௬
மற்ற பாவங்களுக்கான குற்ற பரிகார பலிகள்
௧ கர்த்தர் மோசேயிடம்,
௨ “கர்த்தர் சொன்னவற்றுக்கு எதிராக ஒருவன் இந்தப் பாவங்களில் ஒன்றைச் செய்திருக்கலாம். ஒருவன் தான் பெற்ற தொகையைப்பற்றிப் பொய் சொல்லலாம். ஒருவன் சிலவற்றைத் திருடியிருக்கலாம். அல்லது ஒருவன் இன்னொருவனை ஏமாற்றியிருக்கலாம்.
௩ அல்லது ஒருவன் காணாமல் போனதைக் கண்டுபிடித்து விட்டு பின் அதுபற்றி பொய் சொல்லலாம்; அல்லது ஒருவன் ஒன்றைச் செய்வதாகச் சத்தியம் செய்துவிட்டு சத்தியத்தின்படி செய்யாமல் இருக்கலாம். அல்லது ஒருவன் வேறுவிதமான தவறுகள் செய்யலாம்.
௪ ஒருவன் மேற்கூறியபடி ஏதேனும் ஒன்றைச் செய்வானேயானால் அவன் பாவியாகக் கருதப்படுகிறான். அவன் எதைத் திருடியிருந்தாலும் திரும்பிக் கொண்டுவந்து கொடுக்கவேண்டும். ஏமாற்றிப் பொருளை எடுத்திருந்தாலும், பாதுகாப்புக்காக இன்னொருவன் தன்னிடம் கொடுத்து வைத்த பொருளை எடுத்திருந்தாலும், எதையாவது கண்டுபிடித்து பொய் சொல்லியிருந்தாலும்
௫ அல்லது சத்தியம் செய்துவிட்டு அதை நிறை வேற்றாமல் இருந்தாலும் சரிசெய்துகொள்ள வேண்டும். அவன் அதற்குரிய முழுமையான விலையைக் கொடுக்க வேண்டும். அதோடு அவற்றில் மதிப்பில் ஐந்தில் ஒரு பாகத்தை அதிகமாகக் கொடுக்க வேண்டும். அத்தொகையை அதன் உண்மையான சொந்தக்காரனுக்குக் கொடுக்க வேண்டும். அவன் இவற்றையெல்லாம் கொண்டுவந்து தரும் நாளிலேயே குற்ற நிவாரண பலியைச் செலுத்த வேண்டும்.
௬ அவன் தன் குற்றபரிகாரப் பலியை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். அது மந்தையிலிருந்து தேர்ந்தெடுத்த ஆடாயிருக்க வேண்டும். எல்லாவிதத்திலும் குறையற்றதாக இருக்கவேண்டும். ஆசாரியன் சொல்லும் விலைக்கு ஏற்றதாக அது இருக்கவேண்டும். அது கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய குற்ற பரிகாரப் பலியாகும்.
௭ பிறகு ஆசாரியன் கர்த்தரிடம் சென்று அம்மனிதன் சுத்தமாவதற்குரியவற்றைச் செய்வான். தேவனும் அவன் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் அவனை மன்னித்துவிடுவார்” என்று கூறினார்.
தகன பலிகள்
௮ மேலும் கர்த்தர் மோசேயிடம்,
௯ “இந்தக் கட்டளையை ஆரோனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் சொல். இதுவே தகன பலியைப்பற்றிய சட்டங்கள். தகனபலி இரவு முழுவதும் விடியும்வரை பலிபீடத்தின் மேல் இருக்க வேண்டும். காணிக்கைக்குத் தேவையான நெருப்பானது பலிபீடத்தின் மேல் எரிந்துக்கொண்டிருக்க வேண்டும்.
