௨௨
மிகாயா ஆகாபை எச்சரித்தது
௧ அடுத்த இரு ஆண்டுகளில், இஸ்ரவேலுக்கும் சீரியாவுக்கும் சமாதானம் நிலவியது.
௨ மூன்றாம் ஆண்டில், யூதாவின் அரசனான யோசபாத் இஸ்ரவேலின் அரசனான ஆகாபைப் பார்க்கப் போனான்.
௩ அப்போது, ஆகாப் அதிகாரிகளிடம், “சீரியாவின் அரசன் கீலேயாத்திலுள்ள ராமோத்தை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டான். அதைத் திரும்பப்பெற ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை? அது நமக்குச் சொந்தமாக வேண்டும்” என்றான்.
௪ எனவே யோசபாத்திடம், “நீ என்னோடு சேர்ந்து ராமோத்துக்காகப் போரிட வருகிறாயா?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “சரி, உன்னோடு சேர்ந்துகொள்கிறேன். எனது படை வீரர்களும் குதிரைகளும் உன் படையோடு சேர்ந்துகொள்ளத் தயார்.
௫ ஆனால் முதலில் கர்த்தரிடம் இதுபற்றி ஆலோசனை கேட்போம்” என்றான்.
௬ எனவே ஆகாப் தீர்க்கதரிசிகளைக் கூட்டினான். அவர்கள் 400 பேர். அவர்களிடம், “நான் ராமோத்துக்காக சீரிய படையோடு போரிடப் போகலாமா? அல்லது காத்திருக்கலாமா?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் “இப்போது போய் போர் செய்யும். கர்த்தர் வெற்றிப்பெறச் செய்வார்” என்றார்கள்.
௭ யோசாபாத், “வேறு யாராவது தீர்க்கதரிசிகள் உண்டா? அவரிடமும், தேவனுடைய விருப்பத்தைக் கேட்போமே” என்றான்.
௮ அதற்கு ஆகாப், “மற்றொரு தீர்க்கதரிசி இருக்கிறார். அவர் மூலம் கர்த்தருடைய ஆலோசனைகளைப் பெறலாம். அவரது பெயர் இம்லாவின் மகனான மிகாயா. எனக்கு எதிராகவே அவன் பேசுவதால் அவனை வெறுக்கிறேன். எப்போதும் எனக்கு விருப்பம் இல்லாததையே அவன் கூறுவான்” என்றான்.
யோசாபாத், “நீ அவ்வாறு சொல்லக்கூடாது!” என்றான்.
௯ எனவே, ஆகாப் ஒரு அதிகாரியை அனுப்பி மிகாயாவை அழைத்து வரச்சொன்னான்.
௧௦ அப்போது இரு அரசர்களும் அரச உடையோடு சிங்காசனத்தில் இருந்தனர். இது சமாரியா அருகில் உள்ள நியாய மன்றம். தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு முன் நின்றுகொண்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
௧௧ அவர்களில் ஒருவன் பெயர் சிதேக்கியா, இவன் கேனானாவின் மகன். அவன் இரும்பு கொம்புகளைச் செய்து, “இதனை நீங்கள் பயன்படுத்தி போரிடுங்கள். உங்களால் வெற்றிபெற முடியுமென்று கர்த்தர் சொன்னார்” என்று கூறினான்.
௧௨ மற்றவர்களும் இதனை ஒப்புக்கொண்டனர். “இப்பொழுதே, உங்கள் படை புறப்படவேண்டும். அது ராமோத்தில் சீரிய படையோடு போரிடும். கர்த்தர் வெற்றிபெறச்செய்வார்” என்றனர்.
௧௩ இது நடைபெறும்போது, அதிகாரி மிகாயாவைக் கண்டுபிடித்து, “எல்லா தீர்க்கதரிசிகளும் இப்போது போருக்குப்போக வேண்டும் என்கின்றனர். நீயும், அவ்வாறே சொல்” என்றான்.
