௧௫
கடன்களை ரத்து செய்யும் விசேஷ ஆண்டு
௧ “ஏழு ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
௨ நீங்கள் செய்யவேண்டிய முறையாவது: ஒவ்வொருவரும் தான் மற்ற இஸ்ரவேலருக்குக் கடனாகக் கொடுத்த பணத்தை ரத்து செய்துவிட வேண்டும். அவன் மற்ற இஸ்ரவேல் சகோதரனிடம் அந்தப் பணத்தை திரும்ப தன்னிடம் செலுத்துமாறு கேட்கக்கூடாது. ஏனென்றால், கர்த்தர் உங்களுக்குக் கூறியதின்படி அந்தக் கடனை அவ்வாண்டிலேயே ரத்து செய்திட வேண்டும்.
௩ நீங்கள் அந்நியர்களுக்குக் கொடுத்த கடனை திரும்பச் செலுத்துமாறு கேட்கலாம். ஆனால், உன் இஸ்ரவேல் சகோதரனிடம் அவ்வாறு கேட்கக்கூடாது.
௪ உங்கள் நாட்டில் ஏழை ஜனங்கள் யாரும் இருக்கக் கூடாது. ஏனென்றால், கர்த்தர் இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றார். கர்த்தர் உங்களை வெகுவாய் ஆசீர்வதிப்பார்.
௫ ஆனால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால் மாத்திரம் இது நடக்கும். நான் இன்று உங்களுக்குச் சொன்ன தேவனுடைய ஒவ்வொரு கட்டளையையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.
௬ பின்பு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி உங்களை ஆசீர்வதிப்பார். அதனால், நீங்கள் பல ஜாதிகளுக்கு கடன் கொடுப்பீர்கள். ஆனால், நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்கும் அவசியம் உங்களுக்கு இருக்காது. நீங்கள் அவர்களை ஆளலாம். அவர்கள் யாரும் உங்களை ஆள இயலாது.
௭ “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும், இந்த தேசத்தில் உங்களில் யாராவது ஒருவன் ஏழை எளியவனாக இருந்தால், அவர்கள் மத்தியில் நீங்கள்யாரும் சுயநலமுள்ளவர்களாக இருந்துவிடக்கூடாது. நீங்கள் அந்த ஏழை எளியவனுக்குக் கைகொடுத்து உதவ மறுத்துவிடக் கூடாது.
௮ நீங்கள் அவனுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டவேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கடன் கொடுத்து உதவவேண்டும்.
௯ “கடன்களை ரத்து செய்யும் ஏழாவது ஆண்டு சமீபமாக வந்துவிட்டது என்பதால், ஏழைக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. இப்படிப்பட்ட ஒரு கெட்ட சிந்தை உன் மனதில் நுழைய இடம் கொடாதே. தேவை உள்ள ஏழையைக் குறித்து ஒருபோதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே. அவனுக்கு உதவிச்செய்ய மறுத்து விடாதே. அப்படி நீங்கள் உதவவில்லையென்றால், அவன் உங்களுக்கு எதிராகக் கர்த்தரிடத்தில் முறையிடுவான். அப்போது கர்த்தர் அதை உங்கள் மேல் குற்றமாகச் சுமத்துவார்.
௧௦ “அந்த ஏழை நபருக்குத் தாராளமாகக் கொடுங்கள். அவர்களுக்குக் கொடுப்பதை இழிவாகக் கருதாதீர்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், நீங்கள் இந்த நற்செயலைச் செய்வதால் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர் ஆசீர்வதிப்பார்.
௧௧ தேசத்திலே ஏழை எளியவர்கள் எப்போதும் இருப்பார்கள். அதனால் தான் உன் தேசத்தில் உள்ள ஏழை எளிய சகோதரனுக்கு நீங்கள் உதவத் தயாராக இருக்கவேண்டுமென நான் கட்டளையிடுகிறேன். அவர்களுக்குத் தேவைப்படும்போது கொடுங்கள்.
