பேதுரு
எழுதிய முதலாம் கடிதம்
௧
௧ இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுருவிடமிருந்து, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய இடங்களெங்கும் அந்நியர்களாகச் சிதறி வாழ்ந்துகொண்டிருக்கிற தேவனுடைய மக்களுக்கு:
௨ பிதாவாகிய தேவன் நெடுங்காலத்துக்கு முன்பே செய்த திட்டப்படி தேவனுடைய மக்களாக இருக்க நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். ஆவியானவரின் சேவை வழியாக அவருக்கு நீங்கள் அர்ப்பணிக்கப்பட்டீர்கள். தேவனுக்குக் கீழ்ப்படியவும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்பட்டு பரிசுத்தமடையவும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.
கிருபையையும், சமாதானத்தையும் தேவன் உங்களுக்கு மென்மேலும் வழங்குவாராக.
வாழும் நம்பிக்கை
௩ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக. தேவன் தம் இரக்கத்தால் அழிவில்லாத ஒரு நம்பிக்கையை நாம் அடையும்பொருட்டு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் நமக்குப் புது வாழ்வையளித்தார்.
௪ இப்பொழுது தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு பரலோகத்தில் வைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களை நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கின்றோம். அந்த ஆசீர்வாதங்கள் அழிவற்றது; அழிக்கப்பட முடியாதது; அதன் அழகு மாறாதது.
௫ இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உரியவை. இறுதி நேரத்தில் தம் வல்லமையை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிற இரட்சிப்புக்காக விசுவாசத்தின் மூலம் தேவனுடைய வல்லமையால் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
௬ இது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும். சில சமயங்களில் பல்வேறு வகைப்பட்ட தொந்தரவுகள் உங்களுக்கு துயரத்தைத் தரலாம்.
௭ ஏன் இந்தத் துன்பங்கள் நிகழ்கின்றன? உங்கள் விசுவாசம் பரிசுத்தமானது என்று நிரூபிப்பதற்கேயாகும். இந்த விசுவாசத்தின் பரிசுத்தம் பொன்னைக் காட்டிலும் சிறந்தது. பொன்னின் சுத்தத் தன்மை நெருப்பால் சோதித்தறியப்படுகிறது. ஆனால் பொன் அழிவுறும். இயேசு கிறிஸ்து வரும்போது, உங்கள் விசுவாசத்தின் பரிசுத்தமானது உங்களுக்கு கனத்தையும், மகிமையையும், புகழ்ச்சியையும் கொடுக்கும்.
௮ நீங்கள் கிறிஸ்துவைப் பார்த்ததில்லை. அப்படியிருந்தும் அவரை நேசிக்கிறீர்கள். நீங்கள் இப்போது அவரைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவரை விசுவாசிக்கிறீர்கள். சொல்லமுடியாத சந்தோஷத்தால் உங்கள் மனம் நிரம்பும். அச்சந்தோஷம் மகிமை மிகுந்தது.
௯ உங்கள் விசுவாசம் ஒரு குறிக்கோளை உடையது. இறுதியில் உங்கள் ஆத்தும இரட்சிப்பாகிய நற்பலனைப் பெறுவீர்கள்.
௧௦ உங்களுக்குக் காட்டப்பட வேண்டிய கிருபையைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் கவனமாக ஆராய்ந்து இந்த இரட்சிப்பைப் பற்றி அறிய முயன்றிருக்கிறார்கள்.
௧௧ இயேசு கிறிஸ்துவின் ஆவியானவர் அத்தீர்க்கதரிசிகளிடம் இருந்தார். கிறிஸ்துவுக்கு நேர இருக்கிற துன்பங்களைப் பற்றியும் அதைத் தொடர்ந்து வரப்போகும் மகிமையைப் பற்றியும் அந்த ஆவியானவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அந்த ஆவியானவர் எதைக் குறித்து பேசுகிறார் என்று அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள். அச்சம்பவங்கள் நடக்கும் நேரம் மற்றும் சூழ்நிலை பற்றி அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள்.
