௧௧
தாவீது பத்சேபாளைச் சந்திக்கிறான்
௧ வசந்த காலத்தில் அரசர்கள் போர்
புரியப்போகும்போது தாவீது யோவாபையும் அதிகாரிகளையும் அனைத்து இஸ்ரவேலரையும் அம்மோனியரை அழிப்பதற்காக அனுப்பினான். யோவாபின் சேனை பகைவர்களின் தலைநகராகிய ரப்பாவைத் தாக்கிற்று.
ஆனால் தாவீது எருசலேமில் தங்கி விட்டான்.
௨ சாயங்காலத்தில் அவன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனையின் மேல் மாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்தபோது குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் மிகுந்த அழகியாயிருந்தாள்.
௩ உடனே தாவீது தனது அதிகாரிகளை அழைத்து அப்பெண் யாரென விசாரித்தான். ஒரு அதிகாரி, “அப்பெண், எலியாமின் மகளாகிய பத்சேபாள், அவள் ஏத்தியனாகிய உரியாவின் மனைவி” என்றான்.
௪ தாவீது பத்சேபாளைத் தன்னிடம் அழைத்து வருவதற்காக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதிடம் வந்தபோது தாவீது அவளோடு பாலின உறவுகொண்டான். அவள் தன் தீட்டுக்கழிய குளித்தப் பின்பு தன்னுடைய வீட்டிற்குச் சென்றாள்.
௫ ஆனால் பத்சேபாள் கருவுற்றாள். அதனை தாவீதுக்குச் சொல்லியனுப்பி, “நான் கருவுற்றிருக்கிறேன்” எனத் தெரிவித்தாள்.
தாவீது தன் பாவத்தை மறைக்க முயலுவது
௬ தாவீது யோவாபுக்கு, “ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு” என்று சொல்லியனுப்பினான்.
எனவே யோவாப் உரியாவை தாவீதிடம் அனுப்பினான்.
௭ உரியா தாவீதிடம் வந்தான். தாவீது உரியாவிடம், “யோவாப் நலமா, வீரர்கள் நலமா, யுத்தம் எப்படி நடக்கிறது?” என்று விசாரித்தான்.
௮ பின்பு தாவீது உரியாவை நோக்கி, “நீ வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்” என்றான்.
அரசனின் அரண்மனையிலிருந்து உரியா புறப்பட்டான். அரசனும் அவனுக்கு பரிசுக் கொடுத்து அனுப்பினான்.
௯ ஆனால் உரியா தன் வீட்டிற்குப் போகவில்லை. வாசலுக்கு வெளியே அரசனின் பிற பணியாட்கள் செய்ததைப் போலவே அவனும் அங்குத் தூங்கினான்.
௧௦ காவலர்கள் தாவீதை நோக்கி, “உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்றனர்.
தாவீது உரியாவிடம், “நீ நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறாய் அல்லவா? ஏன் வீட்டிற்குப் போகவில்லை?” என்று கேட்டான்.
௧௧ உரியா தாவீதை நோக்கி, “பரிசுத்தப் பெட்டியும், இஸ்ரவேல் யூதாவின் வீரர்களும் கூடாரங்களில் தங்கியுள்ளனர். எனது ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவருடைய (தாவீதின்) அதிகாரிகளும் வெளியே முகாமிட்டுத் தங்கி இருக்கின்றனர். எனவே வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து மனைவியோடு உறவு கொள்வது எனக்கு முறையன்று” என்றான்.
௧௨ தாவீது உரியாவிடம், “நீ இன்று இங்கே தங்கியிரு. நாளை உன்னைப் போருக்கு அனுப்புகிறேன்” என்றான்.
உரியா மறுநாள் காலைவரை எருசலேமில் தங்கியிருந்தான்.
௧௩ அப்போது தாவீது தன்னை வந்து பார்க்கும்படி உரியாவுக்குச் சொல்லியனுப்பினான். உரியா தாவீதுடன் உண்டு குடித்தான். தாவீது உரியாவைக் குடிபோதையில் மூழ்கும்படிச் செய்தான். அப்போதும் உரியா வீட்டிற்குப் போகவில்லை. பதிலாக அரசரின் பணியாட்களோடு வீட்டிற்கு வெளியே உரியா தூங்கச் சென்றான்.