௧௦ ஆசாரியன் தனது மெல்லிய அங்கியை உடுத்திக்கொண்டு, தனது மெல்லிய உள்ளாடையை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு ஆசாரியன் பலிபீடத்தின் மேல் மீதியாய் இருக்கும், தகனபலியை எரித்த சாம்பலை எடுத்து அதனைப் பலிபீடத்தின் பக்கத்திலே கொட்ட வேண்டும்.
௧௧ பிறகு ஆசாரியன் தன் ஆடைகளை மாற்றி வேறு ஆடையை அணிந்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவன் அந்தச் சாம்பலைக் கூடாரத்துக்கு வெளியே ஒரு விசேஷ இடத்திற்குக் கொண்டுபோக வேண்டும்.
௧௨ பலிபீடத்தின் நெருப்பானது தொடர்ந்து பலிபீடத்தின் மேல் எரிய வேண்டும். அதனை அணைந்து போகும்படி விடக்கூடாது. ஆசாரியன் ஒவ்வொரு நாள் காலையிலும் விறகு வைத்து நெருப்பை அதிகரிக்க வேண்டும். அவன் அந்த விறகை பலிபீடத்தில் வைக்க வேண்டும். அவன் அதனோடு சமாதானப் பலியின் கொழுப்பையும் போட்டு எரிக்க வேண்டும்.
௧௩ பலிபீடத்தின் மேல் நெருப்பானது எப்பொழுதும் அணையாமல் எரிய வேண்டும். அது அணைந்து போகக்கூடாது.
தானியக் காணிக்கைகள்
௧௪ “தானியக் காணிக்கைக்குரிய சட்டம் இதுவே: ஆரோனின் மகன்கள் இதனைக் கர்த்தருக்குப் பலிபீடத்தின் முன்னால் கொண்டு வரவேண்டும்.
௧௫ தானியக் காணிக்கையிலிருந்து மிருதுவான மாவினை ஒரு கையளவு ஆசாரியன் எடுக்க வேண்டும். எண்ணெயும், சாம்பிராணியும் அத்தானியக் காணிக்கையின்மேல் இருக்க வேண்டும். பலிபீடத்தின் மேல் தானியக் காணிக்கையை ஆசாரியன் எரிக்க வேண்டும். இது கர்த்தருக்காக ஞாபகக் காணிக்கையாக இருக்கும். அதன் வாசனை கர்த்தருக்குப் பிரியமானதாக இருக்கும்.
௧௬ “ஆரோனும் அவனது மகன்களும் மிச்சமுள்ள தானியக் காணிக்கையை உண்ண வேண்டும். இத்தானியக் காணிக்கையானது புளிப்பில்லாத ஒருவகை அப்பம். ஆசாரியர்கள் இந்த அப்பத்தை ஒரு பரிசுத்த இடத்தில் வைத்து உண்ண வேண்டும். அவர்கள் அதனை ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றியுள்ள வெளிப்பிரகாரத்தில் வைத்து உண்ண வேண்டும்.
௧௭ தானியக் காணிக்கையை புளித்த மாவுடன் சமைக்கக் கூடாது. எனக்கு அளிக்கப்படும் தகன காணிக்கையில் ஆசாரியர்களின் பங்காக நான் அதனை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இது பாவப்பரிகார பலியை போலவும், குற்ற நிவாரண பலியை போலவும் மிகவும் பரிசுத்தமானது.
௧௮ கர்த்தருக்கு இடப்படும் தகன காணிக்கையை ஆரோனின் ஜனங்களில் ஒவ்வொரு ஆணும் உண்ணலாம். உங்கள் தலைமுறைகள்தோறும் இதனை எக்காலத்திற்கும் உரிய விதியாக வைத்துக்கொள்ள வேண்டும். இக்காணிக்கைகளைத் தொடுகிற மனிதர் பரிசுத்தமடைவர்” என்றார்.
