அத்தியாயம் 14
யெரொபெயாமுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்தல்
1 அக்காலத்திலே யெரொபெயாமின் மகனாகிய அபியா வியாதியில் படுத்தான்.
2 அப்பொழுது யெரொபெயாம் தன்னுடைய மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடி வேஷம் மாறி சீலோவுக்குப் போ; இந்த மக்களின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடு சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.
3 நீ உன்னுடைய கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடம் போ; பிள்ளைக்கு நடக்கப்போகிறது என்னவென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான்.
4 யெரொபெயாமின் மனைவி அப்படியே செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்; அகியாவோ முதிர் வயதானதால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கமுடியாமல் இருந்தான்.
5 யெகோவா அகியாவினிடம்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாக இருக்கிற தன்னுடைய மகனுக்காக உன்னிடம் ஒரு ஆலோசனை கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்னபடியாகச் சொல்லவேண்டும்; அவள் உள்ளே நுழைகிறபோது, தன்னை வேறு பெண்ணாகக் காட்டுவாள் என்றார்.
6 எனவே, வாசற்படிக்குள் நுழையும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை வேறு பெண்ணாக ஏன் காட்டுகிறாய்? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.
7 நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்; மக்களிடத்திலிருந்து உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின்மேல் அதிபதியாக வைத்தேன்.
8 நான் ராஜ்ஜியபாரத்தை தாவீது வீட்டாரினுடைய கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, என்னுடைய பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன்னுடைய முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என்னுடைய ஊழியனாகிய தாவீதைப்போல நீ இல்லாமல்,
9 உனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தெய்வங்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் ஏற்படுத்தி, என்னை உனக்குப் பின்னே தள்ளிவிட்டாய்.
10 ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் தீங்கை வரச்செய்து, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் கூட இல்லாதபடி, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் அழித்து, குப்பை கழித்துப்போடப்படுவதுபோல யெரொபெயாமுக்கு பின்வருபவர்களை அவர்கள் முழுவதும் அழியும்வரை கழித்துப்போடுவேன் என்றார்.
11 யெரொபெயாமின் குடும்பத்தார்களில் பட்டணத்தில் சாகிறவனை நாய்கள் சாப்பிடும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் சாப்பிடும்; யெகோவா இதை உரைத்தார்.
12 ஆகையால் நீ எழுந்து, உன்னுடைய வீட்டுக்குப்போ, உன்னுடைய கால்கள் பட்டணத்திற்குள் நுழையும்போது பிள்ளை செத்துப்போவான்.
13 அவனுக்காக இஸ்ரவேலர்கள் எல்லோரும் துக்கம் கொண்டாடி அவனை அடக்கம் செய்வார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக அவனிடம் நல்ல காரியம் காணப்பட்டதால், யெரொபெயாமின் வீட்டாரில் அவன் ஒருவனே கல்லறைக்குப்போவான்.
14 ஆனாலும் யெகோவா தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பச்செய்வார்; அவன் அந்த நாளிலே யெரொபெயாமின் வீட்டாரை அழிப்பான்; இப்போதே இது நடக்கும்.
15 தண்ணீரில் நாணல் அசைகிறதுபோல, யெகோவா இஸ்ரவேலை முறித்து அசையச்செய்து, அவர்களுடைய முன்னோர்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடு பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்கியதால், அவர்களை ஐபிராத்து நதிக்கு மறுபுறம் சிதறடித்து,
16 யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவத்தினால் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.
17 அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வரும்போது பிள்ளை செத்துப்போனான்.
18 யெகோவா தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்செய்து, இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்காகத் துக்கம் அனுசரித்தார்கள்.
19 யெரொபெயாம் யுத்தம்செய்ததும் ஆட்சி செய்ததுமான அவனுடைய மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
20 யெரொபெயாம் 22 வருடங்கள் ஆட்சிசெய்தான்; அவன் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அவனுடைய மகனாகிய நாதாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம்
21 சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது 41 வயதாக இருந்து, யெகோவா தம்முடைய நாமம் வெளிப்படும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே 17 வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாயின் பெயர் நாகமாள்.
22 யூதா மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்களுடைய பிதாக்கள் செய்த எல்லாவற்றையும்விட அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.
23 அவர்களும் உயர்ந்த எல்லா மேட்டின் மேலும், பச்சையான எல்லா மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்புவிக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.
24 தேசத்திலே ஆண் விபசாரக்காரர்களும் இருந்தார்கள்; யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட தேசங்களுடைய அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள்.
25 ரெகொபெயாம் அரசாட்சிசெய்யும் ஐந்தாம் வருடத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு எதிராக வந்து,
26 யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்த பொன் கேடகங்கள் ஆகிய எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
27 அவைகளுக்கு பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கல கேடகங்களைச் செய்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற காவற்காரர்களுடைய தளபதிகளின் கைகளில் ஒப்புவித்தான்.
28 ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும்போது, அரண்மனைக் காவலர்கள் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்களுடைய அறையிலே வைப்பார்கள்.
29 ரெகொபெயாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
30 ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
31 ரெகொபெயாம் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு தாவீதின் நகரத்தில் தன்னுடைய பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாய்க்கு நாகமாள் என்று பெயர்; அவனுடைய மகனாகிய அபியாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.