௩௧
மீதியானியர்களுடன் இஸ்ரவேலர்களின் யுத்தம்
௧ மோசேயிடம் கர்த்தர் பேசினார். அவர்,
௨ “மீதியானியர்களையும் மேற்கொள்ளும்படியாக நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவுவேன். அதன் பிறகு நீ மரித்துப் போவாய்” என்றார்.
௩ எனவே மோசே ஜனங்களோடு பேசினான். அவன் “உங்கள் ஆண்களில் வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். கர்த்தர் அவர்களை மீதியானியர்களையும் வெல்லும்படி செய்வார்.
௪ இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் 1,000 ஆண்களைத் தேர்ந்தெடுங்கள்.
௫ ஆகமொத்தம் இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்து 12,000 பேர் வீரர்களாவார்கள்” என்றான்.
௬ மோசே அவர்களைப் போருக்கு அனுப்பினான். ஆசாரியனாகிய எலெயாசாரின் மகனான பினேகாசையும் அவர்களோடு அனுப்பினான். எலெயாசார் பரிசுத்தமான பொருட்களோடு, கொம்புகளையும், எக்காளத்தையும் எடுத்து சென்றான்.
௭ இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டபடியே மீதியானியர்களோடு போரிட்டு அவர்களைக் கொன்றனர்.
௮ மீதியானிய அரசர்களில் ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் ஐந்து பேரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் பேயோரின் மகனான பிலேயாமையும் வாளால் கொன்றார்கள்.
௯ இஸ்ரவேல் ஜனங்கள் மீதியானிய பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாகப் பிடித்தனர். அவர்களது மந்தைகளையும் பசுக்களையும் மற்ற யாவற்றையும் எடுத்துக்கொண்டனர்.
௧௦ பிறகு அவர்களது நகரங்களையும், கிராமங்களையும் எரித்துவிட்டனர்.
௧௧ அவர்கள் அனைத்து ஜனங்களையும், மிருகங்களையும் கைப்பற்றினர்.
௧௨ தாங்கள் கைப்பற்றிய அனைத்தையும் மோசேயிடம், ஆசாரியனாகிய எலெயாசார் மற்றும் மற்ற ஜனங்களிடத்திலும் கொண்டு வந்தனர். அங்கே அவர்கள் கவர்ந்த அனைத்துப் பொருட்களையும் முகாமுக்குள் கொண்டு வந்தனர். மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் அவர்கள் கூடாரம் அமைத்திருந்தனர். அந்த இடம் யோர்தானைக் கடந்து கிழக்குப் பகுதியில் எரிகோவின் எதிரில் இருந்தது.
௧௩ பிறகு மோசேயும், ஆசாரியனாகிய எலெயாசாரும், ஜனங்கள் தலைவர்களும் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து வீரர்களைச் சந்தித்தனர்.
௧௪ படைத்தலைவர்களுக்கு எதிராக மோசே கோபங்கொண்டான். அவன் போரிலிருந்து திரும்பி வந்திருந்த 1,000 வீரர்களின் தலைவரோடும் 100 வீரர்களின் தலைவரோடும் கோபங்கொண்டான்.
௧௫ மோசே அவர்களிடம், “ஏன் பெண்களை உயிரோடு விட்டீர்கள்.
௧௬ இப்பெண்களே பிலேயாமின் நாட்களில் பேயோரில் நடந்ததுபோல் இஸ்ரவேல் ஆண்கள் கர்த்தரை விட்டு விலகுவதற்கு காரணமாயிருந்தவர்கள். கர்த்தருடைய ஜனங்களுக்கு மீண்டும் அந்த நோய் ஏற்படும்.
௧௭ இப்போது எல்லா மீதியானிய சிறுவர்களையும், வாழ்க்கைப்பட்ட மீதியானிய பெண்களையும், ஒருவனோடு பாலின உறவுகொண்ட ஒவ்வொரு மீதியானிய பெண்ணையும் கொன்றுவிடுங்கள்.