அடிமைகள் விடுதலை பெற அனுமதித்தல்
௧௨ “எபிரெய ஆணையோ, பெண்ணையோ நீங்கள் அடிமைகளாக விலை கொடுத்து வாங்கியிருந்தால், நீங்கள் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு உங்களுக்கு சேவை செய்ய வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஏழாவது ஆண்டு அவர்களை உங்களிடமிருந்து விடுதலை பெற்றுச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
௧௩ அவ்வாறு அவர்கள் உங்களிடமிருந்து விடுதலையாகிச் செல்லும்போது, அவர்களை ஒன்றுமில்லாதவர்களாய் அனுப்பிவிடாதீர்கள்.
௧௪ நீங்கள் அவர்களுக்கு உங்களது ஆடு மாடுகளில் சிலவற்றையும், கொஞ்சம் தானியத்தையும், கொஞ்சம் திராட்சை ரசத்தையும் கொடுத்து அனுப்ப வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் தாராளமாகக் கொடுக்குமளவு ஏராளமான நன்மைகளால் உங்களை ஆசீர்வதித்தார். அதே போல் நீங்களும் உங்களது அடிமைகளுக்குத் தாராளமாகக் கொடுங்கள்.
௧௫ நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை அங்கிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். அதை நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளீர்கள். அதனால்தான் நான் இன்று உங்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கின்றேன்.
௧௬ “ஆனால், உங்களது அடிமைகளுள் ஒருவன், ‘நான் உங்களை விட்டுப் பிரியமாட்டேன்’ என்று உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நேசித்து உங்களுடன் நல்லதொரு வாழ்வைப்பெற்றதனால், கூறிடலாம்.
௧௭ நீங்கள் அந்த அடிமையை உங்கள் வீட்டுக் கதவுக்கு எதிராக நிறுத்தி, ஒரு கூர்மையான சிறிய கம்பியினால் அந்த அடிமையின் காதில் ஒரு துளை போடவேண்டும். அவன் உங்களுக்கு என்றைக்கும் அடிமையாயிருப்பான் என்பதை இது காட்டும், உங்களோடு இருக்க விரும்பும் உங்களின் பெண் அடிமைக்கும் இவ்வாறே செய்ய வேண்டும்.
௧௮ “உங்கள் அடிமைகளை விடுதலையாக்கி அனுப்பிவிடுவதை தவறாக எண்ண வேண்டாம். ஆறு ஆண்டுகளாக ஒரு வேலையாளுக்குரிய சம்பளத்தில் பாதிக் கூலிக்கு அவர்கள் உங்களுக்கு சேவை செய்ததை எண்ணிப்பாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார்.
மந்தைகளின் தலையீற்றுகளைப் பற்றிய விதிகள்
௧௯ “உங்கள் மந்தைகளில் உள்ள ஆடு மாடுகளின் தலையீற்று ஆண்களையெல்லாம் கர்த்தருக்குரிய தாக்குங்கள். அவற்றை உங்கள் பணிகளுக்காகப் பயன்படுத்தாதீர்கள். அவற்றில் உள்ள தலையீற்று ஆட்டினை மயிர் கத்தரியாமல் இருக்க வேண்டும்.
௨௦ ஆண்டுதோறும் அவற்றை நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்திற்கு எடுத்துச்சென்று, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உண்ணுங்கள்.
௨௧ “ஆனால், அந்தக் கால்நடைகளுக்குமுடம், குருடு முதலான எந்த ஒரு பழுது இருந்தாலும் அவற்றை உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்.
௨௨ நீங்கள் உங்கள் வீடுகளிலேயே அவற்றின் இறைச்சியை உண்ணலாம். யார் வேண்டுமானாலும், அசுத்தமானவனும் சுத்தமானவனும் அதை உண்ணலாம். வெளிமான்களையும், கலைமான்களையும் புசிக்கும்படி கொடுக்கப்பட்ட கட்டளையின்படியே இந்த இறைச்சியையும் புசிக்கவேண்டும்.
௨௩ ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் உண்ணாமல், அதைத் தண்ணீரைப்போன்று தரையிலே ஊற்றிவிட வேண்டும்.