௧௪
நியாயத்தீர்ப்பு நாள்
௧ பார், கர்த்தருக்கு நியாயந்தீர்க்க சிறப்பான நாள் இருக்கிறது. நீங்கள் அள்ளி வந்த செல்வங்கள் உங்கள் நகரில் பங்கிடப்படும்.
௨ நான் எல்லா தேசங்களையும் எருசலேமிற்கு எதிராகப் போரிட கூட்டுவேன். அவர்கள் நகரைக் கைப்பற்றி வீடுகளை அழிப்பார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். ஜனங்களின் பாதிபேர் கைதிகளாக கொண்டுப் போகப்படுவார்கள். ஆனால் மீதியுள்ளவர்கள், நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படமாட்டார்கள்.
௩ பின்னர் கர்த்தர் அந்நாடுகளோடு போரிடச் செய்வார். இது உண்மையான போராக இருக்கும்.
௪ அந்நேரத்தில், அவர் எருசேலேமிற்கு கிழக்கே உள்ள ஒலிவ மலைமேல் நிற்பார். ஒலிவமலை பிளக்கும். அதன் ஒரு பகுதி வடக்குக்கும் மற்றொரு பகுதி தெற்கிற்கும் நகரும். ஒரு ஆழமான பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து மேற்காக திறந்துக்கொள்ளும்.
௫ அம்மலைப் பள்ளத்தாக்கு உங்களை நெருங்க நெருங்க நீங்கள் தப்பி ஓட முயல்வீர்கள். நீங்கள் Ԕயூதாவின் அரசனான உசியாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பயந்து ஓடியதுபோன்று ஓடுவீர்கள். ஆனால் எனது தேவனாகிய கர்த்தர் வருவார். அவரோடு அவரது பரிசுத்தமானவர்களும் வருவார்கள்.
௬-௭ அது மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். அங்கு வெளிச்சமும், குளிரும், மப்பும் இருக்கிறது. கர்த்தர் மட்டுமே அந்த நாளை அறிவார். ஆனால் அங்கே இரவோ, பகலோ இருக்காது. பின்னர், வழக்கமாக இருள் வரும் நேரத்தில் இன்னும் வெளிச்சம் இருக்கும்.
௮ அந்நேரத்தில், எருசலேமிலிருந்து தொடர்ந்து தண்ணீர் பாயும். அந்த தண்ணீரோடை இரண்டாகப் பிரிந்து ஒன்று கிழக்காகவும், இன்னொன்று மேற்கே மத்தியதரைக் கடலுக்கும் பாயும். இது ஆண்டு முழுவதும் கோடைக் காலத்திலும், மழைகாலத்திலும் பாய்ந்துகொண்டிருக்கும்
௯ அந்நேரத்தில் உலகம் முழுவதற்கும் கர்த்தரே அரசராக இருப்பார். கர்த்தர் ஒருவரே, அவரது நாமம் ஒன்றே.
௧௦ அந்நேரத்தில், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் அரபா பாலைவனமாக காலியாக இருக்கும். நாடானது கேபா தொடங்கி எருசலேமிற்கு தெற்கேயுள்ள ரிம்மோன் வரைக்கும் பாலைவனமாகும். ஆனால் எருசலேம் நகரம் முழுவதும் மீண்டும் கட்டப்படும். பென்யமீன் வாசல் தொடங்கி முதல்வாசல் (மூலை வாசல்) வரைக்கும் அனானெயேல் கோபுரம் தொடங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள் வரை குடியேற்றப்பட்டிருக்கும்.
௧௧ ஜனங்கள் அங்கே வாழப்போவார்கள். இனி மேல் அவர்களை எந்தப் பகைவரும் அழிக்க வரமாட்டார்கள். எருசலேம் பாதுகாப்பாக இருக்கும்.
௧௨ ஆனால் எருசலேமிற்கு எதிராக போரிட்ட நாடுகளை கர்த்தர் தண்டிப்பார். அவர்களுக்குப் பயங்கரமான நோய் ஏற்பட காரணமாக இருப்பார். அங்கு ஜனங்கள் இன்னும் நின்றுகொண்டிருக்கும்போதே அவர்களின் தோல் அழுகும். அவர்களின் கண்கள் இமைக்குள்ளும் நாக்குகள் வாய்க்குள்ளும் அழுகிப் போகும்.
௧௩-௧௫ அந்தப் பயங்கரமான நோய் எதிரியின் கூடாரத்தில் இருக்கும். அவர்களின் குதிரைகள் கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் எல்லாம் அந்நோயால் பீடிக்கப்படும்.
அந்நேரத்தில், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு உண்மையில் பயப்படுவார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பிடித்து பற்றிக்கொண்டு சண்டையிடுவார்கள். யூதாவின் ஜனங்கள் எருசலேமில் போரிடுவார்கள். ஆனால், அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து செல்வத்தைப் பெறுவார்கள். அவர்கள் மிகுதியாக பொன், வெள்ளி, ஆடை ஆகியவற்றைப் பெறுவார்கள்.
௧௬ எருசலேமில் போரிட வந்த ஜனங்களில் சிலர் பிழைப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அரசனான சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதிட வருவார்கள். அவர்கள் அடைக்கல கூடாரப் பண்டிகையை கொண்டாட வருவார்கள்.
௧௭ பூமியிலுள்ள எந்த ஒரு குடும்பத்திலுள்ள ஜனங்களும் அரசனை, சர்வ வல்மையுள்ள கர்த்தரை தொழுதிட எருசலேம் செல்லாமல் இருந்தால், பிறகு கர்த்தர் அவர்கள் மழை பெறாமல் போகும்படிச் செய்வார்.
௧௮ எகிப்திலுள்ள குடும்பத்தார்கள் எவரும் அடைக்கல கூடார பண்டிகை கொண்டாட வராமல் போனால், பின்னர் கர்த்தர் பகைவரது நாடுகளுக்குக் கொடுத்த நோயை அவர்கள் பெறும்படிச் செய்வார்.
௧௯ அது தான் எகிப்துக்கான தண்டனையாக இருக்கும். அடைக்கல கூடார பண்டிகையைக் கொண்டாட வராத மற்ற நாடுகளுக்கும் இதுதான் தண்டனை.
௨௦ அந்நேரத்தில், அனைத்தும் தேவனுக்கு உரியதாகும். குதிரைகளின் மணிகளில் கூட கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று பொறிக்கப்பட்டிருக்கும். கர்த்தருடைய ஆலயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பானைகளும் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கும் பாத்திரங்களைப் போன்று முக்கியமானதாக இருக்கும்.
௨௧ உண்மையில், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள ஒவ்வொரு பானைக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு “பரிசுத்தம்” என்ற முத்திரையிருக்கும். கர்த்தருக்கு தகன பலிகளை செலுத்தும் ஒவ்வொருவரும் வந்து அவற்றில் சமைத்து உண்ண முடியும்.
அந்நேரத்தில், அங்கு வியாபாரிகள் எவரும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் பொருட்களை விற்கவும் வாங்கவும்மாட்டார்கள்.