௧௮ எந்தவொரு மனிதனோடும் பாலின உறவுகொள்ளாத இளம் பெண்ணை மட்டும் வாழவிடுங்கள்.
௧௯ பிறகு மற்றவர்களைக் கொன்ற அனைவரும் கூடாரத்திற்கு வெளியே ஏழு நாட்கள் தங்கி இருங்கள். உங்களில் எவரேனும் பிணத்தைத் தொட்டிருந்தாலும் அவன் கூடாரத்திற்கு வெளியே இருக்கவேண்டும். மூன்றாவது நாள், நீங்களும் உங்கள் கைதிகளும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இவற்றை மீண்டும் நீங்கள் ஏழாவது நாள் செய்ய வேண்டும்.
௨௦ நீங்கள் உங்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அதோடு தோல், கம்பளி, மரம் போன்றவற்றால் செய்யப்பட்டப் பொருட்களையும் கழுவவேண்டும். நீங்கள் சுத்தமாக வேண்டும்” என்றார்.
௨௧ பிறகு ஆசாரியனாகிய எலெயாசார் வீரர்களோடு பேசினான். அவன், “இவ்விதிகள் எல்லாம் கர்த்தரால் மோசேக்குக் கொடுக்கப்பட்டவை. இவ்விதிகள் போரிலிருந்து திரும் பிவரும் வீரர்களுக்கு உரியவை.
௨௨-௨௩ ஆனால் நெருப்பில் இடப்படும் பொருள்களுக்கு உரிய விதிகள் வேறு விதமானவை. நீங்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம் போன்றவற்றை நெருப்பில் இடலாம். பிறகு அவற்றை தண்ணீரில் கழுவும்போது அவை சுத்தமாகும். நெருப்பில் இட முடியாத பொருட்களை தண்ணீரால்தான் சுத்தப்படுத்த முடியும்.
௨௪ ஏழாவது நாளில் உங்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். பிறகு நீங்கள் சுத்தம் அடைவீர்கள். அதன் பின்னரே நீங்கள் கூடாரத்திற்குள் வரமுடியும்” என்றான்.
௨௫ பிறகு கர்த்தர் மோசேயிடம்,
௨௬ “நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் தலைவர் அனைவரும் கைதிகளையும், மிருகங்களையும், கைப்பற்றி வந்த பொருட்களையும், எண்ணிக் கணக்கிட வேண்டும்.
௨௭ பிறகு அவற்றைப் போருக்குச் சென்று வந்த வீரர்களுக்கும், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பங்கிட வேண்டும்.
௨௮ போருக்குச் சென்று வந்த வீரர்களிடமிருந்து ஒரு பகுதியை எடு. அது கர்த்தருக்கு உரியது. 500-ல் ஒன்று கர்த்தருடைய பங்காகும். இது ஜனங்கள், பசுக்கள், கழுதைகள், ஆடுகள் என அனைத்திற்கும் பொருந்தும்.
௨௯ அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்க வேண்டும். இது கர்த்தருக்கு உரிய பங்காகும்.
௩௦ பிறகு பிற ஜனங்களுடைய பங்கில் 50-ல் ஒன்றை எடு. இது ஜனங்கள், பசுக்கள், கழுதைகள், ஆடுகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும். இப்பங்கை வேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் லேவியர்கள் கர்த்தருடைய பரிசுத்தக் கூடாரத்திற்குப் பொறுப்பாளிகள்” என்றார்.
௩௧ மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளையின்படி மோசேயும் எலெயாசாரும் செய்தனர்.
௩௨ வீரர்கள் 6,75,000 ஆடுகளையும்,
௩௩ 72,000 பசுக்களையும்
௩௪ 61,000 கழுதைகளையும்,
௩௫ 32,000 பெண்களையும் கைப்பற்றியிருந்தனர். (இப்பெண்கள் எந்த ஆணோடும் இதுவரை பாலின உறவு கொள்ளாதவர்கள்.)
