20
போருக்குப் புறப்படுதல்
1 நீங்கள் உங்கள் பகைவர்களை எதிர்த்துப் போருக்குப் போகும்போது, குதிரைகளையும், தேர்களையும் உங்களுடைய படையைவிட பெரிய படையையும் கண்டால், அவற்றிற்குப் பயப்படவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களோடு இருப்பார்.
2 நீங்கள் போருக்குப்போக ஆயத்தமாகும்போது, ஆசாரியன் முன்னேவந்து இராணுவவீரருக்கு உரை நிகழ்த்தவேண்டும்.
3 அவன் சொல்லவேண்டியதாவது: “இஸ்ரயேலின், கேளுங்கள், இன்று நீங்கள் உங்கள் பகைவரை எதிர்த்துப் போர் புரியப்போகிறீர்கள். சோர்வடையாதீர்கள் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள் அவர்களுக்குமுன் பீதியடையாதீர்கள்.
4 ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்கு வெற்றியைக் கொடுப்பதற்காக உங்கள் பகைவர்களை எதிர்த்துப் போர்புரிய உங்களுடன் போகிறார்.”
5 மேலும் அதிகாரிகள் இராணுவவீரரிடம் சொல்லவேண்டியதாவது: “புதுவீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகலாம். அவன் யுத்தத்தில் செத்தால் வேறொருவன் அதை அர்ப்பணம் செய்யக்கூடும்.
6 திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, அதன் பலனை அனுபவியாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம்; அவன் யுத்தத்தில் செத்தால், வேறொருவன் அத்தோட்டத்தின் பலனை அனுபவிப்பான்.
7 தனக்கு நிச்சயித்த பெண்ணை இன்னும் திருமணம் செய்யாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம். அவன் போரில் செத்தால், அந்தப் பெண்ணை வேறொருவன் திருமணம்செய்வான்” என்று சொல்லவேண்டும்.
8 மேலும் அதிகாரிகள் அவர்களிடம், “பயப்படுகிற அல்லது உள்ளத்தில் சோர்வுடைய யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லவேண்டும். ஏனெனில், அவனுடைய உடன் இராணுவவீரர் அவனைப்போல் சோர்வடையாமல் இருக்கவேண்டுமே. அதற்காகவே இப்படிச் சொல்லவேண்டும்.
9 அதிகாரிகள் இராணுவவீரருடன் பேசி முடித்தபின், அந்த படைக்கு தளபதிகளை நியமிக்கவேண்டும்.
10 ஒரு பட்டணத்தைத் தாக்குவதற்கு அணிவகுத்துச் செல்லும்போது, அதைக் நெருங்கியவுடன் அதன் மக்களுடன் சமாதானத்துக்கு வர முயற்சி செய்யுங்கள்.
11 அவர்கள் அதற்கு உடன்பட்டு தங்கள் வாசல்களைத் திறந்தால், அங்குள்ள யாவரும் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் உங்களுக்கு வேலைசெய்யவேண்டும்.
12 ஆனால் அவர்கள் உங்களுடைய சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல், உங்களை எதிர்த்துப்போரிட்டால், அப்பட்டணத்தை முற்றுகையிடுங்கள்.
13 உங்கள் இறைவனாகிய யெகோவா அந்தப் பட்டணத்தை உங்களுக்குக் கொடுப்பார். அப்போது அங்குள்ள ஆண்கள் யாவரையும் வாளால் வெட்டிப்போடுங்கள்.
14 பட்டணத்திலுள்ள பெண்களையும், பிள்ளைகளையும், மிருகங்களையும் மற்றும் எல்லாவற்றையும் உங்களுக்காக கொள்ளைப்பொருளாக வைத்துக்கொள்ளலாம். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களுக்குக் கொடுக்கும் கொள்ளைப்பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
15 உங்களுக்குத் தூரத்திலுள்ள, எந்த நாட்டையும் சேராத பட்டணங்கள் எல்லாவற்றிற்கும் நீங்கள் இப்படியே செய்யவேண்டும்.
16 ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாடுகளின் பட்டணங்களில் உள்ள உயிருள்ள எதையும், எவ்வழியிலும் தப்பவிடவேண்டாம்.
17 இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டபடியே ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய எல்லோரையும் முற்றிலும் அழித்துவிடுங்கள்.
18 ஏனெனில் அவர்கள் தங்கள் தெய்வங்களை வணங்குவதால் செய்கிற அருவருப்பான செயல்களை நீங்கள் பின்பற்றும்படி உங்களுக்கும் போதிப்பார்கள். நீங்களும், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்வீர்கள்.
19 நீங்கள் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுவதற்கு அதற்கு எதிராகச் சண்டையிட்டு நீண்டகாலமாக முற்றுகையிட்டிருந்தால், அங்குள்ள மரங்களை கோடரியால் வெட்டி அழிக்கவேண்டாம். ஏனெனில் அவற்றின் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். அவற்றை வெட்டி விழுத்தவேண்டாம். மரங்களை முற்றுகையிடுவதற்கு அவை என்ன மனிதர்களா?
20 ஆனாலும், பழங்கொடாத மரங்கள் என நீங்கள் அறிந்தால் அவற்றை வெட்டுங்கள். நீங்கள் சண்டைசெய்யும் பட்டணம் வீழ்ச்சியடையும்வரை அரண்கட்டுவதற்காக அவற்றைப் பயன்படுத்தலாம்.