௧௮
யூதாவில் எசேக்கியா அரசாள தொடங்கியது
௧ எசேக்கியா என்பவன் யூத அரசன் ஆகாஸின் மகன் ஆவான். இவன் ஆளத்தொடங்கும்போது இஸ்ரவேலில் ஏலாவின் மகன் ஓசெயா என்பவனின் மூன்றாம் ஆட்சியாண்டு நிகழ்ந்தது.
௨ எசேக்கியா அரசாள வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் ஆபி ஆகும். இவள் சகரியாவின் மகளாவாள்.
௩ எசேக்கியா தனது முற்பிதாவான தாவீதைப்போன்றே கர்த்தர் சொன்ன சரியான செயல்களைச் செய்துவந்தான்.
௪ எசேக்கியா மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயத்தை அழித்தான். அவர்களின் ஞாபகக் கற்களையும் கூட உடைத்தான். அசெரியாவின் உருவத் தூண்களை வெட்டிப்போட்டான். மோசே செய்த வெண்கல பாம்பை உடைத்துப் போட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். இவ்வெண்கலப் பாம்பானது “நிகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அன்றுவரை இஸ்ரவேலர்கள் இந்த வெண்கலப் பாம்பை தொழுதுவந்தனர்.
௫ அவன் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தான். யூதாவின் அரசர்கள் அனைவரிலும் எசேக்கியாவைப் போன்று அவனுக்கு முன்னும் அவனுக்குப் பின்னும் ஆட்கள் இல்லை.
௬ எசேக்கியா கர்த்தருக்கு மிகவும் நம்பிக்கை உள்ளவனாக இருந்தான். இவன் கர்த்தரைப் பின்பற்றுவதை விடவில்லை. மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்கும் அவன் கீழ்ப்படிந்து வந்தான்.
௭ கர்த்தரும் எசேக்கியாவோடு இருந்தார். எசேக்கியா தான் செய்கிற அனைத்திலும் வெற்றிகரமாக இருந்தான்.
எசேக்கியா அசீரியாவின் ஆட்சித் தலையை விட்டு பிரிந்து, அசீரியாவின் அரசனுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டான்.
௮ எசேக்கியா பெலிஸ்தியர்களைத் தோற்கடித்தான். காசாவரையும் அதன் சுற்று வட்டாரங்களையும் வென்றான். பெலிஸ்தியரின் சிறியதும் பெரியதுமான (கோட்டையமைந்த) நகரங்களையெல்லாம் தோற்கடித்துவிட்டான்.
அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றியது
௯ அசீரியாவின் அரசனான சல்மனாசார் சமாரியாவிற்கு எதிராகச் சண்டையிட்டான். அவனது படை நகரத்தைச் சுற்றிக் கொண்டது. யூதாவில் எசேக்கியாவின் நான்காம் ஆட்சியாண்டின்போது இது நடந்தது. (இது இஸ்ரவேல் அரசனான ஏலாவின் மகன் ஓசேயாவின் ஏழாம் ஆட்சியாண்டு.)
௧௦ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சல்மனாசார் சமாரியாவைக் கைப்பற்றினான். யூத அரசனான எசேக்கியாவின் ஆறாம் ஆட்சியாண்டில் சமாரியாவை இவன் பிடித்துக்கொண்டான். (இது இஸ்ரவேல் அரசனான ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சியாண்டு)
௧௧ அசீரியாவின் அரசன் இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசென்றான். அவன் அவர்களை கோசான் ஆற்றோரங்களிலுள்ள ஆலாக், ஆபோர், மேதியரின் நகரங்கள் ஆகியவற்றில் குடியேற்றினான்.
௧௨ இஸ்ரவேலர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியாததால் இது இவ்வாறு நிகழ்ந்தது. அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையை உடைத்தனர். அவர்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டவற்றுக்கு அடிபணியவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய உடன்படிக்கையைக் கேட்காததோடு, அதனை அவர்கள் கைக்கொள்ளவில்லை.
அசீரியா யூதாவைப் பிடிக்கத் தயாராகிறது
௧௩ எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டின்போது சனகெரிப் எனும் அசீரியாவின் அரசன், யூதாவிலுள்ள கோட்டையமைந்த நகரங்கள் அனைத்திலும் தாக்குதல் நடத்தினான். இவன் எல்லா நகரங்களையும் தோற்கடித்தான்.
௧௪ பிறகு யூதாவின் அரசனான எசேக்கியா, லாகீசிலிருந்த அசீரியாவின் அரசனுக்கு தூது அனுப்பினான். அவன், “நான் தவறு செய்துவிட்டேன். என்னை தனியாகவிட்டுவிடுங்கள். பிறகு உங்களுக்கு வேண்டியதை நான் தருவேன்” என்றான்.
