௨
ஆலயத்தையும் அரண்மனையையும் கட்ட சாலொமோன் திட்டமிடுகிறான்
௧ கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாக்க சாலொமோன் ஆலயம் கட்ட திட்டமிட்டான். மேலும் தனக்காக ஒரு அரண்மனை கட்டிக்கொள்ளவும் சாலொமோன் திட்டமிட்டான்.
௨ மேலும் மலையில் கல் உடைக்கும் பொருட்டு சாலொமோனிடம் 70,000 தொழிலாளர்களும் 80,000 கல் தச்சர்களும் இருந்தார்கள். மேற்பார்வை செய்யும்பொருட்டு 3,600 பேரைத் தேர்ந்தெடுத்தான்.
௩ பிறகு சாலொமோன் ஈராம் என்பவனுக்கு தூது அனுப்பினான். ஈராம் தீரு என்னும் நாட்டின் அரசன். சாலொமோன்,
“என் தந்தையான தாவீதிற்கு உதவிச் செய்தது போன்று எனக்கும் உதவிச் செய்யுங்கள். நீங்கள் கேதுருமரக்கட்டைகளை அனுப்பினீர்கள். அதனால் அவர் தனக்கு அரண்மனை கட்டிக்கொண்டார்.
௪ நான் எனது தேவனாகிய கர்த்தருடைய பெயரை மகிமைப்படுத்துவதற்காக ஒரு ஆலயம் கட்டப்போகிறேன். ஆலயத்தில் கர்த்தருக்கு முன்பாக நாங்கள் நறுமணப் பொருட்களை எரிக்கப்போகிறோம். சிறப்புக்குரிய மேஜையில் பரிசுத்த அப்பத்தை வைக்கப்போகிறோம். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் தகனபலிகளை செலுத்தப் போகிறோம். ஓய்வுநாட்களிலும், பிறைச்சந்திர நாட்களிலும் நமது தேவனாகிய கர்த்தர் கொண்டாடச் சொன்ன பண்டிகை நாட்களிலும் தகனபலிகளை செலுத்தப்போகிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் எக்காலத்திற்கும் கீழ்ப்படியவேண்டிய சட்டம் இது.
௫ “நமது தேவன் மற்ற எல்லாத் தெய்வங்களை விட பெரியவர். எனவே நான் அவருக்காகப் பெரிய ஆலயத்தைக் கட்டுவேன்.
௬ உண்மையில் எவராலும் நம் தேவனுக்கு ஆலயம் கட்டமுடியாது. வானமும் வானாதி வானமும் கூட அவரைத் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே என்னாலும் நமது தேவனுக்கு ஆலயம் கட்டமுடியாது. என்னால் முடிந்ததெல்லாம் அவரை மகிமைப்படுத்த அவருக்கு நறுமணப் பொருட்களை எரிக்க ஒரு இடத்தை அமைப்பதுதான்.
௭ “இப்போது நான் உங்களிடம் ஒரு மனிதனை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவனுக்குப் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலைகளில் திறமை இருக்கவேண்டும் அவனுக்கு இரத்தாம்பர நூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அவன் இங்கு யூதாவிலும் எருசலேமிலும் இருக்கின்றவர்களோடும் என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடும் வேலைச்செய்ய வேண்டும்.
௮ லீபனோனில் உள்ள கேதுரு, தேவதாரு, வாசனை மரங்கள் போன்றவற்றின் பலகைகளையும் அனுப்பவேண்டும். உனது வேலைக்காரர்கள் லீபனோனில் உள்ள மரங்களை வெட்டத் தெரிந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனது வேலைக்காரர்கள் உனது வேலைக்காரர்களுக்கு உதவுவார்கள்.
௯ எனக்கு ஏராளமான மரப்பலகைகள் தேவை. ஏனென்றால் நான் கட்டப்போகும் ஆலயமானது பெரியதாகவும் அழகானதாகவும் இருக்கும்.
