20
திராட்சைத் தோட்ட வேலையாட்கள்
1 “பரலோக அரசு நிலத்தின் சொந்தக்காரன் ஒருவன் தனது திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்வதற்கென அதிகாலையிலே புறப்பட்டுபோய், கூலியாட்களை கூலிக்கு அமர்த்தியவனுக்கு ஒப்பாயிருக்கிறது.
2 அவன் அவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசைக் கொடுப்பதற்கு உடன்பட்டு, அவர்களைத் திராட்சைத் தோட்டத்திற்குள் அனுப்பினான்.
3 “விடிந்த பின்பு கிட்டத்தட்ட காலை ஒன்பது மணியளவில் அவன் வெளியே போனபோது, வேறுசிலர் சந்தைகூடும் இடத்தில் வேலை எதுவும் செய்யாமல் நிற்பதைக் கண்டான்.
4 அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்யுங்கள். நியாயமான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றான்.
5 அப்படியே அவர்களும் சென்றார்கள்.
“அவன் மீண்டும் நண்பகல் வேளையிலும், பிற்பகல் மூன்றுமணிக்கும், வெளியே போனபோது, இன்னும் சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டு முன்புபோலவே செய்தான்.
6 கிட்டத்தட்ட மாலை ஐந்து மணிக்கு அவன் வெளியே போய், இன்னும் சிலர் ஒரு வேலையின்றி நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம், ‘நாள் முழுவதுமாக ஒரு வேலையும் செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.
7 “அதற்கு அவர்கள், ‘ஒருவரும் எங்களை வேலைக்கு அழைக்கவில்லை’ என்றார்கள்.
“அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்யுங்கள்’ என்றான்.
8 “மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்தபோது, திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் தனது மேற்பார்வையாளனிடம், ‘வேலையாட்களைக் கூப்பிட்டு, அவர்களுடைய நாள் கூலியைக் கொடு. கடைசியில் வேலைக்கு வந்தவர்கள் தொடங்கி, முதலில் வந்தவர்கள் வரை அவர்களுக்குக் கூலி கொடு’ என்றான்.
9 “மாலை ஐந்து மணிக்குப்பின் கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்கள் வந்து, ஒவ்வொருவரும் ஒரு முழு நாளுக்குரிய வெள்ளிக்காசைப் பெற்றார்கள்.
10 எனவே முதலாவதாக கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வந்தபோது, அதிகமான கூலியை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெள்ளிக்காசையே நாள் கூலியாகப் பெற்றார்கள்.
11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரனுக்கு எதிராய் முறுமுறுக்கத் தொடங்கினார்கள்.
12 அவர்கள் அவனிடம், ‘கடைசியாய் கூலிக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், ஒருமணி நேரம் மட்டுமே வேலைசெய்தார்கள், நாங்களோ வேலையின் கஷ்டத்தையும் பகலின் வெப்பத்தையும் சகித்தோம்; நீர் அவர்களையும் எங்களுக்குச் சமமாக்கினீரே’ என்றார்கள்.
13 “நிலத்தின் சொந்தக்காரன் அவர்களில் ஒருவனைப் பார்த்து, ‘நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லையே. ஒரு வெள்ளிக்காசுக்கு வேலைசெய்ய நீ ஒத்துக்கொள்ளவில்லையா?
14 உனது கூலியைப் பெற்றுக்கொண்டு போ. கடைசி நேரத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்டவனுக்கும், உனக்குக் கொடுத்ததுபோலவே நான் கொடுக்க விரும்புகிறேன்.
15 எனது சொந்தப் பணத்தை நான் விரும்பியபடி செலவு செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் தாராள குணமுள்ளவனாய் இருக்கிறேன் என்பதால் நீ எரிச்சல் அடையலாமா?’ என்றான்.
16 “அப்படியே கடைசியாக இருக்கும் பலர் முதலாவதாகவும், முதலாவதாக இருக்கும் பலர் கடைசியாகவும் இருப்பார்கள்” என்றார்.
இயேசு தமது மரணத்தை மூன்றாம்முறை முன்னறிவித்தல்
17 இயேசு எருசலேமை நோக்கிப் போகையில், அவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், அவர்களுக்குச் சொன்னதாவது:
18 “இதோ, நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே மானிடமகனாகிய நான், தலைமை ஆசாரியரிடத்திலும் மோசேயின் சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் என்னை மரண தண்டனைக்கு உட்படுத்துவார்கள்.
19 என்னை ஏளனம் செய்து சவுக்கால் அடித்துச் சிலுவையில் அறையும்படி, யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆகிலும் நான் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பேன்!”
ஒரு தாயின் வேண்டுகோள்
20 அப்பொழுது செபெதேயுவின் பிள்ளைகளின் தாய் தனது மகன்களைக் கூட்டிக்கொண்டு இயேசுவிடம் வந்தாள். அவள் முழங்காற்படியிட்டு, அவரிடம் ஒரு உதவியைக் கேட்டாள்.
21 “நீ விரும்புவது என்ன?” என்று அவர் அவளிடம் கேட்டார்.
அதற்கு அவள், “உமது அரசில் எனது இரு மகன்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதிக்கவேண்டும்” என்றாள்.
22 இயேசு அவர்களிடம், “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கப்போகும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள்.
23 அப்பொழுது இயேசு அவர்களிடம், “உண்மையாகவே எனது பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் எனது வலதுபக்கத்தில் உட்காருவதையோ, இடதுபக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் என் பிதாவினால் யாருக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார்.
24 இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், அந்த இரண்டு சகோதரர்கள் மேலும் கோபமடைந்தார்கள்.
25 இயேசு அவர்களை ஒன்றாகக் கிட்ட அழைத்து, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களின் உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
26 ஆனால் நீங்களோ அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்குப் பணிவிடை செய்கிறவனாக இருக்கவேண்டும்.
27 முதன்மையாயிருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும்.
28 மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும் பொருட்டாக என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார்.
பார்வையற்றோர் இருவர் பார்வை பெறுதல்
29 இயேசுவும் அவருடைய சீடர்களும் எரிகோவை விட்டுப் புறப்படுகையில், மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
30 அந்த வீதியின் அருகே பார்வையற்றோர் இருவர் உட்கார்ந்திருந்தார்கள். இயேசு அந்த வழியாய் போகிறார் என்று அவர்கள் கேள்விப்பட்டபோது, “ஆண்டவரே, தாவீதின் மகனே எங்கள்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமிட்டார்கள்.
31 மக்கள் கூட்டமோ அவர்களை அதட்டி அமைதியாய் இருக்கும்படிச் சொன்னார்கள். ஆனால் பார்வையற்றோர், “ஆண்டவரே, தாவீதின் மகனே எங்கள்மேல் இரக்கமாயிரும்” என்று இன்னும் அதிகமாய்ச் சத்தமிட்டார்கள்.
32 இயேசு நின்று அவர்களைக் கூப்பிட்டார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
33 அதற்கு அவர்கள், “ஆண்டவரே, நாங்கள் பார்வை பெறவிரும்புகிறோம்” என்றார்கள்.
34 இயேசு அவர்கள்மேல் மனதுருகி, அவர்களுடைய கண்களைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வை பெற்று, அவர்களும் இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.