பிறகு அசீரியாவின் அரசன் யூத அரசனான எசேக்கியாவிடம் 300 தாலந்து வெள்ளியையும் 30 தாலந்து பொன்னையும் கட்டும்படி கூறினான்.
௧௫ கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள வெள்ளி முழுவதையும் எசேக்கியா கொடுத்தான்
௧௬ அப்பொழுது, கர்த்தருடைய ஆலய வாசலில் உள்ள கதவுகளிலும் நிலைகளிலும் தான் பதித்திருந்த பொன்னையும் எடுத்து அசீரிய அரசனுக்குக் கொடுத்தான்.
அசீரியாவின் அரசன் எருசலேமிற்கு ஆட்களை அனுப்புகிறான்
௧௭ அசீரியாவின் அரசன் தனது மூன்று மிக முக்கியமான படைத்தளபதி உள்ளப் பெரும்படையோடு எருசலேமிற்கு எசேக்கியா அரசனிடம் அனுப்பினான். அவர்கள் லாகீசிலிருந்து எருசலேமிற்குச் சென்றனர். அவர்கள் வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலில் நின்றனர்.
௧௮ அவர்கள் அரசனை வரவழைத்தார்கள். அப்பொழுது இல்க்கியாவின் மகனான எலிகாக்கீம் எனும் அரண்மனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும் ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் எனும் கணக்கனும் அவர்களை சந்திக்கப் போனார்கள்.
௧௯ தளபதிகளில் ஒருவன் (அவனுக்கு ரப்சாக்கே என்ற பட்டம் இருந்தது) அவர்களிடம், “மாபெரும் அசீரிய அரசன் சொன்னதை எசேக்கியாவிடம் கூறவும்” என்று சொன்னான். அவை வருமாறு:
“எதன் மேல் உன் நம்பிக்கையை வைத்திருக்கிறாய்?
௨௦ நீ, வீணான வார்த்தைகளையே பேசுகிறாய். நீ, ‘போருக்கான ஆலோசனையும் பலமும் உண்டு’ என்று சொல்கிறாயா! நீ எனக்கு எதிராகக் கலகம்செய்ய, யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
௨௧ உடைந்த நாணல் புல்லால் ஆன கைத் தடியை நம்புகிறாய். எகிப்து இத்தகைய கைத் தடியைப் போன்றது! ஒருவன் இக்கைத்தடியின் மீதே முழுக்கச் சாய்ந்தால், அதுவும் உடையும் கையைக் கிழித்து காயத்தை உருவாக்கும். எகிப்தும் தன்னை நம்புகிறவர்களுக்கு இவ்வாறே செய்து வருகிறது.
௨௨ ஒருவேளை நீ, ‘எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம்’. என்று சொல்லலாம். ஆனால் எசேக்கியா கர்த்தருடைய மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றினான். அவன் யூதாவையும் எருசலேமையும் நோக்கி, ‘எருசலேமில் உள்ள பலிபீடத்தின் முன் மட்டுமே ஆராதிக்க வேண்டும்’ என்று கூறினானே.
௨௩ “இப்பொழுது எங்கள் எஜமானனான அசீரிய அரசனோடு இந்த ஒப்பந்தம் செய்துகொள். நான் 2,000 குதிரைகளை உன்னிடம் போதுமான சவாரி செய்பவர்கள் இருந்தால் கொடுப்பதாக உறுதி கூறுகிறேன்.
௨௪ உன்னால் எங்கள் எஜமானனின் அதிகாரிகளைக் கூட வெல்லமுடியாது! இரதங்களுக்கும் குதிரை வீரர்களுக்கும் நீங்கள் எகிப்தைச் சார்ந்து இருக்கவேண்டும்!
௨௫ “நான் கர்த்தருடைய துணை இல்லாமல் எருசலேமை அழிக்க வரவில்லை. கர்த்தர் என்னிடம், ‘அந்த நாட்டிற்கு எதிராகப் போய் அதனை அழித்துவிடு!’ என்றார்” என்று சொன்னான்.
௨௬ அப்போது இல்க்கியாவின் மகனான எலியாக், செப்னா, யோவாக் மூவரும் தளபதியான ரப்சாக்கேயைப் பார்த்து, “எங்களோடு தயவு செய்து ஆராமிக் மொழியில் பேசும். அந்த மொழிதான் எங்களுக்குப் புரியும். யூதமொழியில் எங்களோடு பேசவேண்டாம். ஏனெனில் சுவரிலுள்ள ஜனங்களின் காதுகளும் அவற்றைக் கேட்கும்!” என்றார்கள்.
