௧௩
இறுதி எச்சரிக்கைகளும் வாழ்த்துக்களும்
௧ மூன்றாவது முறையாக நான் மீண்டும் வருவேன். “எல்லா குற்றச் சாட்டுகளும் இரண்டு மூன்று சாட்சிகளால்தான் உறுதிப்படவேண்டும்.” என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.
௨ நான் இரண்டாவது முறை உங்களோடு இருந்தபோது பாவம் செய்தவர்களை எச்சரித்திருந்தேன். இப்பொழுது உங்களிடம் இருந்து விலகி இருக்கிறேன். பாவம் செய்த மற்ற எல்லாரையும் எச்சரிக்கிறேன். நான் உங்களிடம் மீண்டும் வரும்போது உங்கள் பாவங்களுக்காக உங்களைத் தண்டிப்பேன்.
௩ கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா? (உங்களை நான் தண்டிக்கு போது, நீங்கள் அதைப் பார்ப்பீர்கள்.) அவர் உங்களிடத்தில் பலவீனராக இல்லை; வல்லவராய் இருக்கிறார்.
௪ சிலுவையில் அறையப்படும்போது கிறிஸ்து பலவீனமானவராயிருந்தார் என்பது உண்மை. ஆனால் தேவனுடைய வல்லமையால் இப்போது வாழ்கிறார். நாமும் கிறிஸ்துவுக்குள் பலவீனராக இருக்கிறோம் என்பது உண்மை. ஆனால் தேவனுடைய வல்லமையால் நாங்கள் உங்களுக்காக கிறிஸ்துவுக்குள் உயிரோடு இருப்போம்.
௫ நீங்கள் உங்களையே பாருங்கள். விசுவாசத்தில் வாழ்கிறீர்களா என உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரா, இல்லையா என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் சோதனையில் தோற்றுவிட்டால் கிறிஸ்து உங்களோடு இல்லை.
௬ நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் இல்லை என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
௭ நீங்கள் தவறாக எதுவும் செய்யக் கூடாது என்பதே தேவனிடம் எங்கள் பிரார்த்தனை. நாங்கள் சோதனையில் வெற்றி பெற்றோமா இல்லையா என்பது முக்கியமல்ல. நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் என மக்கள் நினைக்க நேர்ந்தாலும் கூட நீங்கள் நேர்மையானதைச் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம்.
௮ உண்மைக்கு எதிரானவற்றை எங்களால் செய்ய முடியாது. எங்களால் உண்மைக்குரியதை மட்டுமே செய்ய முடியும்.
௯ நீங்கள் பலமுள்ளவர்களாய் இருக்கும்வரை நாங்கள் பெலவீனராய் இருப்பதைக் குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியே. நீங்கள் மென்மேலும் பலமுள்ளவர்களாகும்படிக்கு பிரார்த்தனை செய்கிறோம்.
௧௦ நாங்கள் உங்களோடு இல்லாததால் இதை எழுதுகிறேன். எனவே உங்களிடம் வரும்போது என்னிடம் உள்ள ஆற்றலைப் பயன்படுத்தி உங்களைத் தண்டிக்கமாட்டேன். கர்த்தர் எனக்கு உங்களைப் பலப்படுத்தவே வல்லமை கொடுத்துள்ளார். உங்களை அழிக்க அல்ல.
௧௧ சகோதர, சகோதரிகளே, மகிழ்ச்சியோடு இருங்கள். முழுமை பெற முயலுங்கள். நான் செய்யச் சொன்னவற்றைச் செய்யுங்கள். ஒருவருக்கொருவர் மனதார ஒத்துப் போங்கள். சமாதானத்தோடு வாழுங்கள். அப்பொழுது அன்புக்கும் சமாதனத்திற்கும் உரிய தேவன் உங்களோடு இருப்பார்.
௧௨ ஒருவரையொருவர் பரிசுத்தமான முத்தத்தால் வாழ்த்துங்கள். தேவனுடைய பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துக்களைக் கூறுகிறார்கள்.
௧௩ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனின் அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.