௨௩
ஆராதனையில் கலந்து கொள்ளக்கூடிய ஜனங்கள்
௧ “ஆண்மையில்லாதவனாக
விதை நசுங்கப்பட்டவனும், உடலுறவு உறுப்பு துண்டிக்கப்பட்டவனும், இஸ்ரவேல் ஜனங்களது கர்த்தருடைய ஆராதனையில் சேரக்கூடாதவர்கள் ஆவார்கள்.
௨ ஒருவனது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்யாமல் அவன் பிறந்திருந்தால், அப்படிபட்டவன் இஸ்ரவேலருடன் சேர்ந்து கர்த்தரை ஆராதிக்க கூடிவரக் கூடாது. அவர்கள் சந்ததியாரில் பத்தாவது தலைமுறைமட்டும் எவரும் இஸ்ரவேலர்களின் ஆராதனையில் சேரத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
௩ “அம்மோனியனும், மோவாபியனும், இஸ்ரவேல் மனிதர்கள் ஆராதிக்கும் கர்த்தருடைய சபைக்கு ஆகாதவர்கள். அவர்களது சந்ததியாரில் பத்தாம் தலைமுறையினர் கூட என்றைக்கும் கர்த்தரை ஆராதிக்கும் இஸ்ரவேல் ஜனங்களோடே சேர்ந்து வர வேண்டாம்.
௪ ஏனென்றால் எகிப்திலிருந்து நீங்கள் வருகின்ற வழியில் இந்த அம்மோனியரும், மோவாபியரும். உங்களுக்கு அப்பமும், தண்ணீரும் தர மறுத்தார்கள், அது மட்டுமின்றி மெசொபொத்தாமியா நகரமாகிய பேத்தோரில் பேயோரின் மகனான பிலேயாமுக்கு கூலிபேசி உங்களை சபிக்கும்படி செய்ததற்காகவும், அவர்களை தேவனுடைய சபைக்கு உரியவராகாது செய்ய வேண்டும்.
௫ ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் பிலேயாம் கூறியதைக் கேட்க மறுத்தார். கர்த்தர் அந்த சாபத்தையெல்லாம் உங்களுக்காக ஆசீர்வாதங்களாக்கினார். ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களை நேசிக்கின்றார்.
௬ நீங்கள் அந்த ஜனங்களுடன் ஒருபோதும் எவ்வித சமாதானத்திற்கும் முயற்சி செய்யக் கூடாது. நீங்கள் வாழ் நாள் முழுவதும் அவர்களுடன் நட்புறவு கொள்ளக் கூடாது.
இஸ்ரவேல் ஜனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஜனங்கள்
௭ “நீங்கள் ஏதோமியர்களை வெறுக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் உங்கள் உறவினர்கள். நீங்கள் எகிப்தியர்களை வெறுக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் அந்த தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்கள்.
௮ ஏதோமியருக்கும், எகிப்தியருக்கும் பிறந்த மூன்றாவது தலைமுறையின் குழந்தைகள் இஸ்ரவேலருடன் இணைந்து கர்த்தருடைய சபையில் ஆராதிக்கலாம்.
படை முகாமினை சுத்தமாக பாதுகாப்பது
௯ “நீங்கள் உங்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடச் செல்லும்போது தீட்டான காரியங்கள் எல்லாவற்றிலும் இருந்து விலகி இருங்கள்.
௧௦ உங்களது போர் முகாமில் ஒருவன் இரவின் கனவுகளினால் சரீரத்தில் அசுத்தமானால் அவன் அந்த முகாமை விட்டு வெளியே போகவேண்டும். அவன் போர் முகாமிற்குள் செல்லாமல் வெளியே தங்கி இருந்து,
௧௧ பின் அன்று மாலையில், தண்ணீரில் குளித்து சூரியன் மறைந்த பின்பே முகாமிற்குத் திரும்பலாம்.
௧௨ “உங்கள் போர் முகாமிற்கு வெளிப் புறத்தில் மலம் கழிக்கும் இடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
௧௩ உங்களது படைக் கருவிகளுடன் நீங்கள் தரையைத் தோண்டுவதற்காக சிறியகோலையும் வைத்திருக்கவேண்டும். பின் நீங்கள் மலம், சிறுநீர் கழிக்கின்றபோது அச்சிறிய கோலைக் கொண்டு மண்ணைத் தோண்டி அதில் கழிவைச் செய்த பின்பு மூடிவிட வேண்டும்.
