௧௦௧
தாவீதின் ஒரு சங்கீதம்
௧ நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன்.
கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன்.
௨ நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர்.
௩ என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன்.
ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன்.
நான் அதைச் செய்யமாட்டேன்!
௪ நான் நேர்மையாக இருப்பேன்.
நான் தீயக் காரியங்களைச் செய்யமாட்டேன்.
௫ யாராவது ஒருவன் தனது அயலானைக் குறித்து இரகசியமாகத் தீயக் காரியங்களைக் கூறினால் நான் அவனைத் தடுத்துவிடுவேன்.
நான் பிறரைப் பெருமைப்படவோ, தாங்கள் பிறரை காட்டிலும் சிறந்தவர்கள் என்று எண்ணவோ விடமாட்டேன்.
 
௬ நம்பத்தக்க ஜனங்களைத் தேசம் முழுவதும் தேடிப்பார்ப்பேன்.
அவர்கள் மட்டுமே எனக்கு சேவைச் செய்ய அனுமதிப்பேன்.
பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மட்டுமே என் பணியாட்களாக முடியும்.
௭ பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன்.
என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன்.
௮ இந்நாட்டில் வாழும் தீயோரை நான் எப்போதும் அழிப்பேன்.
கர்த்தருடைய நகரை விட்டுத் தீயோர் நீங்குமாறு நான் வற்புறுத்துவேன்.