40
இறைசமுகக் கூடாரத்தை அமைத்தல்
1 பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
2 “நீ சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தை, முதலாம் மாதம், முதலாம் நாளில் நிறுவவேண்டும்.
3 அதில் சாட்சிப்பெட்டியை வைத்து அதைத் திரையினால் மறைக்கவேண்டும்.
4 மேஜையைக் கொண்டுவந்து, அதற்குரியவற்றை மேஜையின்மேல் வைக்கவேண்டும். அதன்பின் குத்துவிளக்குகளைக் கொண்டுவந்து அதன் அகல்விளக்குகளை வைக்கவேண்டும்.
5 தங்கத் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டியின் முன் வைத்து, இறைசமுகக் கூடாரத்தின் வாசலில் திரையைப்போட வேண்டும்.
6 “பின்பு தகன பலிபீடத்தை சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின், வாசலுக்கு முன் வைக்கவேண்டும்.
7 தொட்டியை சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றவேண்டும்.
8 அவற்றைச் சுற்றிலும் முற்றத்தை அமைத்து முற்றத்தின் வாசலுக்குத் திரையைப்போட வேண்டும்.
9 “பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, இறைசமுகக் கூடாரத்தையும், அங்குள்ள எல்லாவற்றையும் அபிஷேகம்பண்ணு. அதையும் அதன் பணிமுட்டுகளையும் அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது அது பரிசுத்தமாயிருக்கும்.
10 பின்பு தகன பலிபீடத்தையும், அதன் பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து, பீடத்தை அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது பலிபீடம் மகா பரிசுத்தமுள்ளதாயிருக்கும்.
11 பின்பு தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம்பண்ணி, அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும்.
12 “அதன்பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் நுழைவுவாசலில் கொண்டுவந்து, அவர்களை தண்ணீரால் கழுவவேண்டும்.
13 ஆரோனுக்குப் பரிசுத்த உடைகளை உடுத்தி, அவன் ஆசாரியராக எனக்குப் பணிசெய்வதற்கு அவனை அபிஷேகம்பண்ணி, அர்ப்பணம் செய்யவேண்டும்.
14 அவனுடைய மகன்களையும் அழைத்துவந்து, அவர்களுக்கு உள் அங்கிகளை உடுத்து.
15 அவர்கள் எனக்கு ஆசாரியப் பணிசெய்யும்படி, அவர்களுடைய தகப்பனை அபிஷேகம் செய்ததுபோலவே அவர்களையும் அபிஷேகம் செய்யவேண்டும். அவர்கள் பெற்ற இந்த, ‘அபிஷேகம்’ தலைமுறைதோறும் நீடித்திருக்கும் ஆசாரியத்துவத்திற்கான அபிஷேகமாய் இருக்கும்.”
16 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே எல்லாவற்றையும் செய்தான்.
17 இவ்விதமாக எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் நாளன்று, இறைசமுகக் கூடாரம் அமைக்கப்பட்டது.
18 மோசே இறைசமுகக் கூடாரத்தை அமைத்தபோது, அதன் அடித்தளங்களை அதனிடங்களில் பொருத்தி சட்டப்பலகைகளை நிறுத்தி, அதன் குறுக்குச் சட்டங்களையும் மாட்டி, அதன் கம்பங்களை நிறுத்தினான்.
19 யெகோவா கட்டளையிட்டபடியே மோசே இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாகக் கூடாரத்தை விரித்து, கூடாரத்தின்மேல் மூடுதிரையைப் போட்டான்.
20 பின்பு சாட்சிக் கற்பலகைகளை எடுத்து அவற்றைப் பெட்டிக்குள் வைத்தான். பின்பு அதைத் தூக்கும் கம்புகளைப் பெட்டியில் மாட்டி, கிருபாசனத்தைப் பெட்டியின் மேலே வைத்தான்.
21 இவ்வாறு மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, பெட்டியை இறைசமுகக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து, மூடுதிரையைத் தொங்கவிட்டு சாட்சிப்பெட்டியை மறைத்தான்.
22 அதன்பின் மோசே மேஜையை சபைக் கூடாரத்தில் திரைக்கு வெளியே, இறைசமுகக் கூடாரத்தின் வடக்குத் திசையில் வைத்தான்.
23 யெகோவாவின் கட்டளைப்படியே யெகோவாவின் முன்பாக மேஜையில் அப்பங்களை வைத்தான்.
24 பின்பு குத்துவிளக்கை சபைக் கூடாரத்தில், மேஜைக்கு எதிரே இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் வைத்தான்.
25 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே விளக்குகளை யெகோவா முன்னிலையில் வைத்தான்.
26 தங்கப் பலிபீடத்தைச் சபைக் கூடாரத்தின் திரைக்கு முன்னால் வைத்தான்.
27 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே நறுமணத்தூளை அதன்மேல் எரித்தான்.
28 இறைசமுகக் கூடாரத்தின் வாசலில் திரையைத் தொங்கவிட்டான்.
29 யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டபடியே, சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் நுழைவு வாசலுக்கு அருகே தகன பலிபீடத்தை வைத்து, அதன்மேல் தகன காணிக்கையையும், தானியக் காணிக்கையையும் செலுத்தினான்.
30 பின்பு சபைக் கூடாரத்திற்கும் பீடத்திற்கும் இடையில் தொட்டியை வைத்து, கழுவுவதற்கு அதற்குள் தண்ணீரை ஊற்றினான்.
31 மோசேயும், ஆரோனும், அவன் மகன்களும், தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு அதை உபயோகித்தார்கள்.
32 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதும் அல்லது பீடத்திற்கு அருகே வரும்போதும் தங்களைக் கழுவிக்கொள்வார்கள்.
33 பின்பு மோசே இறைசமுகக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றி முற்றத்தை அமைத்து, முற்றத்தின் வாசலில் திரையைத் தொங்கவிட்டான். இவ்வாறு மோசே எல்லா வேலைகளையும் செய்துமுடித்தான்.
யெகோவாவின் மகிமை
34 அப்பொழுது சபைக் கூடாரத்தை ஒரு மேகம் மூடியது. யெகோவாவின் மகிமை இறைசமுகக் கூடாரத்தை நிரப்பியது.
35 மேகம் சபைக் கூடாரத்தின்மேல் தங்கியிருந்தபடியாலும், யெகோவாவின் மகிமை இறைசமுகக் கூடாரத்தை நிரப்பியிருந்தபடியாலும் மோசேயினால் சபைக் கூடாரத்திற்குள் போகமுடியாதிருந்தது.
36 இஸ்ரயேலரின் பயணங்கள் எல்லாவற்றிலும், இறைசமுகக் கூடாரத்திற்கு மேலுள்ள மேகம் மேலே எழும்பும்போது, அவர்கள் புறப்படுவார்கள்.
37 மேகம் மேலே எழும்பாதிருந்தால், அது மேலே எழும்பும்வரை புறப்படாதிருப்பார்கள்.
38 இஸ்ரயேல் மக்கள் பயணம் செய்த காலமெல்லாம் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பார்வையில் யெகோவாவின் மேகம் பகல் வேளையில் இறைசமுகக் கூடாரத்தின் மேலாகக் காணப்பட்டது. இரவுவேளையில் அந்த மேகத்தில் நெருப்பும் இருக்கக் காணப்பட்டது.