௧௪ ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது போர் முகாமில் உங்களோடே இருந்து, உங்களைக் காத்து, உங்கள் எதிரிகள் உங்களிடம் தோல்வியடைய உதவுகிறார் ஆகையால் அந்தப் போர் முகாம் பரிசுத்தமாக இருக்கவேண்டும். அப்போது கர்த்தர் உங்களுடைய சுத்தமற்ற காரியங்களைக் காணாமலும் உங்களை விட்டுப் போகாமலும் இருப்பார்.
பிற சட்டங்கள்
௧௫ “ஒரு அடிமை தன் எஜமானனிடம் இருந்து உங்களிடம் ஓடி வந்தால் நீங்கள் அவனை அவன் முதலாளியிடமே ஒப்படைத்து விடாதீர்கள்.
௧௬ அந்தச் சேவகன் உங்களிடத்தில் எங்கும் அவன் விரும்புகிறபடி பணிசெய்யலாம். அவன் தேர்ந்தெடுக்கிற ஏதாவது நகரில் வாழலாம். நீங்கள் அவனை ஒன்றும் செய்யாதீர்கள்.
௧௭ “எந்த ஒரு இஸ்ரவேல் ஆணோ, பெண்ணோ, ஆலய விபச்சாரக்காரனாகவோ வேசியாகவோ இருக்கக்கூடாது.
௧௮ ஒரு ஆணோ, பெண்ணோ, விபச்சார பாவத்தினால் சம்பாதித்தப் பணத்தை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டுவரக் கூடாது. எந்தவொரு நபரும் அந்த பணத்தை தேவனுக்கு வாக்களித்திருந்த பொருளை வாங்குவதற்கென்று பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்கள் உடல்களை விற்று விபச்சாரப் பாவம் செய்யும் அந்த ஜனங்களை அருவெறுக்கின்றார்.
௧௯ “நீங்கள் வேறு ஒரு இஸ்ரவேல் சகோதரருக்கு கடன் கொடுத்திருப்பீர்கள் என்றால் அதற்கான வட்டியை வசூலிக்கக் கூடாது. அவர்களுக்குக் கொடுத்த பணத்தின் மீதோ, உணவின் மீதோ அல்லது வேறு எந்த பொருள் மீதோ நீங்கள் வட்டி வாங்கக் கூடாது.
௨௦ நீங்கள் அந்நியர்களிடமிருந்து வட்டி வசூலித்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் இஸ்ரவேல் சகோதரர்களிடம் வட்டி வசூலிக்கக் கூடாது. இந்த விதிகளை நீங்கள் பின்பற்றினால், பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் எல்லாச் செயல்களிலும் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வாழப்போகின்ற இந்த தேசத்தில் நீங்கள் செய்யும் எல்லாவற்றினையும் ஆசீர்வதிப்பார்.
௨௧ “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஏதாவது பொருத்தனை செய்திருந்தால், அவற்றைச் செலுத்துவதில் தாமதம் செய்யாதீர்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், நீங்கள் அவற்றை செலுத்துமாறு உரிமையோடு கேட்பார். நீங்கள் வாக்களித்தபடி அவற்றை செலுத்தவில்லை என்றால் அது உங்களுக்குப் பாவமாகும்.
௨௨ நீங்கள் அப்படி ஏதும் வாக்களிக்கவில்லை யென்றால் உங்கள் மீது பாவமில்லை.
௨௩ ஆனால் நீங்கள் செய்வதாக உங்கள் வாயினால் சொன்னதை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் தேவனுக்குத் தருவதாக விசேஷமான வாக்களித்திருந்தால், நீங்கள் அதை நிறைவேற்றவேண்டும். தேவன் கட்டாயப்படுத்தி உங்களை வாக்களிக்கும்படிச் செய்யவில்லை. நீங்களே தருவதாக வாக்களித்திருந்தால் நீங்கள் சொன்னபடி அவற்றைச் செலுத்தவேண்டும்!
௨௪ “நீங்கள் பிறருடைய திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்துசெல்ல வேண்டியிருந்தால், நீங்கள் விரும்புகின்ற அளவிற்கு அங்குள்ள திராட்சைப் பழங்களை உண்ணலாம். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட உங்கள் கூடையில் போட்டுக்கொள்ளக் கூடாது. (அப்பழங்களை உங்களோடு எடுத்துவராதீர்கள்.)
௨௫ நீங்கள் மற்றவரின் தானியவயல் வழியாக செல்ல வேண்டியிருந்தால் உங்கள் கைகளால் அங்குள்ள கதிர்களைப் பறித்து உண்ணலாம். ஆனால் பிறருடைய அந்த விளைச்சலை நீங்கள் அறுவடை செய்து தூக்கிக்கொண்டு செல்ல எண்ணி அரிவாளைப் போடக் கூடாது.