அத்தியாயம் 3
சரீரத்தின்மேலுள்ள நம்பிக்கை
1 மேலும், என் சகோதரர்களே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே மீண்டும் எழுதுவது எனக்கு வருத்தம் இல்லை, அது உங்களுக்கு நலமாக இருக்கும்.
2 நாய்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். விருத்தசேதனக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
3 ஏனென்றால், சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இல்லாமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவிற்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
4 சரீரத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இருக்க நினைத்தால் நான் அதைவிட அதிகமாக அப்படிச் செய்யலாம்.
5 நான் எட்டாம்நாளில் விருத்தசேதனம்பண்ணப்பட்டவன், இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;
6 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்தின் நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
7 ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன்.
8 அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாக இல்லாமல், கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருந்து, கிறிஸ்துவிற்குள் இருக்கிறவன் என்று தெரியும்படிக்கும்,
10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும்,
11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன்.
இலக்கை நோக்கி ஓடுதல்
12 நான் பெற்றுக்கொண்டேன் அல்லது முழுவதும் தேறினவனானேன் என்று நினைக்காமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்வதற்காக ஆசையாகத் தொடருகிறேன்.
13 சகோதரர்களே, அதைப் பிடித்துக்கொண்டேன் என்று நான் நினைக்கிறதில்லை; ஒன்று செய்கிறேன், கடந்தவைகளை மறந்து, வருகிறவைகளைத் தேடி,
14 கிறிஸ்து இயேசுவிற்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
15 ஆகவே, நம்மில் தேறினவர்கள் எல்லோரும் இந்தச் சிந்தையாகவே இருக்கவேண்டும்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறு சிந்தையாக இருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
16 ஆனாலும் நாம் எதுவரைக்கும் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காக நடந்துகொண்டு, ஒரே சிந்தையாக இருப்போமாக.
17 சகோதரர்களே, நீங்கள் என்னோடு பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்கிப் பாருங்கள்.
18 ஏனென்றால், அநேகர் வேறுவிதமாக நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களென்று உங்களுக்கு அநேகமுறைச் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய வெட்கமே, அவர்கள் பூமிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
21 அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்வதற்கு தம்முடைய வல்லமையான செயலின்படி, நம்முடைய அற்பமான சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.