௧௦
பேதுருவும் கொர்நேலியுவும்
௧ செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனிதன் இருந்தான். ரோமப் படையில் “இத்தாலிய” வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான்.
௨ கொர்நேலியு நல்ல மனிதன். அவனும் அவன் வீட்டில் வாழ்ந்த எல்லா மக்களும் உண்மையான தேவனை வணங்கினர். தனது பணத்தின் பெரும் பகுதியையும் அவன் ஏழை மக்களுக்குக் கொடுத்தான். கொர்நேலியு தேவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான்.
௩ ஒருநாள் மதியத்திற்குப்பின் மூன்று மணியளவில் கொர்நேலியு ஒரு காட்சியைக் கண்டான். அவன் தெளிவாக அதைக் கண்டான். அக்காட்சியில் தேவனிடமிருந்து ஒரு தூதன் அவனிடம் வந்து “கொர்நேலியுவே!” என்றான்.
௪ கொர்நேலியு தேவதூதனைக் கண்டு பயந்து, “ஆண்டவரே, என்ன வேண்டும்?” என்றான்.
தேவதூதன் கொர்நேலியுவிடம், “தேவன் உனது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்தார். நீ ஏழை மக்களுக்குக் கொடுக்கும் தருமங்களை அவர் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார்.
௫ யோப்பா நகரத்திற்குச் சில மனிதரை அனுப்பு, சீமோன் என்னும் மனிதனை அழைத்து வருவதற்கு அம்மனிதர்களை அனுப்பு. சீமோன், பேதுரு எனவும் அறியப்படுகிறான்.
௬ சீமோன் எனப்படும் தோல் தொழிலாளியோடு சீமோன் பேதுரு தங்கிக்கொண்டிருக்கிறான். கடற்கரையில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இப்போது இருக்கிறான்” என்றான்.
௭ கொர்நேலியுவோடு பேசிய தேவதூதன் அகன்றான். பின் கொர்நேலியு இரண்டு வேலைக்காரர்களையும், ஒரு வீரனையும் அழைத்தான். அந்த வீரன் ஒரு நல்ல மனிதன். கொர்நேலியுவின் நெருக்கமான உதவியாளர்களில் அவ்வீரனும் ஒருவன்.
௮ கொர்நேலியு அம்மூன்று மனிதருக்கும் எல்லாவற்றையும் விளக்கினான். பின் அவன் அவர்களை யோப்பாவிற்கு அனுப்பினான்.
௯ மறுநாள் இம்மனிதர்கள் யோப்பா அருகே வந்தனர். அப்போது பேதுரு மாடிக்குப் பிரார்த்தனை செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது மதியமாகிக்கொண்டிருந்தது.
௧௦ பேதுரு பசியடைந்தான். அவன் உண்ண வேண்டுமென நினைத்தான். ஆனால் பேதுரு உண்ணும்படியாக அவர்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு காட்சி தெரிந்தது.
௧௧ திறந்த வானத்தின் வழியாக ஏதோ ஒன்று இறங்கி வருவதை அவன் கண்டான். அது பூமிக்கு வரும் பெரிய விரிப்பைப் போன்றிருந்தது. அதனுடைய நான்கு மூலைகளிலிருந்து பூமிக்கு அது இறக்கப்பட்டது.
௧௨ ஒவ்வொரு வகை பிராணியும் அதில் இருந்தது. நடப்பன, பூமியில் ஊர்வன, வானில் பறக்கும் பறவைகள் போன்ற யாவும் அதில் இருந்தன.
௧௩ பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது.
௧௪ ஆனால் பேதுரு, “நான் அதை ஒருக்காலும் செய்யமாட்டேன். கர்த்தாவே! தூய்மையற்றதும், பரிசுத்தமற்றதுமான உணவை நான் ஒரு முறைகூடப் புசித்ததில்லை” என்றான்.
௧௫ ஆனால் குரல் மீண்டும் அவனுக்கு, “தேவன் இவற்றைச் சுத்தமாக உண்டாக்கியுள்ளார். அவற்றை தூய்மையற்றவை என்று கூறாதே!” என்றது.