௧௪ ஆனால் அவன், “முடியாது! கர்த்தர் சொல்லச் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன்!” என்றான்.
௧௫ பிறகு அவன் அரசனிடம் வந்து நின்றான். அரசனும், “நானும் யோசபாத்தும் சேரலாமா? சீரிய மன்னனோடு சண்டையிட ராமோத்துக்குப் போகலாமா?” என்று கேட்டான்.
அதற்கு மிகாயா, “சரி, நீ இப்போதே போய் சண்டையிடு, கர்த்தர் வெற்றிபெறச் செய்வார்” என்றான்.
௧௬ ஆனால் ஆகாப், “கர்த்தருடைய அதிகாரத்தால் நீ பேசிக்கொண்டிருக்கவில்லை. நீ உன் சொந்த வார்த்தைகளைப் பேசுகிறாய். எனவே உண்மையைச் சொல்! எத்தனைமுறை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்? கர்த்தர் சொல்கிறதை எனக்குச் சொல்!” என்றான்.
௧௭ அதற்கு மிகாயா, “என்ன நடக்கும் என்பதை நான் பார்க்கமுடியும். இஸ்ரவேல் படைகள் சிதறியுள்ளன. மேய்ப்பன் இல்லாத ஆடுகள்போல உள்ளன. எனவே கர்த்தர், ‘இவர்களுக்கு தலைவன் இல்லை. எனவே சண்டைக்குப் போகாமல் வீட்டிற்குப் போகவேண்டும்’ என்று சொல்கிறார்” என்றான்.
௧௮ ஆகாப் யோசபாத்திடம், “நான் சொன்னதைப் பார்! இவன் எப்போதும் எனக்குப் பிடிக்காததையே கூறுவான்” என்றான்.
௧௯ ஆனால் மிகாயா தொடர்ந்து கர்த்தருக்காகப் பேசினான். “கவனி, இது கர்த்தர் கூறுவது! கர்த்தர் பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். பரலோகத்தில் உள்ள அனைத்து தேவதூதர்களும் கர்த்தருடைய பக்கத்தில் வலதுபுறமும், இடதுபுறமும் நின்றுகொண்டிருக்கின்றனர்.
௨௦ கர்த்தர், ‘உங்களில் யாரேனும் அரசன் ஆகாபிடம் ஒரு தந்திரம் செய்வீர்களா? அவன் ராமோத்தில் இருக்கும் சீரியாவின் படையை எதிர்த்து சண்டையிட வேண்டுமென நான் விரும்புகிறேன். பின்னர் அவன் கொல்லப்படுவான்’ என்று சொன்னார். என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்து தூதர்கள் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை.
௨௧ இறுதியில் ஒரு ஆவி வெளியே வந்து கர்த்தருக்கு முன் நின்றுக் கொண்டு சொன்னது. ‘நான் தந்திரம் செய்வேன்!’
௨௨ கர்த்தர், ‘எவ்வாறு செய்வாய்?’ என்று கேட்டார். அதற்கு அவது, ‘நான் தீர்க்கதரிசிகளைக் குழப்பி பொய் சொல்லுமாறு செய்வேன். அவர்கள் பேசுவதெல்லாம் பொய்’ என்றது. உடனே அவர், ‘போய் ஆகாபை ஏமாற்று. நீ வெற்றிபெறுவாய்’ என்றார்” என்றான்.
௨௩ மிகாயா இவ்வாறு தன் கதையைச் சொல்லி முடித்தான். பிறகு அவன், “இது தான் இங்கு நடந்தது. இவ்வாறு பொய் சொல்லுமாறு கர்த்தர்தான் தீர்க்கதரிசிகளை மாற்றினார். உனக்குத் தீமை வருவதை கர்த்தரே விரும்புகிறார்” என்றான்.
௨௪ பிறகு சிதேக்கியா மிகாயாவிடம் வந்து முகத்தில் அடித்தான். அவன் “கர்த்தருடைய சக்தி என்னை விட்டுவிலகி எந்த வழியாய் உன்னிடம் வந்தது?” என்று கேட்டான்.
