34
சிதேக்கியாவுக்கு எச்சரிக்கை
1 பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரும், அவனுடைய முழு இராணுவமும், அவனுடைய ஆளுகைக்குட்பட்டிருந்த எல்லா அரசுகளும், அரசுகளின் மக்களும், எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது யெகோவாவிடமிருந்து இந்த வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:
2 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, “நீ போய் யூதாவின் அரசனாகிய சிதேக்கியாவிடம் சொல்லவேண்டியதாவது; யெகோவா சொல்வது இதுவே: இப்பட்டணத்தைப் பாபிலோன் அரசனின் கையில் கொடுக்கப்போகிறேன். அவன் அதை எரித்துப்போடுவான்.
3 நீ அவர்களுடைய கையிலிருந்து தப்பமாட்டாய். நீ நிச்சயமாக சிறைப்பிடிக்கப்பட்டு அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய். நீ பாபிலோன் அரசனை உன் சொந்தக் கண்களால் காண்பாய். அவன் உன்னோடு நேருக்கு நேராகக் பேசுவான். நீ பாபிலோனுக்குப் போவாய்.
4 “ ‘எனினும் யூதா அரசனாகிய சிதேக்கியாவே! யெகோவாவின் வாக்குத்தத்தத்தைக் கேள். யெகோவா உன்னைக் குறித்துச் சொல்வது இதுவே: நீ வாளால் மரிக்கமாட்டாய்.
5 நீ சமாதானத்துடன் மரிப்பாய். அத்துடன் உனக்குமுன் இருந்த அரசர்களாகிய உன்னுடைய தந்தையர்களை அடக்கம்பண்ணும்போது, மக்கள் நறுமணப் பொருட்களை எரித்துக் கனம்பண்ணியதுபோல, உனக்கும் நறுமணப் பொருட்களை எரித்துக் கனம் பண்ணுவார்கள். “ஐயோ, எங்கள் தலைவனே!” என்று சொல்லிப் புலம்புவார்கள். இந்த வாக்குத்தத்தத்தை நானே கொடுக்கிறேன்’ என்று யெகோவா கூறுகிறார்.”
6 பின்பு இறைவாக்கினன் எரேமியா, இந்த எல்லா வார்த்தைகளையும் எருசலேமில் யூதாவின் அரசனாகிய சிதேக்கியாவிடம் சொன்னான்.
7 அவ்வேளையில் பாபிலோன் அரசனுடைய இராணுவம் எருசலேமுக்கு விரோதமாகவும், யூதாவின் பட்டணங்களில் மீதியாயிருந்த லாகீசுக்கும், அசேக்காவுக்கும் விரோதமாகவும் போரிட்டுக்கொண்டிருந்தது. இவைகள் மட்டுமே யூதாவில் தப்பியிருந்த பாதுகாப்பான பட்டணங்கள்.
அடிமைகளுக்கு விடுதலை
8 சிதேக்கியா அரசன், அடிமைகளுக்கு விடுதலை கொடுப்பதற்காக எருசலேமில் இருந்த எல்லா மக்களோடும் ஒரு உடன்படிக்கை செய்தான். அப்பொழுது யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வார்த்தை வந்தது.
9 அந்த உடன்படிக்கையாவது: “ஒவ்வொருவனும் தன்தன் எபிரெய அடிமைகளான ஆண்களையும், பெண்களையும் விடுதலையாக்க வேண்டும். ஒருவரும் தன் சகோதரனாகிய யூதனை அடிமையாக வைத்திருக்கக்கூடாது” என்பதே.
10 இந்த உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லா அதிகாரிகளும், மக்களும் தங்கள் ஆண் அடிமைகளையும், பெண் அடிமைகளையும் விடுதலையாக்கச் சம்மதித்தார்கள். அவர்கள் தொடர்ந்து தங்கள் அடிமைகளை அடிமைத்தனத்தில் வைத்திராமல் விடுதலையாக்கினார்கள்.
11 ஆனால் அதன்பின் தங்கள் மனதை மாற்றி தாங்கள் விடுவித்த அடிமைகளைத் திரும்பவும் அடிமைகளாக்கிக் கொண்டார்கள்.
