37
“அந்த முழக்கத்தினால் என் இருதயம் நடுங்கி,
அதின் இடத்தைவிட்டுத் துடிக்கிறது.
இறைவனுடைய குரலின் கர்ஜனையையும்,
அவர் வாயிலிருந்து வரும் முழக்கத்தையும் கேளுங்கள்.
வானத்தின் கீழெங்கும் தமது மின்னலைக் கட்டவிழ்த்து,
அதைப் பூமியின் கடைமுனைகளுக்கும் அனுப்புகிறார்.
பின்பு அவருடைய கர்ஜனையின் சத்தம் வருகிறது,
அவர் தனது கெம்பீரமான குரலினால் முழங்குகிறார்;
அவருடைய சத்தம் தொனிக்கும்போது
அவர் ஒன்றையும் அடக்குவதில்லை.
இறைவனது குரல் ஆச்சரியமான விதங்களில் முழங்குகிறது;
அவர் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத அளவு பெரிய காரியங்களைச் செய்கிறார்.
அத்துடன் அவர் பனியைப் பார்த்து, ‘பூமியின்மேல் விழு’ என்றும்,
மழையைப் பார்த்து, ‘கடுமையாய்ப் பெய்’ என்றும் கூறுகிறார்.
அவ்வேளைகளில் அவர் தாம் படைத்த எல்லா மனிதர்களும் தமது செயலை அறியும்படி,
ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய வேலையிலிருந்து நிறுத்துகிறார்.
காட்டு மிருகங்கள் குகைகளுக்குள் சென்று,
தங்கள் கெபிகளில் தங்குகின்றன.
தெற்கிலிருந்து சூறாவளியும்,
வடதிசை காற்றினால் குளிரும் வருகிறது.
10 இறைவனின் சுவாசத்தால் பனிக்கட்டி உருவாகிறது;
அப்பொழுது பரந்த நீர்ப்பரப்புகளும் உறைந்துபோகின்றன.
11 அவர் மேகங்களை ஈரத்தினால் பாரமாக்கி,
தமது மின்னலை அவற்றினுள் சிதறப்பண்ணுகிறார்.
12 அவரின் திசையில் மேகங்கள் சுழல்கின்றன;
அவை பூமியின் மேற்பரப்பெங்கும்
அவர் கட்டளையிடுவதைச் செய்கின்றன.
13 மனிதரைத் தண்டிப்பதற்கோ,
அல்லது தனது பூமியை வளமுள்ளதாக்கி தமது அன்பைக் காட்டுவதற்கோ
அவர் மேகங்களைக் கொண்டுவருகிறார்.
 
14 “யோபுவே, இதைக் கேளும்;
சற்று நின்று இறைவனின் அதிசயங்களைக் கவனித்துப் பாரும்.
15 இறைவன் மேகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி
தமது மின்னலை மின்னப் பண்ணுகிறார் என்று உமக்குத் தெரியுமா?
16 அவர் மேகங்களை எப்படி ஆகாயத்தில் தொங்கவிட்டிருக்கிறார் என்பதையும்,
பூரண அறிவுள்ளவரின் அதிசயங்களையும் நீர் அறிவீரோ?
17 தென்றலினால் பூமி அடங்கிக் கிடக்கும்போது,
உமது ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையை அறிவீரோ?
18 வார்க்கப்பட்ட வெண்கல கண்ணாடியைப் போன்ற,
கடினமான ஆகாயத்தை அவருடன் சேர்ந்து உம்மால் விரிக்க முடியுமோ?
 
19 “அவருக்குச் சொல்லவேண்டியதை நீர் எங்களுக்குச் சொல்லும்;
இருளின் காரணமாக எங்களால் வழக்காட முடியாதிருக்கிறது.
20 ‘நான் பேச விரும்புகிறேன்’ என்று அவருக்குச் சொல்லலாகுமோ?
தான் விழுங்கப்படுவதை எவனும் விரும்பிக் கேட்பானோ?
21 காற்று ஆகாயத்தைச் சுத்தப்படுத்திய பின்,
சூரியனை எந்த மனிதனாலும் பார்க்க முடியாதே!
ஏனெனில் அதின் ஒளி பிரகாசமாயிருக்கும்.
22 வடக்கிலிருந்து தங்கமயமான மகிமையிலே அவர் வருகிறார்;
திகைப்பூட்டும் மாட்சிமையுடன் இறைவன் வருகிறார்.
23 எல்லாம் வல்லவர் நமக்கு எட்டாத தூரத்திலே
அவர் வல்லமையில் உயர்ந்திருக்கிறார்;
அவர் நீதியும் நியாயமும் நிறைந்தவர்; அவர் ஒடுக்குகிறதில்லை.
24 ஆகையால், மனிதர்கள் அவரிடம் பயபக்தியாயிருக்கிறார்கள்;
ஏனெனில், இருதயத்தில் ஞானமுள்ள ஒருவரையும் அவர் மதிப்பதில்லை.”