43
எரேமியா மக்களிடம் அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவின் வார்த்தைகள் எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். யெகோவா அவனை அனுப்பிச் சொல்லச் சொன்ன ஒவ்வொன்றையும் அவர்களுக்குச் சொன்னான். அப்பொழுது ஓசாயாவின் மகன் அசரியாவும், கரேயாவின் மகன் யோகனானும், அகங்காரமுள்ள எல்லா மனிதரும் எரேமியாவிடம், “நீ பொய் சொல்கிறாய்; நீங்கள் தங்கும்படிக்கு எகிப்திற்குப் போகக்கூடாது என்று சொல்லும்படி எங்கள் இறைவனாகிய யெகோவா உன்னை அனுப்பவில்லை. நேரியாவின் மகன் பாரூக்கே பாபிலோனியர் எங்களைக் கொல்லும்படி அல்லது பாபிலோனுக்கு நாடுகடத்துவதற்கு எங்களை அவர்களிடம் ஒப்புக்கொடுக்கும்படி எங்களுக்கு விரோதமாக உன்னைத் தூண்டுகிறான்” என்றார்கள்.
இப்படியாக கரேயாவின் மகன் யோகனானும், எல்லா இராணுவ தளபதிகளும், எல்லா மக்களும் யூதா நாட்டில் தங்கியிருக்கவேண்டும் என்னும் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அதற்குப் பதிலாக சிதறடிக்கப்பட்டிருந்த எல்லா மக்களிடமிருந்தும், யூதா நாட்டில் வாழும்படி திரும்பி வந்த, யூதாவில் மீதியாயிருந்த மக்கள் எல்லோரையும் கரேயாவின் மகன் யோகனானும், எல்லா இராணுவ அதிகாரிகளும் கூட்டிக்கொண்டு எகிப்திற்குப் போனார்கள். அத்துடன் எல்லா ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், அரசனின் மகள்களையும் கூட்டிக்கொண்டு சென்றார்கள். மெய்க்காவலர் தளபதியான நேபுசராதானால் சாப்பானின் பேரனும், அகீக்காமின் மகனுமான கெதலியாவின் பொறுப்பில் விட்டுச்சென்றவர்களே அவர்கள். அவர்களோடுகூட இறைவாக்கினன் எரேமியாவையும், நேரியாவின் மகனான பாரூக்கையும் கூட்டிக்கொண்டு சென்றார்கள். இவ்வாறாக யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் எகிப்திற்குப்போய் தக்பானேஸ் வரைக்கும் போனார்கள்.
தக்பானேஸ் என்ற இடத்தில் யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: அவர் அவனிடம், “யூதர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது சில பெரிய கற்களை எடுத்து, தக்பானேஸில் உள்ள பார்வோனின் அரண்மனை வாசலில் இருக்கும், செங்கல் நடைபாதையில் களிமண்ணில் புதைத்து வை. 10 பின்பு அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது, இதுவே: என் ஊழியக்காரனாகிய பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரை நான் அழைப்பித்து, நான் புதைத்து வைத்த, இந்தக் கற்களின் மேலே அவனுடைய அரியணையை அமைப்பேன். அவன் தன்னுடைய ராஜகூடாரத்தை அதற்குமேல் விரிப்பான். 11 அத்துடன் அவன் வந்து எகிப்தைத் தாக்குவான். மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு மரணத்தையும், சிறையிருப்புக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு சிறையிருப்பையும், வாளுக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு வாளையும் அவன் கொண்டுவருவான். 12 மேலும் எகிப்தின் தெய்வங்களின் கோவில்களுக்கு நெருப்பு வைப்பான். அவன் அவர்களுடைய கோவில்களை எரித்து, அவர்களுடைய தெய்வங்களைச் சிறையாக்கிக் கொண்டுபோவான். ஒரு மேய்ப்பன் தனது ஆடைகளிலிருந்து பேன்களை எடுத்து சுத்தம் செய்வதுபோல அவர் எகிப்து தேசத்தை சுத்தம் செய்வான்; அங்கிருந்து நலமாய் புறப்பட்டுப் போவான். 13 எகிப்திலுள்ள பெத்ஷிமேஷின்* புனிதத் தூண்களை உடைத்து, எகிப்திலுள்ள தெய்வங்களின் கோவில்களை நெருப்பினால் எரித்துப்போடுவான் என்றார்.”
* 43:13 பெத்ஷிமேஷின் என்றால் சூரிய தெய்வத்தின் கோவில் எனப்படும்