12 அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது.
13 “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா, கூறுவது இதுவே: அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களை நான் கொண்டுவந்தபோது, அவர்களோடு ஒரு உடன்படிக்கை பண்ணினேன். நான் சொன்னதாவது:
14 ‘ஒவ்வொரு ஏழாம் வருடமும், நீங்கள் ஒவ்வொருவரும், தன்னைத்தானே உங்களிடம் விற்றுப்போட்ட, உங்கள் எபிரெய சகோதரனை விடுதலை பண்ணவேண்டும். அவன் உங்களுக்கு ஆறு வருடம் பணிசெய்தபின் நீங்கள் அவனை விடுதலை செய்யவேண்டும் என்பதாகும்.’ ஆனால் உங்கள் முற்பிதாக்களோ எனக்கு செவிகொடுக்கவுமில்லை, எனக்கு கவனம் செலுத்தவும் இல்லை.
15 நீங்கள் இந்நாளில் மனந்திரும்பி, என் பார்வையில் சரியானதைச் செய்தீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரருக்கு விடுதலையை அறிவித்தீர்கள்; அத்துடன் என் பெயரைக்கொண்ட என்னுடைய ஆலயத்தில், என் முன்னாக ஒரு உடன்படிக்கையையும் செய்தீர்கள்.
16 ஆனால் இப்பொழுது மறுபுறம் திரும்பி நீங்கள் என் பெயரைக் கறைப்படுத்திவிட்டீர்கள். நீங்கள், தாம் விரும்பிய இடத்திற்குப் போக விடுதலையாக்கி அனுப்பிவிட்ட ஆண், பெண் அடிமைகளைத் திரும்பவும் எடுத்துக்கொண்டீர்கள். நீங்கள் திரும்பவும் அவர்களை வற்புறுத்தி அடிமைகளாக்கி இருக்கிறீர்கள்.
17 “ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. நீங்கள் ஒவ்வொருவனும் உங்கள் சகோதரருக்கு விடுதலையை அறிவிக்கவுமில்லை. எனவே நான் இப்பொழுது உங்களுக்கு விடுதலையை அறிவிக்கிறேன். அது வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் விழுவதற்கான விடுதலை என யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களை பூமியின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாக்குவேன்.
18 இந்த மனிதர் என் உடன்படிக்கையை மீறி, எனக்கு முன்பாகத் தாங்கள் செய்துகொண்ட உடன்படிக்கையின் நிபந்தனைகளை நிறைவேற்றாமல் போனார்கள். அவர்கள் கன்றை இரண்டாகப் பிளந்து, அந்தத் துண்டுகளுக்கிடையே நடந்து போனார்களே. அந்தக் கன்றுக்குச் செய்யப்பட்டது போலவே நானும் அவர்களுக்குச் செய்வேன்.
19 கன்றுக்குட்டியின் துண்டுகளுக்கிடையில் நடந்துபோன யூதா மற்றும் எருசலேமின் தலைவர்களையும், அரண்மனை அதிகாரிகளையும், ஆசாரியர்களையும், நாட்டு மக்கள் அனைவரையும்,
20 அவர்களுடைய உயிரை வாங்கத் தேடுகிற பகைவரின் கையில் நான் ஒப்புக்கொடுப்பேன். அவர்களுடைய சடலங்கள் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும்.
21 “நான் யூதாவின் அரசனாகிய சிதேக்கியாவையும், அவனுடைய அதிகாரிகளையும், அவர்களுடைய உயிரை வாங்கத் தேடுகிற பகைவர்களின் கையில் ஒப்படைப்பேன். உங்களைவிட்டுப்போன பாபிலோன் அரசனுடைய இராணுவத்தின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன்.
22 நானே கட்டளை கொடுத்து, அவர்களை இப்பட்டணத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன் என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள் அதற்கு விரோதமாய் போரிட்டு அதைப் பிடித்துச் சுட்டெரிப்பார்கள். நான் யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராமல் பாழாய்ப் போகச்செய்வேன்.”