௨௫ அதற்கு மிகாயா, “விரைவில் துன்பம் வரும். அப்போது, நீ சிறிய அறையில் ஒளிந்துக்கொள்வாய். அப்போது நான் சொல்வது உண்மையென்று உனக்குத் தெரியும்!” என்றான்.
௨௬ மிகாயாவைக் கைது செய்யும்படி ஆகாப், அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான். ஆகாப் அரசன், “இவனைக் கைது செய்து நகர ஆளுநரான ஆமோனிடத்திலும் பிறகு இளவரசனான யோவாசிடமும் அழைத்துக் கொண்டு போங்கள்.
௨௭ நான் சமாதானத்தோடு வரும்வரை இவனைச் சிறையில் அவர்களிடம் அடைக்கச்சொல். அதுவரை அப்பமும், தண்ணீரும் கொடுங்கள்” என்றான்.
௨௮ அதற்கு மிகாயா, “நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் போர் முடிந்து உயிரோடு திரும்பி வந்தால் கர்த்தர் என் மூலமாக பேசவில்லை” என்று சத்தமாகச் சொன்னான்.
The Battle at Ramoth Gilead
௨௯ பிறகு ஆகாபும் யோசபாத்தும் ராமோத்திற்கு ஆராமோடு சண்டையிடப் போனார்கள். அவ்விடம் கீலேயாத்தில் உள்ளது.
௩௦ ஆகாப் யோசபாத்திடம், “நாம் போருக்குத் தயாராக்குவோம். நான் அரசன் என்று தோன்றாதபடி சாதாரண ஆடைகளையும் நீ அரச உடைகளையும் அணிந்துக்கொள்” என்றான். அவ்வாறே சாதாரண உடையில் சண்டையிட்டான்.
௩௧ சீரியா அரசனுக்கு 32 இரதப்படைத் தளபதிகள் இருந்தனர். அவர்களிடம் இஸ்ரவேல் அரசனைக் கண்டுபிடிக்குமாறு கட்டளையிட்டான். அரசனைக் கொன்றுவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டான்.
௩௨ போரின்போது, அவர்கள் யோசபாத்தைக் கண்டு இஸ்ரவேலின் அரசன் என்று எண்ணித் தாக்கினர். அவன் சத்தமிட்டான்.
௩௩ ஆனால், அவன் அரசனில்லை என்பதை அறிந்து கொல்லாமல் விட்டுவிட்டனர்.
௩௪ ஆனால் ஒருவன் குறிவைக்காமல் ஒரு அம்பை எய்தான். எனினும். அது ஆகாப் மீதுபட்டு கவசம் மூடாத உடலில் நுழைந்தது. அவன் இரத ஓட்டியிடம், “ஒரு அம்பு என்னைத் தாக்கியுள்ளது! இரதத்தை களத்தைவிட்டு வெளியே கொண்டு செல்” என்றான்.
௩௫ படைகள் தொடர்ந்து போரிட்டன. அரசன் தொலைவில் தங்கியிருந்தான். அதிலிருந்து சீரியாவின் படையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனது இரத்தம் வடிந்து இரதத்தில் நிறைந்தது. அன்று மாலை, அவன் மரித்துப் போகவே,
௩௬ படையை நகருக்குத் திரும்புமாறு கட்டளையிட்டனர்.
௩௭ இவ்வாறுதான் ஆகாப் மரித்துப்போனான். சிலர் அவனை சமாரியாவிற்கு எடுத்துப் போனார்கள். அங்கே அடக்கம் செய்தனர்.
௩௮ அத்தேரை சமாரியாவிலுள்ள குளத்து தண்ணீரால் கழுவினார்கள். இரதத்தில் உள்ள இரத்தத்தை நாய்கள் நக்கின. அத்தண்ணீரை வேசி மகள்கள் தம்மைச் சுத்தப்படுத்த பயன்படுத்தினார்கள். கர்த்தர் சொன்னபடியே அனைத்தும் நடந்தது.