௩௬ இவற்றில் போருக்குச் சென்ற வீரர்கள் 3,37,500 ஆடுகளைப் பெற்றார்கள்.
௩௭ அவர்கள் 675 ஆடுகளைக் கர்த்தருக்குக் கொடுத்தனர்.
௩௮ வீரர்கள் 36,000 பசுக்களைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 72 பசுக்களைக் கர்த்தருக்குக் கொடுத்தனர்.
௩௯ வீரர்கள் 30,500 கழுதைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 61 கழுதைகளை கர்த்தருக்குக் கொடுத்தனர்.
௪௦ வீரர்கள் 16,000 பெண்களை அடைந்தனர். அவர்களில் 32 பெண்களைக் கர்த்தருக்கு அர்ப்பணித்தனர்.
௪௧ கர்த்தர் அவனுக்கு ஆணையிட்டபடி கர்த்தருக்கு உரிய இந்த அன்பளிப்புகளையெல்லாம் ஆசாரியனான எலெயாசாரிடம் மோசே கொடுத்தான்.
௪௨ பிறகு மோசே வீரர்கள் கைப்பற்றிய வைகளில் இஸ்ரவேல் ஜனங்களுக்குரிய பங்காகிய பாதிப்பகுதியை எண்ணினான். போருக்குச் சென்ற வீரர்களிடமிருந்து மோசே ஜனங்களுக்காகப் பெற்றுக்கொண்டதாவது.
௪௩ 3,37,500 ஆடுகள்,
௪௪ 36,000 பசுக்கள்.
௪௫ 30,500 கழுதைகள்,
௪௬ 16,000 பெண்களையும் பெற்றனர்.
௪௭ இவற்றில் 50-ல் ஒன்றைக் கர்த்தருக்காக மோசே எடுத்துக்கொண்டான். இவற்றில் ஜனங்களும் மிருகங்களும் அடங்கும். பிறகு அவன் அவற்றை லேவியர்களுக்குக் கொடுத்தான், ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தமான கூடாரத்தைக் கவனிப்பவர்கள். மோசே இதனைக் கர்த்தருடைய கட்டளைப்படி செய்து முடித்தான்.
௪௮ பிறகு படைத்தலைவர்கள் (இவர்கள் 1,000 பேருக்கு தலைவராகவும் 100 பேருக்கு தலைவராகவும் இருந்தனர்.) மோசேயிடம் வந்தனர்.
௪௯ அவர்கள் மோசேயிடம், “நாங்கள் உங்களது வேலைக்காரர்கள். எங்கள் வீரர்களை எண்ணி கணக்கிட்டிருக்கிறோம். அவர்களில் யாரையும் தவறவிடவில்லை.
௫௦ நாங்கள் ஒவ்வொரு வீரரிடமிருந்தும் கர்த்தருக்குரிய அன்பளிப்புகளைக் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கொண்டு வந்தவற்றுள், தங்கத்தாலான வளையங்கள், கை வளையல்கள், மோதிரங்கள், காதணிகள், கழுத்தணிகள் ஆகியவை அடங்கும். கர்த்தருக்கான இந்த அன்பளிப்புகள் எங்களைத் சுத்தப்படுத்தும்” என்றார்கள்.
௫௧ எனவே மோசே பொன்னாலான அத்தனை அணிகலன்களையும் எடுத்து ஆசாரியனான எலெயாசாரிடம் கொடுத்தான்.
௫௨ 1,000 பேருக்கும், 100 பேருக்கும் தலைவரானவர்கள் கொடுத்த பொன்னணிகள் 420 பவுண்டு இருந்தது.
௫௩ வீரர்கள் தங்கள் பங்காகக் கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டனர்.
௫௪ மோசேயும், ஆசாரியனான எலெயாசாரும் 1,000 ஆண்களுக்கும் 100 ஆண்களுக்கும் உரிய தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர். பிறகு அவர்கள் அவற்றை ஆசரிப்புக் கூடாரத்தில் வைத்தனர். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நினைவு அடையாளமாக வைக்கப்பட்டது.