௧௬ இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. பிறகு அப்பொருள் முழுவதும் வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
௧௭ இந்தக் காட்சியின் பொருள் என்ன என்று பேதுரு ஆச்சரியப்பட்டான். இதற்கிடையில் கொர்நேலியு அனுப்பிய மனிதர்கள் சீமோனின் வீட்டைக் கண்டுபிடித்தனர். அவர்கள் வாசலருகே நின்றுகொண்டிருந்தனர்.
௧௮ அவர்கள், “சீமோன் என்று அழைக்கப்படும் பேதுரு இங்கு வசிக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள்.
௧௯ பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, “கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
௨௦ எழுந்து கீழே போ. அம்மனிதர்களோடு கேள்விகள் எதுவும் கேட்காமல் போ. நான் அவர்களை உன்னிடம் அனுப்பியிருக்கிறேன்” என்றார்.
௨௧ எனவே பேதுரு இறங்கி அம்மனிதரிடம் சென்றான். அவன், “நீங்கள் தேடி வந்த மனிதன் நானே. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்றான்.
௨௨ அம்மனிதர்கள், “ஒரு தேவதூதன் உம்மைத் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கொர்நேலியுவுக்குக் கூறியுள்ளான். கொர்நேலியு ஒரு படை அதிகாரி. அவன் ஒரு நல்ல நேர்மையான மனிதன். அவன் தேவனை வணங்குகிறான். எல்லா யூத மக்களும் அவனை மதிக்கின்றனர். நீர் கூறும் காரியங்களைக் கொர்நேலியு கேட்கும்படியாக அவனது வீட்டிற்கு உம்மை அழைக்கும்படியாகக் கொர்நேலியுவுக்கு தேவதூதன் கூறியுள்ளான்” என்றனர்.
௨௩ பேதுரு அம்மனிதரை உள்ளே கூப்பிட்டு இரவில் அங்கே தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டான்.
மறுநாள் பேதுரு தயாராகி அம்மூன்று மனிதரோடும் சென்றான். யோப்பாவிலிருந்து சில சகோதரர்கள் பேதுருவோடு சென்றனர்.
௨௪ அடுத்த நாள் செசரியா நகரத்திற்குள் அவர்கள் வந்தனர். கொர்நேலியு அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவனது வீட்டில் உறவினரையும், நெருங்கிய நண்பர்களையும் ஏற்கெனவே வரவழைத்திருந்தான்.
௨௫ பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோதுகொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான்.
௨௬ ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு “எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே” என்றான்.
௨௭ பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான்.
௨௮ பேதுரு மக்களை நோக்கி, “யூதரல்லாத எந்த மனிதனோடும் சந்திப்பதோ தொடர்பு கொள்வதோ கூடாது என்பது எங்கள் யூதச் சட்டம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் நான் எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது என்று தேவன் எனக்குக் காட்டியுள்ளார்.
௨௯ அதனால்தான் அம்மனிதர் இங்கு வருமாறு என்னை அழைத்தபோது நான் மறுக்கவில்லை. எதற்காக என்னை இங்கு அழைத்தீர்கள் என்பதை இப்போது தயவு செய்து கூறுங்கள்” என்றான்.
௩௦ கொர்நேலியு, “நான்கு நாட்களுக்கு முன், என் வீட்டில் நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். அது இதே வேளை பிற்பகல் மூன்று மணியாயிருந்தது. திடீரென ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அவன் ஒளிமிக்க பிரகாசமான ஆடைகளை அணிந்துகொண்டிருந்தான்.
௩௧ அம்மனிதன், ‘கொர்நேலியுவே! தேவன் உன் பிரார்த்தனையைக் கேட்டார். நீ ஏழை மக்களுக்கு அளிக்கும் தருமங்களை தேவன் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார்.
௩௨ எனவே சில மனிதர்களை யோப்பா நகரத்திற்கு அனுப்பு. சீமோன் எனப்படும் பேதுருவை வரச்சொல். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயர் கொண்ட ஒருவனின் வீட்டில் பேதுரு தங்கியிருக்கிறான். அவன் வீடு கடற்கரையில் உள்ளது’ என்றான்.
