15
யூதாவில் அபியாவின் ஆட்சி
1 நேபாத்தின் மகனான யெரொபெயாம் இஸ்ரயேலில் ஆட்சி செய்த பதினெட்டாம் வருடம் அபியா யூதாவின் அரசனானான்.
2 அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அப்சலோமின் மகளான அவனுடைய தாயின் பெயர் மாக்காள்.
3 அவனுடைய தகப்பன் முன்பு செய்த எல்லாப் பாவங்களையும் இவனும் செய்தான். தன் முற்பிதாவாகிய தாவீது, தன் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுமனதோடு உண்மையாயிருந்ததுபோல, இவன் முழுமனதோடு உண்மையாய் இருக்கவில்லை.
4 அப்படியிருந்தும் தாவீதின் இறைவனாகிய யெகோவா அவன் நிமித்தம் எருசலேமைப் பலப்படுத்தி, தாவீதுக்குப் பின் அரசாளுவதற்கு ஒரு மகனை எழுப்பி, எருசலேமில் அவனுக்கு ஒரு விளக்கைக் கொடுத்தார்.
5 ஏனெனில் தாவீது ஏத்தியனான உரியாவின் விஷயத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிலும் யெகோவாவின் பார்வைக்குச் சரியானவற்றைச் செய்து, தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் கட்டளைகளில் எதையும் செய்யத் தவறவில்லை.
6 யெரொபெயாமுக்கும் ரெகொபெயாமுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தம் அபியாவின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
7 அபியாவின் ஆட்சிக் காலத்தின் மற்ற சம்பவங்களும், அவன் செய்த அனைத்தும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது.
8 அபியா இறந்து, தாவீதின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகனான ஆசா அரசனானான்.
யூதாவில் ஆசாவின் அரசாட்சி
9 இஸ்ரயேல் அரசனான யெரொபெயாமின் இருபதாம் வருடத்தில் ஆசா யூதாவின் அரசனானான்.
10 அவன் எருசலேமில் நாற்பத்தொரு வருடங்கள் அரசாண்டான். அவனின் பாட்டி அப்சலோமின் மகளான மாக்காள் என்பவள்.
11 ஆசா தன் முற்பிதாவாகிய தாவீதைப் போல யெகோவாவின் பார்வையில் சரியானவற்றையே செய்தான்.
12 அவன், வழிபாட்டிடத்தில் வேசித்தனத்திற்குத் தங்களைக் கொடுத்த ஆண் விபசாரக்காரரை நாட்டிலிருந்து வெளியேற்றி, தன் முற்பிதாக்கள் செய்துவைத்திருந்த எல்லா விக்கிரகங்களையும் அகற்றிவிட்டான்.
13 மேலும் அவன் தன் பாட்டி மாக்காளை, அவள் அருவருப்பான அசேரா விக்கிரக தூணைச் செய்ததினால், அரசி என்ற நிலையிலிருந்து நீக்கிவிட்டான். ஆசா அந்தத் தூணை வெட்டி கீதரோன் பள்ளத்தாக்கில் எரித்துவிட்டான்.
14 அவன் வழிபாட்டு மேடைகளை அகற்றாமலிருந்த போதிலும்கூட ஆசா தன் வாழ்நாள் எல்லாம் தன் இருதயத்தை யெகோவாவுக்கே ஒப்புவித்திருந்தான்.
15 அவன் தானும் தன் தகப்பனும் அர்ப்பணித்திருந்த வெள்ளியையும், தங்கத்தையும், மற்ற பொருட்களையும் யெகோவாவின் ஆலயத்திற்குள் கொண்டுவந்தான்.
16 ஆசாவுக்கும் இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கும் இடையில் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தம் நடந்தது.
17 இஸ்ரயேலின் அரசனான பாஷா, யூதாவுக்கு விரோதமாகப் போய், யூதா அரசனான ஆசாவின் எல்லையிலிருந்து யாரும் வெளியே வரவோ, உள்ளே போகவோ முடியாதபடி தடுப்பதற்காக ராமாவைச் சுற்றி அரண் அமைத்தான்.
18 பின்பு ஆசா யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்திலும், தன் சொந்த அரண்மனையிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றைத் தன் அலுவலர்களிடம் ஒப்படைத்தான். பின்பு அவற்றை தமஸ்குவில் ஆட்சி செய்த எசியோனின் மகன் தப்ரிமோனின் மகனான சீரிய அரசன் பெனாதாத்திற்கு அனுப்பினான்.
