௨
அர்தசஷ்டா அரசன் நெகேமியாவை எருசலேமிற்கு அனுப்புகிறான்
௧ அர்தசஷ்டா அரசனின் இருபதாம்
ஆட்சியாண்டில், நிசான் மாதத்தில் கொஞ்சம் திராட்சை ரசம் அரசனுக்கு கொண்டுவரப்பட்டது. நான் திராட்சைரசத்தை எடுத்து அரசனுக்கு கொடுத்தேன். நான் அரசனோடு இருக்கும்போது எப்பொழுதும் துக்கமாக இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது நான் துக்கமாய் இருந்தேன்.
௨ எனவே அரசன் என்னிடம், “நீ நோயுற்றிருக்கிறாயா? ஏன் துக்கமாய் காணப்படுகிறாய்? உனது இதயம் துக்கத்தால் நிறைந்திருப்பது போன்று நான் எண்ணுகிறேன்” என்று கேட்டான்.
பிறகு நான் மிகவும் பயந்தேன்.
௩ பயந்தாலும் கூட நான் அரசனிடம், “அரசன் என்றென்றும் வாழ்வாராக! நான் துக்கமாய் இருக்கிறேன். ஏனென்றால் எனது முற்பிதாக்களின் கல்லறைகள் உள்ள நகரம் பாழாயிற்று. அதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன” என்றேன்.
௪ பிறகு அரசன் என்னிடம், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகின்றாய்?” என்று கேட்டான்.
நான் பதில் சொல்வதற்கு முன்னால் நான் பரலோகத்தில் இருக்கிற தேவனிடம் ஜெபம் செய்தேன்.
௫ பிறகு நான் அரசனுக்கு, “இது அரசனுக்கு பிடித்தமானதாக இருந்தால், நான் உமக்கு நல்லவனாக இருந்திருந்தால், தயவுசெய்து எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள யூதாவிற்கு என்னை அனுப்பும். யூதாவில் நான் போய் எருசலேம் நகரத்தை மீண்டும் கட்ட விரும்புகிறேன்” என்று பதில் சொன்னேன்.
௬ அரசி அரசனுக்கு அடுத்து அமர்ந்துக் கொண்டிருந்தாள். அரசன் என்னிடம், “நீ போய் வர எவ்வளவு காலம் எடுக்கும். நீ இங்கே எப்பொழுது திரும்பி வருவாய்?” என்று கேட்டான்.
அரசன் என்னை அனுப்புவதில் சந்தோஷப்பட்டான். எனவே நான் அவனுக்குக் குறிப்பிட்ட காலத்தைச் சொன்னேன்.
௭ நான் அரசனிடம், “அரசனுக்கு விருப்பமானால் எனக்கு உதவலாம். நான் உதவி கேட்கலாமா? ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளின் ஆளுநர்களிடம் காட்ட எனக்கு சில கடிதங்களைத் தயவு செய்துக் கொடும். யூதாவிற்கு போகும் வழியில், அவர்களின் பகுதிகளின் வழியாகப் போவதற்கான அனுமதியை ஆளுநர்களிடம் பெற இக்கடிதங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன.
௮ வாசல்கள், சுவர்கள், ஆலயத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் மற்றும் எனது வீடு ஆகியவற்றிற்குத் தேவையான மரத்தடிகள் எனக்குத் தேவைப்படுகின்றது. எனவே உம்மிடமிருந்து ஆசாப்பிற்கு ஒரு கடிதம் எனக்குத் தேவை. உமது காடுகளுக்கு ஆசாப் பொறுப்பு அதிகாரி” என்றேன்.
அரசன் எனக்குக் கடிதங்களைக் கொடுத்தான். நான் கேட்டவற்றையெல்லாம் கூட கொடுத்தான். ஏனென்றால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்ததால், அரசன் இவற்றைச் செய்தான்.
௯ எனவே, நான் ஐபிராத்து நதியின் மேற்குப் பகுதியின் ஆளுநர்களிடம் சென்றேன். அரசனிடமிருந்து பெற்ற கடிதங்களை ஆளுநர்களிடம் கொடுத்தேன். அரசன் என்னுடன் படை அதிகாரிகளையும் குதிரை வீரர்களையும் அனுப்பியிருந்தான்.
௧௦ நான் என்ன செய்துகொண்டிருக்கின்றேன் என்பது பற்றி சன்பல்லாத்தும் தொபியாவும் கேள்விப்பட்டனர். அவர்கள் இடிந்து போனார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவ ஒருவன் வந்திருக்கிறான் என்று அறிந்து கோபமுற்றனர். சன்பல்லாத் ஓரோனியனிலிருந்தும் தொபியா அம்மோனியாவிலிருந்தும் வந்த அதிகாரிகள்.