௧௦ பலகைகளுக்காக மரத்தை வெட்டப்போகும் உன்னுடைய வேலைக்காரர்களுக்கு நான் கொடுக்கப்போகும் கூலி இதுதான். நான் அவர்களின் உணவுக்காக 20,000 மரக்கால் கோதுமையையும், 20,000 மரக்கால் வாற் கோதுமையையும், 20,000 குடம் திராட்சைரசத்தையும், 20,000 குடம் எண்ணெயையும் கொடுப்பேன்” என்று சொல்லி அனுப்பினான்.
௧௧ பிறகு ஈராம் சாலொமோனுக்குப் பதில் அனுப்பினான். ஈராம் அனுப்பிய செய்தியில் அவன்,
“சாலொமோன், கர்த்தர் தமது ஜனங்களை நேசிக்கிறார். அதனால்தான் அவர்களுக்கு அரசனாக உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டான்.
௧௨ ஈராம் மேலும், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்! அவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் தாவீதிற்கு ஞானமுடைய மகனைக் கொடுத்தார். சாலொமோன், உன்னிடம் ஞானமும் அறிவும் உள்ளது. நீ கர்த்தருக்காக ஆலயம் கட்டிக் கொண்டிருக்கிறாய். நீ உனக்காக ஒரு அரண்மனையும் கட்டுகிறாய்.
௧௩ நான் உன்னிடம் ஈராம் அபி என்னும் கைதேர்ந்த நிபுணனை அனுப்புவேன்.
௧௪ அவனது தாய் தாண் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவள். அவனது தந்தை தீரு என்னும் நாட்டிலிருந்து வந்தவன். ஈராம்அபி பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மரம் போன்றவற்றில் திற மையாக வேலைச் செய்பவன். மேலும் அவன் கருஞ் சிவப்பு, நீலம், சிவப்புத் துணிகள் மற்றும் மென் பட்டுத்துணி போன்றவற்றில் வேலைச்செய்யும் திறமையும்கொண்டவன். அவனால் வரைபடம் அமைக்கவும் நீ சொல்வதுபோல கட்டவும் முடியும். அவன் உனது கைத்தொழில் வல்லுநர்களோடும் உனது தந்தையான அரசன் தாவீதின் கைத் தொழில் வல்லுநர்களோடும் பணியாற்றுவான்.
௧௫ “இப்போது ஐயா, எங்களுக்கு கோதுமையையும், வாற்கோதுமையையும், திராட்சைரசமும், எண்ணெயும் தருவதாக நீங்கள் கூறினீர்கள். அவை அனைத்தையும் என் வேலைக்காரர்களிடம் கொடுங்கள்.
௧௬ நாங்கள் லீபனோன் நாட்டிலிருந்து மரங்களை வெட்டுவோம். நாங்கள் தேவையான அளவிற்கு மரங்களை வெட்டுவோம். நாங்கள் மரப் பலகைகளைக் கட்டி தெப்பங்களைப் போன்று கடல் வழியாக யோப்பாவரை கொண்டுவருவோம். பிறகு நீங்கள் எருசலேமிற்கு அவற்றை எடுத்துச் செல்லலாம்” என்றான்.
௧௭ பிறகு, சாலொமோன் இஸ்ரவேல் நாட்டில் வாழும் அந்நியர்களின் தொகையைக் கணக்கெடுத்தான். இதுபோல ஏற்கெனவே தாவீது அரசனும் கணக்கெடுத்திருக்கிறான். தாவீது சாலொமோனின் தந்தையாகும். அவர்கள் 1,53,600 அந்நியர்கள் இருப்பதை அறிந்தனர்.
௧௮ அவர்களில் 70,000 பேரைப் பொருட்களைத் தூக்கிச்செல்ல தேர்ந்தெடுத்தான். 80,000 பேரை, மலையில் கல்லை வெட்டத் தேர்ந்தெடுத்தான். 3,600 பேரை, மேற்பார்வை செய்யத் தேர்ந்தெடுத்தான்.