ஆசாரியர்களின் தானியக் காணிக்கை
௧௯ மேலும் கர்த்தர் மோசேயிடம்,
௨௦ “ஆரோனும் அவனது மகன்களும் கர்த்தருக்குக் கொண்டுவரக் கூடிய காணிக்கை யாதெனில்: ஆரோன் தலைமை ஆசாரியனாக அபிஷேகம் பண்ணப்படும் நாளில் அவர்கள் இதனைச் செய்ய வேண்டும். அவர்கள் தானியக் காணிக்கையாக எட்டுக் கிண்ணங்கள் அளவு மிருதுவான மாவை எடுத்துவர வேண்டும். (இது தினந்தோறும் செலுத்த வேண்டிய காணிக்கையின்போது செலுத்தப்பட வேண்டும்.) அவர்கள் காலையில் பாதியும் மாலையில் பாதியும் கொண்டு வரவேண்டும்.
௨௧ அந்த மென்மையான மாவானது எண்ணெயோடு கலக்கப்பட்டு சட்டியில் வைக்கப்பட வேண்டும். அது பாகம் பண்ணப்பட்டபின், நீ அதனைக் கொண்டு வரவேண்டும். அதனைப் பல துண்டுகளாக வெட்ட வேண்டும். அதன் வாசனை கர்த்தருக்கு மிகவும் பிரியமானது.
௨௨ “ஆரோனின் சந்ததியில் வந்து ஆரோனின் இடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாரியனே இந்த தானியக் காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். இந்த விதி எக்காலத்திற்கு முரியது. தானியக் காணிக்கை கர்த்தருக்காக முழுமையாக எரிக்கப்பட வேண்டும்.
௨௩ ஆசாரியனுக்குரிய ஒவ்வொரு தானியக் காணிக்கையும் முழுமையாக எரிக்கப்பட வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது” என்று கூறினார்.
பாவப் பரிகார பலிக்கான சட்டம்
௨௪ கர்த்தர் மோசேயிடம்,
௨௫ “ஆரோனுக்கும் அவனது ஜனங்களுக்கும் சொல், இதுதான் பாவப்பரிகார பலிக்கான சட்டம். பாவப் பரிகார பலியை கர்த்தருக்கு முன்பாகத் தகன பலி கொல்லப்படும் இடத்திலேயே கொல்லப்பட வேண்டும். இது மிகவும் பரிசுத்தமானது.
௨௬ பாவப் பரிகார பலியைச் செலுத்தும் ஆசாரியன் அதனை உண்ண வேண்டும். ஆனால் அதனைப் பரிசுத்தமான இடத்தில் உண்ண வேண்டும். அந்த இடம் ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றியுள்ள வெளிப்பிரகாரமாக இருக்க வேண்டும்.
௨௭ பாவப்பரிகார பலிகுரிய இறைச்சியைத் தொடுவதும் கூட ஒரு பொருளையோ ஒரு நபரையோ பரிசுத்தமாக்கும்.
“அதன் இரத்தம் தெளிக்கப்படும்போது ஒருவரது ஆடையில் பட்டால், அந்த ஆடையைப் பரிசுத்தமான இடத்தில் துவைக்க வேண்டும்.
௨௮ பாவப் பரிகார பலி வேகவைக்கப்பட்ட பாத்திரம் மண் பாத்திரமானால் அது உடைக்கப்பட வேண்டும். அது செம்புப் பானையில் வேகவைக்கப்பட்டிருந்தால் அது நன்றாக தேய்க்கப்பட்டு தண்ணீரில் கழுவப்பட வேண்டும்.
௨௯ “பாவப்பரிகார பலியை ஆசாரியக் குடும்பத்தைச் சேர்ந்த எந்த ஆண் வேண்டுமானாலும் உண்ணலாம்.
௩௦ ஆனால், பாவப் பரிகார பலியின் இரத்தமானது ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு வரப்பட்டு பரிசுத்தமான இடத்தில் பயன்படுத்தப்பட்டு ஜனங்களை சுத்தப்படுத்திய பிறகு இது எரிக்கப்பட வேண்டும். அந்த பாவப்பரிகாரப் பலியை உண்ணக் கூடாது.