தாவீது உரியாவின் மரணத்திற்கு திட்டமிடுகிறான்
௧௪ மறுநாள், காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதை உரியாவிடம் கொடுத்து அனுப்பினான்.
௧௫ கடிதத்தில் தாவீது, “உரியாவைக் கடும் போர் நடக்கும் யுத்தமுனையில் தனித்து நிறுத்து. போரில் அவன் கொல்லப்படட்டும்” என்றான்.
௧௬ யோவாப் பலசாலிகளான அம்மோனியர் இருக்கும் இடத்தைக் கவனித்தான். உரியாவை அங்கு அனுப்பினான்.
௧௭ ரப்பா நகரத்தின் ஆட்கள் யோவாபை எதிர்த்து போரிட வந்தனர். அப்போது தாவீதின் ஆட்களில் சிலர் கொல்லப்பட்டனர். ஏத்தியனாகிய உரியாவும் அவர்களில் ஒருவன்.
௧௮ யுத்தத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்து யோவாப் ஒரு குறிப்பு எழுதி தாவீதுக்கு அனுப்பினான்.
௧௯ போரில் நடந்தவற்றை தாவீது அரசனுக்குச் சொல்லும்படி தூதுவர்களிடம் யோவாப் கூறினான்.
௨௦ “அரசன் கோபமடையக்கூடும், ‘யோவாபின் படை போரிடுவதற்கு நகரை மிகவும் நெருங்கியதேன்?’ என்று அரசன் கேட்கக் கூடும். அம்புகளை எய்யக்கூடிய ஆட்கள் நகர மதில்களில் அமர்ந்திருப்பார்கள் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்.
௨௧ எருப்சேத்தின் மகனாகிய அபிமெலேக்கை ஒரு பெண் கொன்றாள் என்பதை அவன் நிச்சயமாக அறிவான். அது தேபேசில் நடந்தது. அப்பெண் நகர மதிலில் அமர்ந்திருந்து அரைக்கிற கல்லின் மேல்பாகத்தை அபிமெலேக்கின் மேல் எறிந்தாள். எனவே, ‘ஏன் யோவாப் மதிலுக்கு மிக அருகே சென்றான்?’ என்றும் கேட்கக் கூடும். தாவீது அரசன் இவ்வாறு கூறினால் அவனிடம் இச்செய்தியைக் கூறவேண்டும்: ‘உங்கள் அதிகாரிகளில் ஏத்தியனான உரியாவும் மரித்துவிட்டான்’ ” என்றான்.
௨௨ செய்தியாளன் தாவீதிடம் சென்று யோவாப் கூறியவற்றையெல்லாம் சொன்னான்.
௨௩ அவன் தாவீதிடம், “அம்மோனியர் களத்தில் எங்களை எதிர்த்தார்கள். நாங்கள் போரிட்டு அவர்களை நகரவாயில் வரைக்கும் துரத்தினோம்.
௨௪ அப்போது நகரமதிலிலிருந்த ஆட்கள் உங்கள் அதிகாரிகள் மேல் அம்புகளை எய்தார்கள். உமது சில அதிகாரிகள் அதில் மரித்தனர். அவர்களில் ஏத்தியனாகிய உரியாவும் மரித்தான்” என்றான்.
௨௫ தாவீது அத்தூதுவனிடம் “யோவாபுக்கு இச்செய்தியைத் தெரிவி: ‘இதைக் குறித்து மிகவும் கலங்காதே, ஒரு வாள் ஒருவனை மட்டுமல்ல, அடுத்தவனையும் கொல்லக் கூடும். ரப்பாவின் மீது தாக்குதலைப் பலப்படுத்து. நீ வெற்றி பெறுவாய்’ இந்த வார்த்தைகளால் யோவாபுக்கு உற்சாகமூட்டு” என்று சொல்லியனுப்பினான்.
தாவீது பத்சேபாளைமணந்துகொள்கிறான்
௨௬ தனது கணவன் உரியா மரித்ததை பத்சேபாள் கேள்விப்பட்டாள். அவளது கணவனுக்காக அழுதாள்,
௨௭ அவளது துக்க காலம் முடிந்தபிறகு, தாவீது அவளைத் தனது வீட்டிற்கு அழைத்து வரும்படியாக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதின் மனைவியானாள். அவள் தாவீதுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆனால் தாவீது செய்த இந்த தீமையை கர்த்தர் விரும்பவில்லை.