௨௭ ஆனால் ரப்சாக்கே அவர்களிடம், “எனது ஆண்டவன் உங்களிடமும் உங்கள் அரசரிடமும் மட்டும் பேச அனுப்பவில்லை. சுவருக்கு மேலேயுள்ள ஜனங்களுடனும் நான் பேசுகிறேன்! அவர்கள் உங்களோடு தங்கள் மலத்தைத் தின்று சிறுநீரைக் குடித்துக்கொள்வார்கள்!” என்றான்.
௨௮ பிறகு தளபதி யூத மொழயில் மிகச் சத்தமாக,
“இச்செய்தியை கேளுங்கள்! அசீரியாவின் மிகப் பெரிய அரசன் உங்களுக்குச் செய்தி அனுப்பியுள்ளான்.
௨௯ அரசன், ‘எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படி விடாதீர்கள்! எனது பலத்திலிருந்து உங்களை அவனால் காப்பாற்ற முடியாது!’ என்கிறான்.
௩௦ அதுபோல் கர்த்தர் மீது நம்பிக்கையை அவன் ஏற்படுத்தும்படியும் விடாதீர்கள். ஏனென்றால் எசேக்கியா, ‘கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார்!. இந்நகரத்தை அசீரிய அரசனால் தோற்கடிக்க முடியாது!’ என்று கூறுகிறான்.
௩௧ “ஆனால் அவன் கூறுவதைக் கேட்கவேண்டாம்! அசீரிய அரசன்: என்னோடு சமாதானமாக இருங்கள். என்னோடு வெளியே வாருங்கள். பிறகு ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைபழங்களைத் தின்னலாம், அத்திப்பழங்களைத் தின்னலாம், சொந்தக் கிணற்றிலுள்ளத் தண்ணீரைக் குடிக்கலாம்.
௩௨ நீங்கள் இதனை நான் உங்களை அழைத்துப்போய் இதுபோன்ற இன்னொரு நாட்டில் குடியேற்றும்வரை செய்யலாம். அந்த நிலம் தானியங்களும் திராட்சைரசமும் நிறைந்தது, அப்பமும் திராட்சைக் கொடிகளும் நிறைய ஒலிவமரமும் தேனும் நிறைந்தது. பிறகு நீங்கள் மரிக்க வேண்டாம், வாழலாம்.
“எசேக்கியா கூறுவதை கேளாதீர்கள். அவன் உங்கள் மனதை மாற்ற முயல்கிறான். அவனோ, ‘கர்த்தர் நம்மைக் காப்பார்’ என்கிறான்.
௩௩ இது போல் வேறு எந்த நாட்டிலாவது அங்குள்ள தேவர்கள் அந்த நாட்டை அசீரிய அரசனிடமிருந்து காப்பாற்றி இருக்கிறதா? இல்லையே!
௩௪ ஆமாத் மற்றும் அர்பாத் எனும் தெய்வங்கள் என்ன ஆனார்கள்? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் நகரங்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என்றைக்காவது காப்பாற்றியதுண்டா? இல்லை!
௩௫ வேறு எந்த நாட்டிலேனும் வேறு எந்த தெய்வங்களும் என்னிடமிருந்து அந்நாட்டைக் காப்பற்றியதுண்டா? இல்லை! கர்த்தர் என்னிடமிருந்து எருசலேமைக் காப்பாற்றுவாரா? காப்பாற்ற முடியாது” என்றான்.
௩௬ ஆனால் ஜனங்கள் அமைதியாக இருந்தனர். அவர்கள் தளபதிக்கு ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஏனென்றால் அரசனான எசேக்கியா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். அவன், “நீங்கள் அவனுக்கு எதையும் சொல்லவேண்டாம்” என்று கூறி இருந்தான்.
௩௭ இல்க்கியா என்பவனின் மகனான எலியாக்கீம், (அரசனின் அரண்மனைக்குப் பொறுப்பானவன் எலியாக்கீம்.) செப்னா (செயலாளர்.) ஆகாப் என்பவனின் மகன் யோவாக் (பதிவேடுகள் பாதுகாப்பாளர்.) எல்லாரும் எசேக்கியாவிடம் வந்தார்கள். அவர்களின் ஆடைகள் கிழிந்தவை. (அவர்களின் துக்கத்தையும் கவலையையும் காட்டியது.) ஆசாரியன் தளபதி சொன்னதையெல்லாம் எசேக்கியாவிடம் அவர்கள் சொன்னார்கள்.