு, சூரிய உதயதிசையில் மோவாபிற்கு எதிர்ப்புறமாயுள்ள பாலைவனத்தில் அபாரீம் மேடுகளில் முகாமிட்டார்கள். 12 அங்கேயிருந்து அவர்கள் புறப்பட்டு சாரேத் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள். 13 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு பாலைவனத்தில் உள்ளதும், எமோரியரின் பிரதேசத்துக்குள் நீண்டு செல்கிறதுமான அர்னோன் ஆற்றின் அருகே முகாமிட்டார்கள். மோவாபுக்கும், எமோரியருக்கும் இடையில் மோவாபின் எல்லையாக அர்னோன் ஆறு ஓடுகிறது. 14 அதனால்தான் யெகோவாவினுடைய யுத்தங்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதாவது:
“சூப்பாவிலுள்ள வாகேபும்
அர்னோனின் பள்ளத்தாக்கும் 15 ஆர் என்னும் பட்டணம்வரை சென்று
மோவாபின் எல்லை ஓரமாக
சாய்ந்திருக்கும் பள்ளத்தாக்கின் மலைச்சரிவும்.”
16 அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பேயேருக்குப் போனார்கள். “மக்களைக் கூடிவரச்செய்; அவர்களுக்கு நான் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன கிணறு அங்குதான் இருந்தது.
17 அப்பொழுது இஸ்ரயேலர் பாடிய பாடலாவது:
“கிணற்றுத் தண்ணீரே, பொங்கி வா!
அதைக் குறித்துப் பாடுங்கள்.
18 பிரபுக்கள் வெட்டிய கிணற்றைக் குறித்தும்,
மக்களில் உயர்குடிப்பிறந்தோர் செங்கோல்களினாலும்,
கோல்களினாலும் தோண்டிய கிணற்றைக்குறித்துப் பாடுங்கள்.”
அதன்பின் அவர்கள் பாலைவனத்திலிருந்து மத்தானாவுக்குப் போனார்கள். 19 மத்தானாவிலிருந்து, நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும், 20 பாமோத்திலிருந்து மோவாபின் பள்ளத்தாக்கிற்கும் போனார்கள். அங்கே பாழ் நிலத்திற்கு எதிர்த்தாற்போல், பிஸ்காவின் உச்சி இருந்தது.
சீகோன் மற்றும் ஆர் ஆகியோரின் தோல்வி
21 பின்பு இஸ்ரயேலர் எமோரியரின் அரசன் சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி,
22 “உங்களுடைய நாட்டை கடந்துசெல்ல எங்களை அனுமதியுங்கள். நாங்கள் எந்த வயல் வழியாகவோ, திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம்; எந்தவொரு கிணற்றிலிருந்தும் தண்ணீர்கூட குடிக்கமாட்டோம். நாங்கள் நாட்டைக் கடக்கும்வரைக்கும் அரசபாதையின் வழியாகவே செல்வோம்” என்று சொல்லச் சொன்னார்கள்.
23 ஆனால் சீகோன் தன் பிரதேசத்தின் வழியாக இஸ்ரயேலரைப் போகவிடாதிருந்தான். அவன் தன் முழு படையையும் திரட்டிக்கொண்டு இஸ்ரயேலருக்கு விரோதமாகப் பாலைவனத்திற்கு அணிவகுத்துச் சென்றான். அவன் யாகாசை அடைந்தபோது இஸ்ரயேலருடன் சண்டையிட்டான். 24 ஆனால் இஸ்ரயேலரோ அவனை வாளுக்கு இரையாக்கி அர்னோன் முதல் யாப்போக்கு வரையுள்ள அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக்கொண்டார்கள். ஆனால் அம்மோனியரின் எல்லைவரை மட்டுமே கைப்பற்றினார்கள். ஏனெனில் அவர்களுடைய எல்லை அரண் செய்யப்பட்டு இருந்தது. 25 இஸ்ரயேலர் எமோரியரின் எல்லா பட்டணங்களையும் கைப்பற்றி அவற்றில் குடியேறினார்கள். எஸ்போனும், அதைச் சுற்றியுள்ள எல்லா குடியிருப்புகளும் இவற்றுள் அடங்கும். 26 எஸ்போன் எமோரிய அரசன் சீகோனின் பட்டணமாயிருந்தது. அவன் முன்னிருந்த மோவாபின் அரசனுடன் சண்டையிட்டு அர்னோன் வரையிலிருந்த அவனுடைய நாட்டை அவனிடமிருந்து எடுத்திருந்தான்.
27 அதினாலே அவர்களுடைய கவிஞர்கள்:
“எஸ்போனுக்கு வாருங்கள், அது திரும்பவும் கட்டப்படட்டும்;
சீகோன் பட்டணம் புதுப்பிக்கப்படட்டும்.
 
28 “எஸ்போனில் இருந்து நெருப்பு வெளியேறிற்று,
சீகோன் பட்டணத்திலிருந்து சுவாலை வெளியேறிற்று.
அது மோவாபின் ஆர் பட்டணத்தை எரித்தது
அர்னோன் மேடுகளின் குடிகளையும் எரித்துப்போட்டது.
29 மோவாபியரே உங்களுக்கு ஐயோ கேடு!
கேமோஷின் மக்களே நீங்கள் அழிந்தீர்கள்!
அவன் தன் மகன்களை அகதிகளாகவும்,
தன் மகள்களை சிறைக்கைதிகளாகவும்
எமோரிய அரசன் சீகோனிடம் ஒப்புக்கொடுத்தான்.
 
30 “ஆனால், நாங்களோ அவர்களைத் தள்ளி வீழ்த்தினோம்;
தீபோன்வரை எஸ்போன் அழிந்தது.
மேதேபாவரை பரந்திருக்கும் நோப்பா பகுதிவரையும்
அவர்களை அழித்தோம் என்று பாடுகிறார்கள்.”
31 இப்படியாக இஸ்ரயேலர் எமோரியரின் நாட்டில் குடியேறினார்கள்.
32 மோசே யாசேருக்கு உளவாளிகளை அனுப்பியபின், இஸ்ரயேலர் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த எமோரியரை வெளியே துரத்திவிட்டார்கள். 33 பின்பு இஸ்ரயேலர் திரும்பி பாசானுக்குப்போகும் வழியாய்ப் போனார்கள். அப்பொழுது பாசானின் அரசன் ஓக் என்பவன் இஸ்ரயேலரை எதிர்த்து யுத்தம் செய்ய தனது முழு படையுடன் எத்ரேயுக்குப் போனான்.
34 ஆனால் யெகோவா மோசேயிடம், “நீ அவனுக்குப் பயப்படவேண்டாம். அவனையும் அவனுடைய முழு படையையும், அவனுடைய நாட்டையும் நான் உன் கையில் ஒப்புவித்தேன். நீ எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோல இவனுக்கும் செய்” என்றார்.
35 அப்படியே இஸ்ரயேலர் அவனையும், அவன் மகன்களையும், அவனுடைய முழு படையையும் வெட்டி வீழ்த்தினார்கள். ஒருவரையும் தப்பிப்போக விடவில்லை. அவர்கள் அவனுடைய நாட்டைத் தங்கள் உடைமையாக்கிக்கொண்டார்கள்.
* 21:3 ஓர்மா என்றால் அழிவு என்று அர்த்தம்.