௩௯ இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் ஆகாப் செய்த அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. அவன் தன் அரண்மனையைத் தந்தத்தால் அலங்கரித்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவன் உருவாக்கிய நகரைப்பற்றியும் அந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.
௪௦ ஆகாப் மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம்பண்ணப்பட்டான். அவனுக்கு அடுத்து அவன் மகன் அகசியா, அரசன் ஆனான்.
யூதாவின் அரசனான யோசபாத்
௪௧ இஸ்ரவேலின் அரசனாக ஆகாப் இருந்த நாலாவது ஆண்டில், யூதாவில் யோசபாத் அரசனானான். இவன் ஆசாவின் மகன்
௪௨ யோசபாத் அரசனாகும்போது அவனுக்கு 35 வயது. இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாய் அசுபாள். இவள் சில்கியின் மகள்.
௪௩ யோசபாத் நல்லவன். அவன் முன்னோர்களைப்போன்று இருந்தான். கர்த்தருடைய விருப்பப்படி கீழ்ப்படிந்து நடந்தான். ஆனால் பொய்தெய்வங்களை தொழுதுகொள்ள அமைக்கப்பட்ட மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடாந்து அங்கு பலி செலுத்தி, நறுமணப் பொருட்களை எரித்துவந்தனர்.
௪௪ யோசபாத் இஸ்ரவேல் அரசனோடு ஒரு சமா தான ஒப்பந்தம் செய்துக்கொண்டான்.
௪௫ இவன் தைரியமாகப் பல போர்களைச் செய்தான். இவன் செய்தது எல்லாம் யூதா அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.
௪௬ தன் நாட்டில் உள்ள முறைகெட்ட புணர்ச்சிக்காரர்களை தொழுகை இடங்களிலிருந்து விரட்டினான். அவர்கள், தன் தந்தை ஆசா ராஜாவாக இருந்தபோது இருந்தவர்கள்.
௪௭ அப்போது, ஏதோமில் அரசன் இல்லை. ஆளுநரால் அது ஆளப்பட்டது. இவன் யூதா அரசனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.
௪௮ இவன் கப்பல்களைச் செய்தான். பொன் வாங்க ஓப்பீருக்குச் செல்ல விரும்பினான். ஆனால் அவை போகமுடியாதபடி எசியோன் கேபேரிலே உடைந்து போயின.
௪௯ இஸ்ரவேலின் அரசனாகிய அகசியா யோசபாத்திடம், “என் ஆட்கள் உங்கள் ஆட்களோடு கப்பலில் போகட்டும்” என்றான். யோசபாத் ஒப்புக்கொள்ளவில்லை.
௫௦ யோசபாத் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பின் அவனது மகன் யோராம் அரசன் ஆனான்.
இஸ்ரவேலின் அரசனான அகசியா
௫௧ ஆகாபின் அரசனான அகசியா இஸ்ரவேலுக்கு சமாரியாவில் அரசன் ஆனான். அப்போது யூதாவில் யோசபாத் 17ஆம் ஆண்டில் ஆண்டுகொண்டிருந்தான். அகசியா இரண்டு ஆண்டுகள் ஆண்டான்.
௫௨ அகசியா கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். அவன் தந்தை ஆகாப் மற்றும் தாய் யேசபேலைப் போன்றும், நேபாத்தின் மகனான யெரொபெயாம் போன்றும் பாவம் செய்து வந்தான். இவர்கள் நாட்டு ஜனங்களையும் பாவத்திற்குட்படுத்தினர்.
௫௩ அகசியா பாகால் தெய்வத்தை வழிபட்டான். இதனால் கர்த்தருக்கு கோபம் வந்தது. அவனது தந்தையிடம் போலவே அவனிடமும் கோபம்கொண்டார்.