௨
ஞானத்தின் உரையைக் கேளுங்கள்
௧ என் மகனே நான் சொல்லுகின்றவற்றை ஏற்றுக்கொள். என் கட்டளைகளை நினைவில்கொள்.
௨ ஞானத்தின் குரலைக் கேட்டு உன்னால் முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சிசெய்.
௩ ஞானத்தைக் கூப்பிடு. புரிந்துகொள்ளுவதற்காகச் சத்தமிடு.
௪ ஞானத்தை வெள்ளியைப்போல் தேடு, மறைந்துள்ள புதையல்களைத் தேடுவதுபோன்று தேடு.
௫ நீ இவற்றைச் செய்தால், கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வாய். நீ உண்மையிலேயே தேவனைப் பற்றிக் கற்றுக்கொள்ளலாம்.
௬ கர்த்தர் ஞானத்தைக் கொடுக்கிறார். அவரது வாயிலிருந்து அறிவும் புரிந்துகொள்ளுதலும் வருகின்றன.
௭ நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் அவர் உதவி செய்கிறார்.
௮ மற்றவர்களிடம் நேர்மையாக நடந்துகொள்பவர்களை அவர் காப்பாற்றுகிறார். அவர் தனது பரிசுத்தமான ஜானங்களைக் காக்கிறார்.
௯ கர்த்தர் உனக்கு ஞானத்தைக் கொடுப்பார். அப்போது நீ நல்லவற்றையும், நேர்மையானவற்றையும், சரியானவற்றையும் புரிந்துகொள்ளுவாய்.
௧௦ ஞானம் உனது இருதயத்திற்குள் வரும். உனது ஆத்துமா அறிவால் மகிழ்ச்சி அடையும்.
௧௧ ஞானம் உன்னைக் காப்பாற்றும். புரிந்துகொள்ளுதல் உன்னைப் பாதுகாக்கும்.
௧௨ ஞானமும் புரிந்துகொள்ளுதலும் கெட்டவர்களைப் போன்று தீயவழியில் செல்வதைத் தடுக்கும். அந்த ஜனங்களின் வார்த்தைகளில்கூட தீமை இருக்கும்.
௧௩ அவர்கள் நேர்மையையும், நன்மையையும் விட்டுவிட்டு பாவத்தின் இருளில் வாழ்கிறார்கள்.
௧௪ அவர்கள் தீமை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கெட்ட வழிகளில் செல்வதில் சந்தோஷம் அடைகிறார்கள்.
௧௫ அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களல்ல. அவர்கள் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள். ஆனால் உனது ஞானமும் புரிந்துகொள்ளுதலும் இவை அனைத்திலுமிருந்து உன்னை விலக்கி வைக்கும்.
௧௬ அந்நிய பெண்ணிடமிருந்து ஞானம் உன்னைப் பாதுகாக்கும். மென்மையான வார்த்தைகளைப் பேசி உன்னைத் தன்னோடு சேர்ந்து பாவம்செய்யத் தூண்டும் அவளிடமிருந்து ஞானம் உன்னைக் காக்கும்.
௧௭ அப்பெண் இளமையில் திருமணமாகித் தன் கணவனைவிட்டு விலகியிருக்கலாம். அவள் தேவனுக்கு முன் செய்த தனது திருமண ஒப்பந்தத்தை மறந்தாள்.
௧௮ அவளுடைய வீட்டிற்குள் செல்வது மரணத்திற்கு வழிவகுக்கும். தொடர்ந்து அவளைப் பின்பற்றி நீ சென்றால் அவள் உன்னைக் கல்லறைக்கு அழைத்துச் செல்வாள்.
௧௯ அவள் ஒரு கல்லறையைப் போன்றவள். அவளிடத்தில் செல்பவன் ஒருபோதும் திரும்பி வருவதில்லை. அவன் தன் வாழ்வை இழப்பான்.
௨௦ ஞானம் நீ நல்லவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றிச் செல்ல உதவிசெய்யும். நல்லவர்களின் வழியில் நீ வாழ ஞானம் உதவி செய்யும்.
௨௧ சரியான வழியில் வாழ்கிறவர்கள் தங்கள் நாட்டிலேயே வாழ்வார்கள். எளிமையானவர்களும் நேர்மையானவர்களும் தம் சொந்த ஊரில் தொடர்ந்து வாழலாம்.
௨௨ ஆனால் பொய்பேசுகிறவர்களும் ஏமாற்றுகிறவர்களும் தம் நாட்டை இழப்பார்கள். தீயவர்கள் தம் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.