19 மேலும் அவன் அவர்களிடம், “உம்முடைய தகப்பனுக்கும், என்னுடைய தகப்பனுக்குமிடையில் இருந்ததுபோல, உமக்கும் எனக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருக்கட்டும். இதோ பாரும், நான் வெள்ளியையும், தங்கத்தையும் உமக்கு பரிசாக அனுப்புகிறேன். நீர் இஸ்ரயேலின் அரசனான பாஷாவுடன் வைத்துள்ள ஒப்பந்தத்தை முறித்துவிடும். அப்போது அவன் என்னிடமிருந்து பின்வாங்கி விடுவான்” என்று சொல்லி அனுப்பினான்.
20 பெனாதாத் அரசனாகிய ஆசாவுடன் உடன்பட்டு தனது இராணுவத் தளபதிகளை இஸ்ரயேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பினான். அவன் ஈயோன், தாண், ஆபேல் பெத்மாக்கா மற்றும் கின்னரோத்தின் எல்லாப் பகுதிகளையும், அத்துடன் நப்தலி நாட்டையும் பிடித்தான்.
21 பாஷா இதைக் கேள்விப்பட்டபோது ராமாவைக் கட்டுவதை நிறுத்தி, பின்வாங்கி திர்சாவுக்குப் போனான்.
22 அப்பொழுது அரசன் ஆசா ஒருவனையும்விடாமல் யூதா நாடு முழுவதற்கும் ஒரு கட்டளை கொடுத்தான். அவர்கள் பாஷா அரசன் பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் ராமாவிலிருந்து கொண்டுபோனார்கள். ஆசா அரசன் அவற்றைப் பயன்படுத்தி பென்யமீன் நாட்டில் கேபாவையும், மிஸ்பாவையும் கட்டினான்.
23 ஆசாவின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய சாதனைகளும், அவன் செய்தவைகள் அனைத்தும், அத்துடன் அவன் கட்டிய பட்டணங்கள் பற்றியும், யூதா அரசர்களது வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. ஆயினும், அவனுடைய வயது முதிர்ந்த காலத்தில் அவன் கால்களில் வியாதி ஏற்பட்டது.
24 பின்பு ஆசா தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் முற்பிதாவாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகனான யோசபாத், அவனுடைய இடத்தில் அவனுக்குப்பின் அரசனானான்.
இஸ்ரயேலில் நாதாபின் ஆட்சி
25 யூதா அரசன் ஆசாவின் இரண்டாம் வருடத்தில் யெரொபெயாமின் மகனான நாதாப் இஸ்ரயேலுக்கு அரசனாகி, இஸ்ரயேலின்மேல் இரண்டு வருடம் ஆட்சிசெய்தான்.
26 அவன் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணிய தன் தகப்பனுடைய வழிகளிலும், அவனுடைய பாவத்திலும் நடந்தான். இதனால் அவன் யெகோவாவினுடைய பார்வையில் தீமைசெய்தான்.
27 நாதாபும், இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்திய பட்டணமான கிபெத்தோனை முற்றுகையிடுகையில், இசக்கார் குடும்பத்தைச் சேர்ந்த அகியாவின் மகனான பாஷா, நாதாபிற்கு எதிராகச் சதிசெய்து, அங்கு அவனை வெட்டிக்கொன்றான்.
28 யூதாவின் அரசனான ஆசாவின் மூன்றாம் வருடத்தில் பாஷா நாதாபைக் கொன்று, தானே அவனுக்குப்பின் அவன் இடத்தில் அரசனானான்.
29 அவன் அரசாளத் தொடங்கியதும் யெரொபெயாமின் முழுக் குடும்பத்தையும் கொன்றான். யெகோவா தன் பணியாளனாகிய சீலோனியனான அகியாவின் மூலமாய்க் கொடுத்த வாக்கின்படியே, யெரொபெயாமுக்குச் சொந்தமான சுவாசமுள்ள எதையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் கொன்றான்.
30 யெரொபெயாம் செய்த பாவங்களின் காரணமாகவும், அவன் இஸ்ரயேல் மக்களைப் பாவஞ்செய்யப்பண்ணியதாலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குக் கோபம்மூட்டினதாலுமே இவ்வாறு நடந்தது.
31 நாதாபின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவை யாவும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
32 ஆசாவுக்கும் இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கும் இடையில் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தம் நடந்துகொண்டே இருந்தது.
இஸ்ரயேலின் அரசன் பாஷா
33 யூதா அரசனான ஆசா அரசாண்ட மூன்றாம் வருடத்தில், அகியாவின் மகன் பாஷா இஸ்ரயேல் முழுவதற்கும் திர்சாவில் அரசனானான். அவன் இருபத்தி நான்கு வருடங்கள் ஆட்சிசெய்தான்.
34 அவன் இஸ்ரயேலரைப் பாவம் செய்யப்பண்ணின யெரொபெயாமின் வழிகளிலும், அவனுடைய பாவங்களிலும் நடந்து, யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான்.