நெகேமியா எருசலேம் சுவர்களைக் கண்காணிக்கிறான்
௧௧-௧௨ நான் எருசலேமிற்குப் போனேன். நான் அங்கு மூன்று நாட்கள் தங்கினேன். பிறகு இரவில் நான் சில மனிதர்களோடு புறப்பட்டேன். எருசலேமிற்காக என்ன செய்யவேண்டும் என்று தேவன் என் இதயத்தில் வைத்திருக்கிறார் என்பதைப்பற்றி நான் எவரிடமும் சொல்லியிருக்கவில்லை. நான் சவாரி செய்து வந்த குதிரையைத் தவிர வேறு குதிரைகள் என்னிடம் இல்லை.
௧௩ இருட்டாக இருக்கும்போது நான் பள்ளத்தாக்கின் வாசல் வழியாகப் போய் வலுசர்ப்பத்துரவு மற்றும் குப்பைமேட்டு வாசலை நோக்கிச் சவாரி செய்தேன். உடைக்கப்பட்டிருந்த எருசலேமின் சுவர்களையும், நெருப்பால் எரிக்கப்பட்டிருந்த சுவர்களிலுள்ள வாசல்களையும் நான் பார்வையிட்டேன்.
௧௪ பிறகு நான் அங்கிருந்து நீருற்று வாசலுக்கும் அரசனின் குளத்துக்கும் சென்றேன். ஆனால் நான் அருகில் நெருங்கும்போது எனது குதிரை செல்வதற்குப் போதிய இடம் இல்லை என்பதைக் கண்டுக்கொள்ள முடிந்தது.
௧௫ எனவே, இருட்டில் நான் பள்ளத்தாக்கிற்குச் சென்றேன். இறுதியாக நான் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல் வழியாகத் திரும்பி வந்தேன்.
௧௬ இஸ்ரவேலின் முக்கிய அதிகாரிகளும் மற்ற ஜனங்களும் நான் எங்கே போய் வந்தேன் என்பதையும், நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என்பதையும் அறியவில்லை. யூதர்கள், ஆசாரியர்கள், அரச குடும்பத்தினர், அதிகாரிகள், அந்தந்த வேலையைச் செய்யபோகும் ஜனங்களுக்கும் நான் எதுவும் சொல்லவில்லை.
௧௭ பிறகு நான் அந்த ஜனங்களிடம், “இங்கே நமக்குள்ள துன்பத்தை உங்களால் பார்க்க முடியும். எருசலேம் பாழாகியிருக்கிறது. இதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டிருக்கின்றன. வாருங்கள் மீண்டும் நாம் எருசலேமின் சுவர்களைக் கட்டுவோம். அதன் பின் ஒருபோதும் நாம் அவமானமடைந்தவர்களாக இருக்கமாட்டோம்” என்றேன்.
௧௮ நான் அந்த ஜனங்களிடம் தேவன் என்னிடம் கருணையோடு இருப்பதைப் பற்றியும் சொன்னேன். அரசன் என்னிடம் சொல்லியிருந்தவற்றைப் பற்றியும் நான் அவர்களிடம் சொன்னேன். பிறகு அந்த ஜனங்கள், “இப்பொழுது நாம் வேலையை ஆரம்பிக்கலாம்” என்று பதிலுரைத்தனர். எனவே இந்த நல்ல வேலையை நாங்கள் தொடங்கினோம்.
௧௯ ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும் அம்மோனியனான தொபியா என்னும் வேலைக்காரனும் அரபியனான கேஷேமும் நாங்கள் மீண்டும் கட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் கேள்விப்பட்டனர். அவர்கள் மிக இழிவான வழியில் எங்களைக் கேலிச் செய்தனர். அவர்கள், “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் அரசனுக்கு எதிராகிக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டனர்.
௨௦ ஆனால் நான் அந்த மனிதர்களிடம். “பரலோகத்தில் உள்ள தேவன் எங்களுக்கு கைக்கூடிவர உதவுவார். நாங்கள் தேவனுடைய அடியார்கள். நாங்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்டுவோம். இந்த வேலைக்கு நீங்கள் எங்களுக்கு உதவ முடியாமல் போகும். உங்கள் குடும்பத்தில் எவரும் இங்கே எருசலேமில் வாழவில்லை. இந்த நாட்டை நீங்கள் சொந்தம் கொள்ளவில்லை. இந்த இடத்தில் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை” என்று சொன்னேன்.