௧௨ அவர்கள் செய்த பணி அவர்களுக்குரியதல்லவென்று அந்தத் தீர்க்கதரிசிகளுக்கு உணர்த்தப்பட்டது. தீர்க்கதரிசிகள் உங்களுக்காகப் பணியாற்றினார்கள். இவ்விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசியபொழுது அவர்கள் உங்களுக்கு சேவை செய்துகொண்டிருந்தனர். நற்செய்தியை உங்களுக்குப் போதித்த மனிதர்களே அச்செய்திகளையும் உங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். பரலோகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் உதவியால் அவர்கள் அதை உங்களுக்குக் கூறினார்கள். தேவ தூதர்களும் அறிந்துகொள்ள விரும்புகின்ற காரியங்கள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டன.
பரிசுத்த வாழ்க்கைக்கான அழைப்பு
௧௩ எனவே உங்கள் மனங்களை சேவைக்கு ஆயத்தப்படுத்தி, தன்னடக்கத்தோடிருங்கள். இயேசு கிறிஸ்து தோன்றும்போது உங்களுக்கு வாய்க்கப் போகிற கிருபையின் பரிசின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள்.
௧௪ கடந்த காலத்தில் இந்தக் காரியங்களை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே நீங்கள் விரும்பிய தீயசெயல்களைச் செய்து வந்தீர்கள். ஆனால் இப்போது கீழ்ப்படிகிற தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்கள். எனவே ஏற்கெனவே நீங்கள் கொண்டிருந்த தீய ஆசைகளுக்கு ஏற்ப வாழ்வதை நிறுத்துங்கள்.
௧௫ உங்களை அழைத்த தேவன் பரிசுத்தமானவர். ஆதலால் நீங்களும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமானவர்களாக இருங்கள்.
௧௬ வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “நான் பரிசுத்தராக இருப்பதால், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.”
௧௭ தேவனிடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவரை பிதா என்று அழையுங்கள். ஒவ்வொரு மனிதனின் வேலையையும் சமமாக நோக்கி தேவன் பாரபட்சம் இன்றி நியாயம் வழங்குகிறார். எனவே நீங்கள் இவ்வுலகில் வாழும்போது தேவனிடம் பயத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டும்.
௧௮ நீங்கள் கடந்த காலத்தில் தகுதியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தீர்கள். உங்கள் முன்னோர்கள் மூலமாக அவ்வாழ்க்கை முறையை நீங்கள் அறிந்துகொண்டீர்கள். அப்படிப்பட்ட வாழ்விலிருந்து நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என அறிவீர்கள். இந்த இரட்சிப்பு அழியும் பொருட்களாகிய பொன், வெள்ளி போன்றவற்றால் அல்ல,
௧௯ குற்றம் குறையில்லாத ஆட்டுக் குட்டியான இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால் நிகழ்ந்ததாகும்.
௨௦ உலகம் உருவாக்கப்படும் முன்னே கிறிஸ்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் உங்கள் பயனுக்காக இந்தக் கடைசி நாட்களில் வெளிப்படுத்தப்பட்டார்.
௨௧ நீங்கள் கிறிஸ்துவின் மூலமாக தேவனை விசுவாசிக்கிறீர்கள். தேவன் கிறிஸ்துவை மரணத்தினின்று எழும்பி அவருக்கு மகிமையை அளித்தார். எனவே உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவனில் உள்ளன.
௨௨ உண்மைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உங்களை நீங்களே பரிசுத்தமுடையோராக ஆக்கிக்கொண்டீர்கள். இதன் மூலம் உங்கள் உண்மையான சகோதர அன்பைக் காட்டமுடியும். எனவே இப்பொழுது பரிசுத்தமான இதயத்தோடு ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள்.
௨௩ நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பது அழியத்தக்க விதையில் இருந்து அல்ல, அழிவேயற்ற விதையின் மூலம் ஆகும். எப்போதும் தொடரும் தேவனுடைய அழிவில்லாத விதையாகிய வசனங்களினால் மீண்டும் பிறந்துள்ளீர்கள்.
௨௪ வேதவாக்கியங்கள்,
“எல்லா மனிதர்களும் புல்லைப் போன்றவர்கள்.
புல்லின் மலரைப் போன்றே அவர்களின் மகிமையும் காணப்படும்.
புல் உலர்ந்து போகிறது.
பூக்கள் உதிர்கின்றன.
௨௫ ஆனால் கர்த்தரின் வார்த்தையோ என்றும் நிலைத்திருக்கிறது” ஏசாயா 40:6-8
என்று சொல்கிறது. இந்த வார்த்தையே உங்களுக்குச் சொல்லப்பட்டது.