௨௫
அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்
௧ கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
௨ “மனுபுத்திரனே, அம்மோன் ஜனங்களை நோக்கி அவர்களுக்கு எதிராக எனக்காகப் பேசு.
௩ அம்மோன் ஜனங்களிடம் சொல்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: எனது பரிசுத்தமான இடங்கள் அழிக்கப்பட்டபோது நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிறபோது அதற்கு விரோதமாக இருந்தீர்கள். யூதாவின் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டபோது, அவர்களுக்கு விரோதமாக இருந்தீர்கள்.
௪ எனவே கிழக்கே உள்ள ஜனங்களிடம் உன்னைக் கொடுப்பேன். அவர்கள் உன் தேசத்தை எடுத்துக்கொள்வார்கள். அவர்களது படைவீரர்கள் உனது நாட்டில் தம் கூடாரங்களை அமைப்பார்கள். அவர்கள் உங்களிடையே வாழ்வார்கள். அவர்கள் உங்கள் பழங்களைத் தின்று உங்கள் பாலைக் குடிப்பார்கள்.
௫ “ ‘நான் ரப்பா நகரத்தை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும் நாட்டை ஆட்டுக் கிடையாகவும் ஆக்குவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிந்துகொள்வாய்.
௬ கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: இஸ்ரவேல் அழிக்கப்பட்டதற்காக நீ மகிழ்ச்சி அடைந்தாய். நீ உன் கைகளைத் தட்டி கால்களால் மிதித்தாய். நீ இஸ்ரவேல் தேசத்தை கேலி செய்து அவமதித்தாய்.
௭ எனவே, நான் உன்னைத் தண்டிப்பேன். நீ, போரில் வீரர்கள் கைப்பற்றத்தக்க விலை மதிப்புள்ள பொருட்களாவாய். நீ உனது நிலத்தை இழப்பாய். தொலைதூர நாடுகளில் நீ மரித்துப்போவாய். நான் உனது நாட்டை அழிப்பேன்! பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.’ ”
மோவாப் மற்றும் சேயீருக்கு எதிரான தீர்க்கதரிசனம்
௮ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “மோவாபும் சேயீரும் (ஏதோம்) சொல்கின்றன, ‘யூத வம்சமானது மற்ற நாடுகளைப் போன்றது.’
௯ மோவாபின் தோள்களை நான் வெட்டுவேன். அதன் எல்லையோரங்களில் உள்ள நகரங்களை நான் எடுத்துக்கொள்வேன். தேசத்தின் மகிமையையும் பெத்யெசிமோத்தையும், பாகால் மெயோனையும் கீரியாத்தாயீமையும் எடுத்துக்கொள்வேன்.
௧௦ பிறகு நான் இந்நகரங்களை கிழக்கே உள்ள ஜனங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உன் நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். கிழக்கே உள்ள ஜனங்கள் அம்மோன் ஜனங்களை அழிக்கும்படி நான் அனுமதிப்பேன். அம்மோன் என்று ஒரு தேசம் இருந்ததை எல்லோரும் மறந்துவிடுவார்கள்.
௧௧ எனவே, நான் மோவாபைத் தண்டிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
ஏதோமிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்
௧௨ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “ஏதோம் ஜனங்கள் யூதா வம்சத்தாருக்கு விரோதமாகத் திரும்பினார்கள். அவர்கள் பழி வாங்கினார்கள். ஏதோம் ஜனங்கள் குற்றவாளிகள்.”
௧௩ எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் ஏதோமைத் தண்டிப்பேன். நான் ஏதோமிலுள்ள மனிதர்களையும் விலங்குகளையும் அழிப்பேன். நான் தேமான் முதல் தேதான் வரையுள்ள ஏதோம் நாடு முழுவதையும் அழிப்பேன். ஏதோமியர்கள் போரில் கொல்லப்படுவார்கள்.
௧௪ நான் இஸ்ரவேலர்களாகிய என் ஜனங்களைப் பயன்படுத்தி, ஏதோமைப் பழிவாங்குவேன். இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் ஏதோமிற்கு விரோதமாக என் கோபத்தைக் காட்டுவார்கள், பிறகு ஏதோம் ஜனங்கள், அவர்களை நான் தண்டித்ததை அறிவார்கள்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
பெலிஸ்தியர்களுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்
௧௫ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “பெலிஸ்தியர்கள் பழிவாங்க முயன்றனர். அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள். அவர்கள் தமக்குள் கோபத்தை நீண்ட காலமாக எரியவிட்டனர்!”
௧௬ எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன், ஆம், நான் கிரேத்தாவிலிருந்து வந்த அந்த ஜனங்களை அழிப்பேன். கடற்கரையோரமாக வாழ்கிற அனைவரையும் நான் அழிப்பேன்.
௧௭ நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். நான் பழிவாங்குவேன். எனது கோபம் அவர்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கும்படி நான் செய்வேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்!”