௩௩ எனவே உடனேயே உமக்கு வரச்சொல்லியனுப்பினேன். நீர் இங்கு வந்தது நல்லது. இப்போது தேவனுக்கு முன்பாக நாங்கள் அனைவரும் கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படியாக உமக்குக் கட்டளையிட்டவற்றைக் கேட்க இங்கு கூடியிருக்கிறோம்” என்றான்.
கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு
௩௪ பேதுரு பேச ஆரம்பித்தான். “மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்.
௩௫ சரியானவற்றைச் செய்து அவரை வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார்.
௩௬ தேவன் யூத மக்களோடு பேசியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக சமாதானம் வந்தது என்ற நற்செய்தியை தேவன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இயேசு எல்லா மக்களின் கர்த்தராவார்.
௩௭ “யூதேயா முழுவதும் நிகழ்ந்த செயல்களை நீங்கள் அறிவீர்கள். யோவான் மக்களுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து உபதேசிக்கத் துவங்கியதற்குப் பின் இவை யாவும் கலிலேயாவில் ஆரம்பமாயின.
௩௮ நீங்கள் நாசரேத்தின் இயேசுவைக் குறித்து அறிவீர்கள். பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் அவருக்குக் கொடுத்து தேவன் அவரைக் கிறிஸ்துவாக்கினார். இயேசு எல்லா இடங்களுக்கும் சென்று மக்களுக்கு நல்லவற்றைச் செய்துகொண்டிருந்தார். பிசாசினால் முடக்கப்பட்ட மக்களை இயேசு குணப்படுத்தினார். தேவன் இயேசுவோடிருந்தார் என்பதை இது காட்டிற்று.
௩௯ “யூதேயாவிலும் எருசலேமிலும் இயேசு செய்த எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள் சாட்சிகள். ஆனால் இயேசு கொல்லப்பட்டார். மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையில் அவரை அறைந்தனர்.
௪௦ ஆனால் மரணத்திற்குப்பின் மூன்றாவது நாள் தேவன் இயேசுவை உயிரோடு எழுப்பினார். இயேசுவை மக்கள் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பை தேவன் கொடுத்தார்.
௪௧ ஆனால் எல்லா மக்களும் அவரைப் பார்க்கவில்லை. தேவனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்சிகள் மட்டும் அவரைப் பார்த்தார்கள். நாங்களே அந்த சாட்சிகள்! இயேசு மரித்து பின்னர் எழுந்த பிறகு அவரோடு உண்டோம், குடித்தோம்.
௪௨ “மக்களுக்குப் போதிக்கும்படியாக இயேசு எங்களுக்குக் கூறினார். உயிரோடிருக்கும் மக்களுக்கும் மரித்த மக்களுக்கும் நீதிபதியாக தேவன் நியமித்தவர் அவரே என்று மக்களுக்குச் சொல்லும்படி எங்களுக்குக் கூறினார்.
௪௩ இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான்.
யூதரல்லாதவருக்கும் பரிசுத்த ஆவி
௪௪ பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பரிசுத்த ஆவியானவர் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா மக்களின் மீதும் வந்திறங்கினார்.
௪௫ பேதுருவோடு வந்த யூத விசுவாசிகள் வியந்தனர். யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
௪௬ ஏனெனில் அவர்கள் வேற்று மொழிகளைப் பேசுவதையும், தேவனைத் துதிப்பதையும் யூத விசுவாசிகள் கேட்டனர். பின்பு பேதுரு
௪௭ “தண்ணீரின் மூலம் இம்மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை நாம் மறுக்க முடியாது. நாம் பெற்றதைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்!” என்றான்.
௪௮ கொர்நேலியுவும் அவன் உறவினரும் நண்பர்களும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பேதுரு கட்டளையிட்டான். பின் அம்மக்கள் பேதுருவைச் சில நாட்கள் தங்களோடு தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டனர்.